டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடருக்கென தனி மரியாதை எப்போதும் உண்டு. ஆஷஸ் தொடர் முதன்முதலில் எப்படி தொடங்கப்பட்டது… அதன் சுவாரஸ்ய பின்னணி தெரியுமா?
டெஸ்ட் கிரிக்கெட்
கிரிக்கெட்டின் தொடக்க காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே விளையாடப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், அந்த ஃபார்மேட்டில் இங்கிலாந்தின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் வரும் அணிகளோ அல்லது எந்த நாட்டுக்கு அந்த அணி சுற்றுப்பயணம் செய்தாலும் அங்கு வெற்றிக்கொடி நாட்டிவிட்டுத் திரும்புவது வழக்கம். போட்டி எத்தனை நாட்கள் நடக்கிறது என்ற அம்சம் மட்டுமே சுவாரஸ்யமாக எஞ்சி இருந்தது.
செய்தித்தாள் விளம்பரம்
இப்படி ஒரு சூழலில்தான் 1882-ல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல்முறையாக சொந்த மண்ணில் அந்த அணியை வீழ்த்தி மரண அடி கொடுத்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த காலகட்டத்தில் ஜாம்பவானாக விளங்கிய இங்கிலாந்தை, லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியதை அந்த அணி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த விவகாரம் கிரிக்கெட் அரங்கில் பெரிய அதிர்வலைகளையும் விவாதத்தையும் தொடங்கி வைத்தது. இங்கிலாந்து தோல்வி குறித்து விமர்சித்து ஆங்கில செய்தித் தாளான `The Sporting Times’ ஒன்று விநோதமான விளம்பரம் ஒன்றை பிரசுரித்திருந்தது.
இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமான தொனியில் வெளியிடப்பட்டிருந்த அந்த விளம்பரத்தில், ஓவல் மைதானத்தில் 1882 ஆகஸ்ட் 29-ல் உயிரிழந்த இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மிகுந்த மனவருத்தத்துடன் நண்பர்கள் இருப்பதாகவும் அந்த விளம்பர வாசகம் சொன்னது. அதேபோல், உடல் எரிக்கப்பட்டு சாம்பல் ஆஸ்திரேலியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் விளம்பரத்தில் சொல்லப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் இங்கிலாந்து கிரிக்கெட்டின் ஈகோவை சீண்டியது.
1882 ஓவல் டெஸ்ட்
1882-ல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட பில்லி மொர்டாக் (Billy Murdoch) தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியது. அது வரலாற்றில் நீங்கா இடம்பிடித்துவிட்டது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 63 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து, களமிறங்கிய ஏ.என். ஹார்ன்பி (A.N.Hornby) தலைமையிலான 101 ரன்கள் எடுத்தது. 38 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, தொடக்க வீரர் ஹியூக் மாஸியின் (Hugh Massie) அதிரடி அரைசதத்தின் (60 பந்துகளில் 55 ரன்கள்) உதவியோடு 122 ரன்கள் எடுத்தது. 85 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 77 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலியா பதிவு செய்த முதல் வெற்றி அதுவே. 1882 ஆகஸ்ட் 28, 29 என இரண்டு நாட்களில் முடிந்த இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 7 பேரின் விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் Fred Spofforth இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 14 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
ஆஷஸ் தொடர்
ஓவல் தோல்விக்குப் பிறகு கடுமையான விமர்சனங்களைச் சந்தித்த இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது, இங்கிலாந்து பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்த ஆஷஸ் (சாம்பல்) உண்மையானது. ஸ்டம்புகளின் மேல் வைக்கப்படும் பைல்ஸ்கள் இரண்டை எரித்து அதன் சாம்பல், சிறிய கோப்பை வடிவிலான கலசத்தில் அடைக்கப்பட்டது. அந்த ஆஷஸைத் திரும்பக் கொண்டு வருவேன் என்ற சபதத்துடன் இங்கிலாந்து கேப்டன் Ivo Bligh ஆஸ்திரேலிய மண்ணில் கால் பதித்தார். அந்தத் தொடரில் 3 போட்டிகளில் இரண்டில் வென்று இங்கிலாந்து அணி சபதத்தில் வென்றது. தொடரை வென்ற இங்கிலாந்து அணிக்கு சாம்பல் அடங்கிய ஆஷஸ் கலசத்தை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Florence Morphy உள்ளிட்ட பெண்கள் குழு பரிசாக அளித்தது. இந்த சம்பவம் நடந்து ஓராண்டுக்குள் Florence Morphy-யை இங்கிலாந்து கேப்டன் Ivo Bligh மணந்து கொண்டார். 1927-ல் Ivo Bligh மறைவுக்குப் பின்னர் அந்தக் கோப்பை லண்டன் MCC அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. 1882-83களில் தொடங்கிய இந்தத் தொடர் கிரிக்கெட் வரலாற்றில் நீண்ட பகையாகக் கருதப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆஷஸ் தொடர் பொதுவாக 5 போட்டிகள் கொண்டதாக இருக்கும். இரண்டு நாடுகளிலும் மாறி மாறி நடக்கும் ஆஷஸ் தொடர் இதுவரை 71 முறை நடத்தப்பட்டிருக்கிறது. இதில், ஆஸ்திரேலிய அணி 33 முறையும், இங்கிலாந்து அணி 32 முறையும் வெற்றிபெற்றிருக்கின்றன. ஆறு தொடர்கள் டிராவில் முடிந்திருக்கின்றன. ஆஸ்திரேலியாவின் கப்பா மைதானத்தில் தொடங்கிய 72-வது ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றிருக்கிறது.