2007-ம் ஆண்டு யஷ் துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகும்போது, “நான் ஒரு பெரிய ஸ்டார் ஆவேன்” என்றார். மொத்த கன்னட உலகமும் நக்கலாக சிரித்தது. அதைச் சொல்லி 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று அதே கன்னட உலகம் கைதட்டி ரசிக்கிறது. இவரின் பெயருக்காக திரையரங்கில் எழும் விசில் சத்தம் குறைந்தது 5 நிமிடமாவது திரையரங்கை அதிரவைக்கும். ‘கே.ஜி.எஃப்’ படத்துக்காக ஹெலிகாப்டரில் இவருக்கு மலர் அபிஷேகம் செய்ததே அதற்குச் சான்று.
300 ரூபாயுடன் வீட்டை விட்டு ஓட்டம்!
சிறிய வயதில் பள்ளி மேடை நாடகங்களில் நடித்த அனுபவத்தால் 10-ம் வகுப்பு படிக்கும்போதே நடிப்புக் கல்லூரியில் சேர ஆர்வமாக இருந்தார். அதை அப்பாவிடம் சொல்ல ‘பள்ளிப் படிப்பை முடி. அப்புறம் பார்ப்போம்’ என்றார் அவர். வேறு வழியில்லாமல் 12-ம் வகுப்பு வரைக்கும் படித்தார். ‘அப்பா நீங்க சொன்ன மாதிரியே பள்ளிக்கூடப் படிப்பு முடிச்சிட்டேன், எப்போ நடிப்புக் கல்லூரிக்குப் போகலாம்’ என யஷ் கேட்க, அதை தந்தை மறுக்க, பாக்கெட்டில் 300 ரூபாய் எடுத்துக் கொண்டு பெங்களூருக்கு ஓடி வந்துவிட்டார்.
2 நாளில் முடிந்துபோன உதவி இயக்குநர் பயணம்!
முதல் முதலாக சினிமா உதவி இயக்குநராகப் பயணத்தைத் தொடங்கினார், யஷ். அந்தப் படம் இரண்டே நாளில் டிராப் ஆக வழி தெரியாமல் இருந்தவரை, அந்தப் படத்தின் அசோசியேட் டைரக்டர் மோகன், தன் வீட்டில் தங்க வைத்தார். அவரது வீடு சிறியதாக இருந்ததால் அவருக்கு இடைஞ்சலாக இருக்க நினைக்காமல் ஊருக்குப் புறப்பட பெங்களூரு பஸ் ஸ்டாண்டுக்கு வந்தார், யஷ். மனம் ஊருக்குப் போக இடம் கொடுக்கவில்லை. மறுபடியும் நண்பர் வீட்டுக்கே போய் தங்கி, மற்ற நண்பர்கள் மூலமாக டிராமா கம்பெனியில் சேர்ந்தார்.
டிராமா கம்பெனி டு சீரியல் வாய்ப்பு!
டிராமா கம்பெனியில் நடிகர்களுக்கான வசனம் கொடுப்பது, செட் வேலைகள் ஏற்பாடு எனப் பல வேலைகளில் ஈடுபட்டார். அப்போது நடிகர்களுக்கு வசனம் சொல்லிக் கொடுப்பதால் சில நேரங்களில் நடிகர்கள் வராத ரோல்களில் யஷ் நடித்தார். இதனால் எமெர்ஜென்சி நடிகர் என்ற பெயரையும் பெற்றார். நாடக கம்பெனி நடிப்பு மூலமாக சீரியல் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் ஒரே நேரத்தில் 5 சீரியல்கள் கையில் கிடைத்தது. அந்த நேரத்தில் வேறு யாராவது இருந்தால் ஏதாவது ஒரு சீரியலில் மட்டுமே நடித்திருப்பார். ஆனால் 5 சீரியல்களையும் யஷ் ஒத்துக் கொண்டு நடித்தார். டிராமா கம்பெனியின் அனுபவம் கைகொடுக்க, நடிப்பு தாகத்தால் நடித்துத் தீர்த்தார். ஆச்சர்யமான விஷயம் ஐந்து சீரியல்களும் ஹிட்.
முதல் படத்திலேயே சாதனை!
- சீரியல் நடிப்பில் கலக்கினாலும் ஹீரோ ஆசை விடாமல் யஷ்-ஐ துரத்தியது. சீரியலில் இருந்து சினிமாவுக்குக்கு வந்தவர்கள் பட்டியலில் 2007-ம் ஆண்டு இணைந்தார் யஷ். 2007-ம் வருடம் முதல்படத்தில் துணை நடிகராக அறிமுகமானார். எதிர்பார்த்தது வீண்போகவில்லை. படம் வெற்றிபெற, இவரது நடிப்பும் பேசப்பட்டது. அடுத்த படத்தில் சோலோ ஹீரோவாக களமிறங்கினார். அந்த படத்தின் பெயர் ‘மோகின மனசு’ (Moggina Manasu). 2008-ம் வருடம் வெளியான அந்தப்படம் 100 நாட்கள் தாண்டி ஓடி சூப்பர் ஹிட்டானது. அப்போதுதான் கன்னட சினிமா நடிகர்களின் பார்வை இவர் மீது விழுந்தது.
அவசர படமும்.. அட்டர் பிளாப்பும்!
நாயகனாக முதல்படம் 100 நாட்களைத் தாண்டி ஓடியதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. அப்போது சரியான கதையை நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் தேர்வு செய்தார், யஷ். தேர்வு செய்த உடனே ஷூட்டிங் புறப்பட்டார். அந்த வருடமே ‘ராக்கி’ ரிலீஸ் ஆனது. ஆனால், படம் பாக்ஸ் ஆபீசில் அட்டர் பிளாப். இவர் அவ்வளவுதான் என எல்லோருமே பேச, கதை கேட்க இன்னும் அதிக கவனம் செலுத்துகிறார். அடுத்த வருடம் ‘கல்லற சந்தே’, ‘கோகுலா’ என இரு படங்கள் வெளியாகி, சுமாரான வெற்றியைத் தேடித்தந்தது. 2010-ம் ஆண்டு தேர்வு செய்து நடித்த படம் ‘மோடலசாலா’. படம் ஹிட். வருடத்துக்கு இரண்டு படங்கள் கொடுப்பதற்காக மீண்டும் முயற்சி செய்கிறார். 2011-ம் ஆண்டு ‘ராஜதானி’, ‘கிரட்டகா’ என இரண்டு படங்கள் வெளியாகின்றன. ‘ராஜதானி’ சுமாராக ஒட, ‘கிரட்டகா’ பெரிய வெற்றியைப் பெற்றது. கிரட்டகா நம்மூர் ‘களவானி’ படத்தின் ரீ-மேக்!
கேரியருக்கு அடித்தளமிட்ட தமிழ் படம்!
*2012-ல் வெளியான இவரது 3 படங்களில் 2 சுமாராக ஓட, ‘ராஜாஹூளி’ (நம்ம சுந்தர பாண்டியன் ரீமேக்) படத்தின் மூலம் தனக்கான ரசிகர்களைக் கட்டமைத்துக் கொண்டார். ‘ராஜாஹூளி’ சூப்பர் டூப்பர் ஹிட். பட்டிதொட்டியெங்கும் யஷ்-ஐ கொண்டுபோய்ச் சேர்த்தது. கர்நாடக மக்களிடையே யஷ்க்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த படம் ராஜாஹூளி. இவரது சினிமா பயணத்தில் ‘ராஜாஹூளி’, ‘கஜகேசரி’, ‘டிராமா’, ‘ஹூக்லி’, ‘ராமாச்சாரி’, ‘மாஸ்டர் பீஸ்’, ‘சாண்டு ஸ்ட்ரெயிட் பார்வேர்டு’, ‘கே.ஜி.எஃப்’ ஆகிய படங்கள் மிக முக்கியமானவை. இன்று கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார், இந்த ராக்கி பாய்.
வித்தியாசமான முயற்சி!
வித்தியாசமான கெட்டப், உடல்மொழி, வசனம், ஆக்ஷன், காமெடி, டான்ஸ் என ஆல் ஏரியாவிலும் யஷ் கில்லி. இவர் தனது படத்துக்காக இரண்டு பாடல்களையும் பாடியிருக்கிறார். இவரது மாஸ்டர் பீஸ் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அண்ணங்யே’ பாடல்தான் கன்னட சினிமாவில் அதிகமான டான்சர்களை உபயோகித்து எடுக்கப்பட்ட பாடலாக இன்று வரை இருக்கிறது.
யஷ் சாதனைகள்
இதுவரை மொத்தமாக 17 படங்கள் நடித்திருக்கிறார். அதில் 1 படம் அட்டர் பிளாப், 4 படங்கள் சுமார், 6 படங்கள் ஹிட், 4 படங்கள் சூப்பர் ஹிட், 2 பிளாக்பஸ்டர்கள் எனத் தனது சினிமா பயணத்தை நிலை நிறுத்தியிருக்கிறார். இதுவரைக்கும் கன்னட சினிமா வரலாற்றில் உலக அளவில் 200 கோடியை வசூல் செய்த சினிமா, இவர் நடித்த கே.ஜி.எஃப் மட்டும்தான். கன்னட சினிமாவில் குறைந்த ப்ளாப் கொடுத்த நடிகரும் இவர்தான். படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் ஓப்பனிங் கிங் வரிசையில் இவருக்கு முக்கியமான பங்கு உண்டு. ஆம், இன்றைய தேதியில் கன்னட சில்வர் ஸ்கிரீனின் அசைக்க முடியாத கிங் ஆப் ஓப்பனிங் யஷ்தான்.
நடிகர் தாண்டிய பொதுநலன்!
கர்நாடகா மாநிலம், கோப்பால் மாவட்டம், யெல்பர்கா தலுகாவில் உள்ள தள்ளூர் கிராமத்தில் 20 கிராமங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த ஏரி வற்றிவிட்டது. அதைத் தூர்வாரவும் அகலப்படுத்தவும், இன்னும் சில நீர்நிலைகளைத் தூர்வாரவும் 4 கோடி நிதி உதவி அளித்து, தானே முன்னின்று பணிகளைச் செய்தார். அதன் மூலம் அந்த ஏரி முழுக்க தண்ணீரால் நிரம்பியது. இதனால் கிட்டத்தட்ட 20 கிராம விவசாயிகளும் பலனடைந்தனர். இதுபோல யஷோ மார்கா அமைப்பு மூலம் பல நீர்நிலைகளையும் தூர்வாரிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் யஷ்.
Also Read: ரத்தம் சிந்தி வேலை பார்த்து போராடிய மக்களின் கதை… Real KGF Story!
74b9c7