Isaipriya - Raji

LTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11 வித்தியாசங்கள்!

சமந்தா, மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்திருக்கும் அமேசான் பிரைம் வீடியோவின் Familyman – 2 வெப் சீரிஸ் ஈழத்துப் போராளிகளை அவமதிப்பதாக சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

அமேசான் பிரைம் ஓடிடியில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான வெப் சீரிஸ் ஃபேமிலிமேன். இந்திய உளவு அமைப்பில் பணியாற்றும் ஸ்ரீகாந்த் திவாரி (மனோஜ் பாஜ்பாய்), நாட்டுக்கு எதிரான தீவிரவாதிகளைக் களையெடுப்பதோடு குடும்ப வாழ்க்கையையும் எப்படி பேலன்ஸ் செய்கிறார் என்ற பிளாட்டில் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே ஆகியோர் சிறப்பாகத் திரைக்கதை அமைத்திருந்தார். முதல் சீசனின் வெற்றி இரண்டாவது சீசன் மீதான எதிர்பார்ப்புகளை எகிறச் செய்தது.

Family man

அதுவும், இரண்டாவது சீசனில் நெகட்டிவ் ரோலில் சமந்தா நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதும், அந்த எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது. இந்தசூழலில் கடந்த மே 19-ம் தேதி வெளியான ஃபேமிலிமேன் – 2 சீரிஸின் டிரெய்லர் சர்ச்சைக்குத் தூபம் போட்டது. டிரெய்லரில் சமந்தா அணிந்திருந்த யூனிஃபார்ம், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ-யுடன் போராளிகள் கூட்டு என்று கூறும் டயலாக் போன்றவை ஈழத்து ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. போராளிகளை மோசமாக சித்தரிக்கும் இந்த சீரிஸை அரசு தடை செய்ய வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதினார். ஃபேமிலிமேன் – 2 வெப் சீரிஸுக்கு எதிராகக் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த வெப்சீரிஸைத் தடை செய்ய வேண்டும் என தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்.

ஆனால், `தமிழ் மக்கள் மீதும் தமிழ் கலாசாரம் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். கிரியேட்டிவ் டீம் உள்பட எங்கள் குழுவின் முக்கியமான உறுப்பினர்கள் பலர் தமிழர்கள். அதனால், அவர்களுக்கு எதிராக எந்தவொரு கருத்தும் இல்லை. இதற்காகப் பெரும் உழைப்பைக் கொட்டியிருக்கிறோம். கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள். நிச்சயம் நீங்கள் எங்களைப் பாராட்டுவீர்கள்’ என்ற இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே ஆகியோர் விளக்கம் கொடுத்திருந்தனர். சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, கடந்த ஜூன் 4-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஃபேமிலிமேன் – 2 வெப்சீரிஸ் வெளியாகியிருக்கிறது. இதில், ஈழப் போராளிகள் வரலாறு திரித்துக் கூறப்பட்டிருக்கிறது என்று மீண்டும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

இசைப்பிரியா

எல்.டி.டி.இ அமைப்பில் இருந்த போராளி இசைப்பிரியா, கிளிநொச்சியில் இருந்து செயல்பட்ட அந்த அமைப்பின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான `ஒளிவீச்சு’ சேனலில் நியூஸ் ஆங்கராக இருந்தவர். பத்திரிகையாளரான இவர், நடனக் கலையிலும் பாடுவதிலும் தேர்ந்தவர். ஷோபனா தர்மராஜா என்ற இயற்பெயருடைய இசைப்பிரியாவை பிரபாகரனின் மகள் துவாரகா என தவறுவதலாகநினைத்து இலங்கை ராணுவம் சிறைபிடித்ததும் ஐ.நா விசாரணையில் தெரியவந்தது.

Isaipriya

அந்த அமைப்பில் மிகவும் பிரபலமாக இருந்த பெண் போராளிகளில் முக்கியமானவர் இசைப்பிரியா. எல்.டி.டி.இ என்றாலே இசைப்பிரியாவின் பெயர் நினைவுக்கு வந்துபோகும் அளவுக்கு உலக அளவில் பரிச்சயம் மிக்கவர். இதனாலேயே, ஃபேமிலிமேன் – 2 வெப்சீரிஸில் பெண் போராளியாக சமந்தா நடித்திருக்கும் கேரக்டர் இவரை நினைவுபடுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை. நிஜத்தில் பெண் போராளியாக இசைப்பிரியா எப்படியிருந்தார் என்பதையும், சமந்தா நடித்திருக்கும் பெண் போராளியான ராஜி கேரக்டர் எப்படியிருக்கிறது என்பதை ஒப்பீட்டுப் பார்த்தால், பல வித்தியாசங்களை நாம் பார்க்க முடியும். நிஜத்தில் சாத்தியமில்லாத பல விஷயங்கள் வெப்சீரிஸ் படைப்பாளிகள் படைப்பு சுதந்திரத்தால் சாத்தியமாகியிருக்கின்றன.

இயல்பு

இசைப்பிரியா எல்.டி.டி.இ-யின் ஒளிவீச்சு சேனலில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய ஜர்னலிஸ்ட். ராஜி கேரக்டரில் இந்த ஆங்கிள் இருக்காது. போராளிக் குழுவின் விமானப்படையில் பணியாற்றியதாக ராஜி கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கும். இசைப்பிரியாவை இலங்கை ராணுவத்தால் பாலியல் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதாக ஆவணங்கள் இருக்கின்றன. தன் ஊடகப் பணி மூலம், புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டவர். ஆனால், ராஜி கேரக்டர் விமான பைலட் ஆக இருந்தாலும், ஸ்பின்னிங் மில் மேனேஜர், சுங்கச் சாவடி அதிகாரி ஆகியோரிடம் ஆதாயம் பெறுவதற்காக படுக்கையைப் பகிர்ந்து கொள்வதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும்.

Samantha

துப்பாக்கி

எந்தவொரு இடத்திலும் இசைப்பிரியா துப்பாக்கியோடு பயணித்தது கிடையாது. உடல்நலக் குறைபாடு காரணமாக எல்.டி.டி.இ அமைப்பின் ஊடகப்பிரிவில் இணைந்து பயணித்த இசைப்பிரியாவின் கையில் கேமரா, நோட்பேட் என இவை இருக்கும். ஆனால், சமந்தா கேரக்டர் துப்பாக்கிகளை அநாயசமாகக் கையாளுவதாகக் காட்டப்பட்டிருக்கும். குறிப்பாக, ஜேகே கேரக்டர் விமானப்படை தளத்தில் இருந்து தப்புவதற்காக காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதிக்க முயலுகையில், தூரத்தில் இருந்து அவரைக் குறிபார்த்து ராஜி கேரக்டர் சுடுவதாகக் காட்சி இடம்பெற்றிருக்கும்.

கொலை

போராளிகள் பொதுவாகவே துணிச்சலானவர்கள்தான். இருந்தாலும் பேருந்தில் நடப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் போல் எதையும் அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். அதேபோல், பேருந்தில் சில்மிஷம் செய்த நபரைக் கொலை செய்யும் அளவுக்கு அவர்கள் போகவும் மாட்டார்கள். போராளிகளைப் பொறுத்தவரை அதிரடியாகக் கொலை பண்றதும், தப்பிச்சுப் போறதும்தான் அவங்களோட ஸ்டைல். வீட்டில் கொலை செய்து உடலைத் துண்டு துண்டாக வெட்டி டிஸ்போஸ் செய்துகொண்டிருக்க மாட்டார்கள்.

Isaipriya

குடும்பம்

இசைப்பிரியாவுக்கும் போராளிக் குழுவைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடைபெற்று, அகல் என்ற பெண் குழந்தையும் இருந்தது. 2009ம் ஆண்டு மார்ச் 15-ல் இலங்கை விமானப்படை தாக்குதலில் குழந்தை அகல் கொல்லப்பட்டதாகப் பதிவுகள் இருக்கின்றன. ராஜி கேரக்டருக்குத் திருமணம் நடந்ததாக வெப்சீரிஸில் காட்டப்படவில்லை.

சண்டைபோடும் திறன்

எதிராளிகளை வெறும் கையாலேயே கொல்லும் அளவுக்கு சண்டை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தவராக ராஜி கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இசைப்பிரியா அதுபோன்று சண்டையிடும் பயிற்சி பெற்றதாகப் பதிவில்லை.

முள்ளிவாய்க்கால்

இறுதிப்போரின்போது முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவமனையில் 2009 மே 8 வரையில் இசைப்பிரியா வாலண்டியராகப் பணியாற்றினார் என்கின்றன பதிவுகள். ஆனால், ராஜி கேரக்டர் அதுபோன்று எந்தவொரு பணியையும் செய்ததாகக் கூறப்படவில்லை.

Samantha

தாய் – தந்தை

இசைப்பிரியா இறந்தது 2010ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி சேனல் 4 வீடியோ வெளியான பின்னரே அவரது தாய்க்குத் தெரியவந்திருக்கிறது. ராஜி கேரக்டர், தனது தாய் மனநலன் பாதிக்கப்பட்டு இறந்துபோனதைச் சொல்வது போல் ஒரு காட்சி ஃபேமிலிமேன் 2 வெப்சீரிஸில் இடம்பெற்றிருக்கும். அதேபோல், இலங்கை ராணுவத்தின் வெடிகுண்டு வீச்சில் தந்தை இறந்ததாக ராஜி கேரக்டர் குறிப்பிடும் சீன் ஒன்றும் உண்டு.

கல்வி

நெடுந்தீவுப் பகுதியில் 1982-ல் பிறந்த இசைப்பிரியா குடும்பம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற இலங்கை ராணுவம் நடத்திய Operation Riviresa-க்குப் பிறகு வன்னி பகுதிக்கு இடம்பெயர்ந்தது. வெம்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்துவந்த இசைப்பிரியா, வன்னிக்கு வந்தபிறகும் படிப்பைத் தொடர்ந்தார். ராஜி கேரக்டர், தந்தை மரணத்துக்குப் பிறகு படிப்பைத் தொடர முடியாதது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அத்துமீறல்

இசைப்பிரியாவை சிறைபிடித்த இலங்கை ராணுவம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. 2010ம் ஆண்டு வெளியான சேனல் 4 வீடியோக்கள், இசைப்பிரியாவின் சடலத்தின் புகைப்படம் போன்றவை அதை உறுதிப்படுத்தின. இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட இது முக்கிய சாட்சியாக விளங்கியது. ராஜி விஷயத்தில் தந்தை இறந்தபிறகு இலங்கை ராணுவத்தால் அவர் சிறைபிடிக்கப்பட்டதாக கேரக்டரின் பின்புலம் இருக்கும். அந்நாட்டு வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ராஜியை போராளிக் குழுக்கள் மீட்பதாகவும், அதன்பின்னர் அவர்களோடு இணைந்து போர் பயிற்சி பெற்றதாகவும் வெப் சீரிஸில் சொல்லப்படும்.

Isaipriya

இறப்பு

இசைப்பிரியா இலங்கை ராணுவத்தால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டதாக ஆவணங்கள் இருக்கின்றன. ஆனால், ராஜி கேரக்டர் வெடிகுண்டு தாக்குதலுக்காக விமானத்தை இயக்க முயற்சிக்கும்போது நடுவானில் விமானத்தில் இருந்த வெடிகுண்டு வெடித்து இறப்பதாகக் காட்டப்பட்டிருக்கும். ராஜி கேரக்டர் கற்பனையானதுதான் என்று சமந்தா கூறியிருக்கிறார்.

Also Read – தமிழ்நாட்டைப் பத்தி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்… செக் பண்ணலாமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top