சென்னை மழை

Chennai Rains: மழை, வெள்ளத்தின் போது பாதுகாப்பாக இருக்க என்ன செய்யலாம்… செய்யக் கூடாதது!

Chennai Rains: தலைநகர் சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. மீட்பு நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டிருக்கிறது. மழை, வெள்ளத்தின் போது பாதுகாப்பாக இருக்க என்ன செய்யலாம்… எவையெல்லாம் செய்யக் கூடாது.. பார்க்கலாம் வாங்க.

Chennai Rains

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. கடந்த நவம்பர் 6-ம் தேதி இரவில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக சென்னையில் குறுகிய நேரத்தில் பெய்த கனமழையால், நகரின் பல பகுதிகளில் வெள்ளம்போல் நீர் தேங்கியது. வெள்ளம் சூழ்ந்திருப்பதால் பல்வேறு சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது. பேரிடர் மேலாண்மைத் துறையும் மாநகராட்சியும் தேங்கியிருக்கும் நீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன. வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

மேட்லி சுரங்கப்பாதை
மேட்லி சுரங்கப்பாதை

இந்தநிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதால் நவம்பர் 10-12 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.

மழைகாலங்களில் பாதுகாப்பாக இருக்க என்ன செய்யலாம்?

 • மழை, வெள்ளம் குறித்த செய்திகளில் அப்டேட்டாக இருங்கள்
 • வசிப்பிடத்தை முடிந்தவரை ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
 • மழைக்கால நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க கிருமி நாசினி கொண்டு சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்துங்கள்.
 • குழாய் நீரை குடிநீராகவோ அல்லது சமையலுக்கோ பயன்படுத்தினால், சுத்திகரித்துப் பயன்படுத்தவும்.
 • மொபைல் போன், பவர் பேங்க் போன்றவற்றை முழுமையாக சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்
 • முதலுதவிப் பெட்டியைத் தயாராக வைத்துக் கொள்ளவும்
 • மழையால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் பேட்டரியால் இயங்கும் டார்ச்சுகள், மெழுகுவத்திகள் போன்றவை உதவும்.
 • சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களைப் பத்திரப்படுத்துங்கள்.
 • மழைக்காலங்களில் கொசுக்களின் தொல்லை அதிகம் இருக்கும் என்பதால், கொசுவலை, கொசுக்கடியில் இருந்து பாதுகாப்பாக இருக்கப் பயன்படும் மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ளுங்கள்.
 • வெள்ள பாதிப்புகள் குறித்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் கலந்துரையாடுங்கள்
 • உங்கள் பகுதியில் வெள்ள பாதிப்பு அதிகமாக இருந்து, வெளியேற அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டால், தாமதிக்காமல் உடனே புறப்படுங்கள். வெள்ள பாதிப்புகள் இல்லாத பகுதியில் வசிக்கும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கலாம். குறைந்தது ஒரு வார காலத்துக்குத் தேவையான உடைகளோடு புறப்படுவது நலம்.
சென்னை மழை
சென்னை மழை

செய்யக்கூடாதது என்ன?

 • மழை நீர் தேங்கியிருக்கும் இடங்கள் வழியாகப் பயணிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
 • அத்தியாவசியத் தேவைகள் தவிர வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்.
 • வெள்ளத்தின் வழியாக நடந்து செல்லாதீர்கள். வெள்ள நீர் வடிந்துவிட்டது என்ற தகவல் கிடைத்தபிறகு வெளியே வாருங்கள்.
 • கால்வாய், மழைநீர் வடிகால்கள் இருக்கும் இடங்களுக்கு அருகே செல்ல வேண்டாம்.
 • மின் கம்பங்கள், மின் ஒயர் துண்டிக்கப்பட்டிருந்தால் அந்தப் பகுதியைத் தவிர்த்துவிடுங்கள்.
 • தேங்கியிருக்கும் மழை நீரில் குளிப்பதோ, நீச்சலடிப்பதோ கூடாது.
 • மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கும்பட்சத்தில், உங்கள் பாதுகாப்பை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள்.

Also Read – ஜெய்பீம்: 1993-ல் முதனை கிராமத்தில் என்ன நடந்தது… கடலூர் மாவட்டத்தை உலுக்கிய ராஜாக்கண்ணு வழக்கு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top