பள்ளிக்கூடத்துக்கு போற ஒரு மாணவனுக்கு சினிமா வெறி கொஞ்சம் கொஞ்சமா மனசுல ஏற ஆரம்பிக்குது. அதுக்காக பக்கத்துல இருந்த தியேட்டர்கள்ல சினிமாக்களை பார்க்கிறார். ஒருகட்டத்துல பள்ளிக்கு கட்டைய போட்டுட்டு சினிமாவுக்கு போக ஆரம்பிக்க, அப்பாவுக்கு தெரியவர, வீட்ல அடி பின்னி எடுக்குறாங்க. கைல செலவுக்கு காசு கொடுக்குறதையும் நிப்பாட்டிட்டாங்க. அதனால அடுத்ததா தியேட்டருக்கு பின்னால புகுந்து போய் சினிமா பார்க்க ஆரம்பிக்கிறார். தியேட்டர்லயும் கையும் களவுமா சிக்க அடி பின்னி எடுக்குறாங்க. மாப்பிள்ளைக்கு அம்புட்டு வெறிங்குற மாதிரி தியேட்டர்க்கு பக்கத்துல இருந்த பாறையில இரவு முழுக்க படுத்துட்டு ஆடியோ மட்டும் கேட்டு தன்னோட சினிமா தாகத்தை தணிச்சிக்குறார். ஆனாலும் ஏதோ ஒண்ணு மனசுக்குள்ள சினிமாவை நோக்கி தள்ள, காலையில 5 மணிக்கு, அப்பா பாக்கெட்ல பணத்தை எடுத்துகிட்டு வீட்டை விட்டு சென்னைக்கு கிளம்புனார், அந்த சின்ன பையன். அந்த பையன் பேர் சமுத்திரகனி. அவரோட சினிமா பயணத்தைப் பத்தித்தான் இந்த வீடியோவுல பார்க்க போறோம்.
கண்டக்டர் சென்னையில எங்க இறங்கணும்னு கேட்க, நீங்க பஸ்ஸ எங்கெல்லாம் நிப்பாட்டுவீங்க அப்படினு சமுத்திரகனி கேட்கிறார். கண்டக்டர் ஒவ்வொரு இடமா சொல்ல, எல்.ஐ.சினு கேட்டதுமே ‘அங்கயே இறங்கிக்குறேன்’னு சொன்னார், கனி. இறங்கி நின்னு பார்த்தா கண்முன்னாடி எல்.ஐ.சி கட்டிடம் நிற்குது. எல்லா இடங்களுக்கும் அலைஞ்சும் வேலைக்கு ஆகலை. இப்போ கைல காசு குறைய ஆரம்பிக்குது. அப்போதான் கொஞ்சம் கொஞ்சமா கனிக்கு பயம் வர ஆரம்பிச்சது. மறுபடியும் பஸ்ஏறி ஊருக்கே வர்றாரு. இந்தமுறை அடிக்க வேண்டிய அப்பா அடிக்கலை. படிக்கிறதை முடிச்சிட்டு எங்க வேணாலும் போன்னு சொன்னார். அதுல இருந்து சரியா அவங்க அப்பா இறந்துபோக அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்றார் சமுத்திரகனி. பின்னர் 1992-ம் வருஷம் டிகிரி முடிச்சிட்டு, முழுநேரமாக சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். பல ஆபீஸ்கள் ஏறி இறங்கி ஒருவழியா இயக்குநர் சுந்தர் கே.விஜயன்கிட்ட அசிஸ்டெண்ட்டா சேர்றார். அந்த நேரத்துல சன் டிவியில பந்தயம் சீரியல் ஆரம்பிச்சது. அதுக்கான வேலைகளில் ஈடுபட்டார், சமுத்திரகனி.
கல்யாண கேட்டரிங் வேலை!
ஆரம்பக்கட்டத்துல சினிமாவுல கிடைச்ச வேலையைச் செய்தாலும், கஷ்டத்தை சமாளிக்க கல்யாண கேட்டரிங் வேலைக்கு போயிடுவார். பிராமணர்கள் திருமணத்துக்கு வேலை செய்யும்போது, பூணூல் போட்டுக்கிட்டு முதல் ஆளா எல்லா இலைகளுக்கும் ஊறுகாய் வைப்பார். மாதம் இரண்டு கல்யாண கேட்டரிங் வேலைகளுக்குப் போய் வீட்டு வாடகையை அடைச்சிருக்கார். சென்னைக்கு வந்தது முதலே ஏதாவது செரஞ்சிட்டுத்தான் போகணும்னு என முடிவெடுத்தார். அதனால ஒன்றரை வருஷமா ஊருக்கு கடிதமோ, போனோ எந்தவிதமான தொடர்பும் வச்சுக்கிட்டதில்லை. சொல்லப்போனா நிலையான இடத்தை பிடிக்க வேலை தேடிட்டே ஊரை மறந்துட்டார்னுதான் சொல்லணும். ஊர்லயும் சொந்தக்காரங்க எல்லாம் சேர்ந்து சமுத்திரகனி இல்லைனே முடிவு பண்ணிட்டாங்க. சமுத்திரகனியோட அம்மாவுக்கும் ‘போன இடத்துல அவனுக்கு ஏதோ ஆயிடுச்சு, முடிஞ்சுபோச்சு’ னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. இந்த நேரத்துல மாதம் ஒரு 500 ரூபாய் அதிகமா கிடைக்க ஊருக்கு கிளம்புறார். ஊருக்கு வந்த அவரைப் பார்த்த அம்மா பார்த்து ஆனந்தத்துல கண்ணீரோட நலம் விசாரிக்கிறார். ‘ஏப்பா என்னயா பண்ணிட்டிருக்க, ஊர்ல எல்லோரும் செத்துட்டான்னு சொன்னாங்க’னு சொல்லி வருத்தப்பட, அன்னைக்கு காலைல நியூஸ்பேப்பர்ல சட்டக்கல்லூரி சேர்க்கை செய்தி பார்த்துட்டு அப்ளை பண்ணி, செலக்ட் ஆகி சென்னை சட்டக்கல்லூரியில வக்கீலுக்கு படிக்க வந்தார். இடையில சீரியல் வாய்ப்புகள்ல சுந்தர் கே.விஜயன் கூட வேலை பார்க்குறார். அப்போது சன் டிவில ஒளிபரப்பான ஜன்னல் சீரியல்ல வாய்ப்பு கிடைக்க, சுந்தர் கே.விஜயன்கூட போறாரு சமுத்திரகனி. அந்த சீரியல் ஆரம்பக் கட்டத்துல இயக்கினது பாலச்சந்தர், அதனால அவர்கூட கனிக்கு நெருக்கம் ஆரம்பிச்சது. இதனால ஒருகட்டத்துல ரெண்டுபேர்கூடவும் ஒரே நேரத்துல ஷூட்டிங்ல வேலை பார்க்கிறார். அந்த சமயத்துல ஊஞ்சல்னு ஒரு சீரியல்ல எஸ்பி சரண்கூட வேலை பார்க்குற வாய்ப்பு வருது. இடையில கல்லூரியும் படிச்சு முடிக்கிறார். அப்போதான் சினிமாவுல முதல் அடி விழ ஆரம்பிக்குது, சமுத்திரகனிக்கு.
சினிமாவின் முதல் அடி!
எஸ்பி சரண் ஒரு படம் பண்ணலாம்னு கேட்க சமுத்திரகனியும் கதை தயார் செய்ய, அன்னைக்கு முன்னணியில இருந்த ஹீரோவுக்கு கதையும் சொல்றாரு சமுத்திரகனி. அந்த படத்தை தயாரிக்க இருந்தது, எஸ்பி பாலசுப்ரமணியம். முன்னணி ஹீரோவுக்கும் கதை பிடிச்சுப்போக, சமுத்திரகனிக்கு முன்னனுபவம் இல்லாத காரணத்தால கதையை மட்டும் வாங்கிக்கங்க. வேற டைரக்டர வச்சு பண்ணலாம்னு ஹீரோ சொல்ல, எஸ்.பி.சரண் சமுத்திரகனிகிட்ட பேசுறார். 'வேணும்னா கதையை வச்சுக்கோ'னு கனி சொல்ல, 'டேய் நீ டைரக்டராகணும்னுதான் நான் ப்ரொடியூஸ் பண்றேன்னு சொன்னேன். பரவாயில்ல படத்தை ட்ராப் பண்ணிக்கலாம்'னு எஸ்.பி சரண் சொல்லிட்டார். அந்த முதல் படம் ஆரம்பக் கட்டத்திலேயே டிராப்.
முதல் சினிமா வாய்ப்பு!
மறுபடியும் சீரியலுக்கே வர்றார், மறுபடியும் கே.பாலசந்தர்கிட்ட வேலை பார்க்குறார். அடுத்தடுத்து இவர் டைரக்ட் பண்ற சீரியல்கள் ஹிட்டாகுது. அடுத்ததா பாலச்சந்தர் இயக்குன சீரியலோடு தொடர்ச்சிய சமுத்திரகனிகிட்ட சொல்லி தொடர சொல்றார். இப்போ கூட இருந்தவங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. ‘என்னடா இவன்கிட்ட என்ன இருக்குனு இவர் பொறுப்பை கொடுக்குறார்’னு பேச ஆரம்பிச்சாங்க. அடுத்தபடியா பாலச்சந்தர் இயக்கின பார்த்தாலே பரவசம் படத்துல கூப்பிட்டு நடிக்க வாய்ப்பும் கொடுக்குறார். முதல்முதலா படத்துல அசிஸ்டெண்ட் டைரக்டராவும் வேலை பார்க்கிறார். பாலச்சந்தர் காம்பவுண்ட் மொத்தமும் சமுத்திரகனி மேல கோபம் ஆக ஆரம்பிச்சது. அதுக்கப்புறமா பாலச்சந்தர் கதையில முதல் முறையா மெகா சீரியல் வாய்ப்பு கிடைக்க அதைச் சரியா பண்ணிக்காட்டினார்.
அடுத்ததா எஸ்.பி சரண், வெங்கட் பிரபு ஹீரோவா வச்சு உன்னைச் சரணடைந்தேன் சினிமா எடுக்குறார். அப்போதே நாடோடிகள் பட கதையையும் தயார் செய்துவிட்டார். ஆனா எந்த கம்பெனியும் இந்த கதையை கேட்க தயாரா இல்ல. அடுத்ததா நெறஞ்ச மனசு படத்தை இயக்கினார். இந்த படத்தோட கதை வேற ஒருத்தரோடது. சமுத்திரகனி வெறும் டைரக்சன் மட்டுமே செய்தார். படம் தோல்வியடைய விரக்தியில கிளம்பி அமீர் இயக்குன பருத்திவீரன் படத்துல உதவி இயக்குநரா வேலைக்கு போறார். படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. மறுபடியும் சீரியல்ல கம்பேக் கொடுக்கிறார். இப்போ கைல மூணு மெகா சீரியல்கள், 30 அசிஸ்டெண்ட்கள்னு பரபரப்பா வேலை பார்க்க ஆரம்பிக்கிறார். இப்போ மறுபடியும் சுப்ரமணியபுரம் மூலமா சினிமா வாய்ப்பு கிடைக்குது. கைல இருந்த அத்தனை சீரியல்களையும் விட்டுட்டு சினிமாவுக்கு போறார், கனி.
இப்போ வீட்ல மனைவிகிட்ட இதுபத்தி பேசுறார். ‘இதுவே நல்லாத்தான் போய்ட்டிருக்கு. அப்புறம் ஏன் சினிமா?’னு மனைவி கேட்க, ‘இதுக்காகத்தான் சென்னை வந்தேன் பல வருஷம் கழிச்சு மறுபடியும் வாய்ப்பு வருது. மொத்த சேமிப்பு எவ்ளோ இருக்கு’னு மனைவியிடம் கேட்கிறார். ‘5 லட்சம் இருக்கு’னு அவங்க சொல்ல ‘2 வருஷத்துக்கு குழந்தைகளுக்கும், உனக்கும் குடும்பம் நடத்த இதுபோதுமா?’ன்னு கேட்கிறார். மனைவியும் ஓகே சொல்ல, மொத்த பணத்தையும் மனைவிகிட்ட கொடுத்துட்டு சுப்ரமணியபுரம் படத்துல நடிக்க, கிளம்பிட்டார்.
புதுப் பரிமாணம் தந்த ‘சுப்பிரமணியபுரம்’!
தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த படங்கள்ல ஒன்னா இருக்குற ‘சுப்பிரமணியபுரம்’ சசிகுமார் என்ற நடிகர்/ இயக்குநரை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. சமுத்திரக்கனிக்குள் இருந்த நடிகரையும் முழுமையாக வெளிக்கொண்டுவந்தது. அடுத்த பத்தாண்டுகளுக்குள் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை ‘விசாரணை’ படத்திற்காக சமுத்திரக்கனி வாங்கினதோட தொடக்கப் புள்ளி சுப்பிரமணியபுரம்தான். ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் உள்ளூர் அரசியல்வாதியின் வஞ்சகம் நிறைந்த தம்பியாக நடித்து மிரட்டியிருந்தார்.
இயக்குநராக முதல் தடம்
2009-ல் வெளியான ‘நாடோடிகள்’ சமுத்திரகனிக்கு முக்கியத் திருப்புமுனையாக அமைஞ்சது. விமர்சகர்கள், ரசிகர்களின் வரவேற்பையும் மிகப் பெரிய வெற்றியையும் பெற்ற அந்தப் படம், பல மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் வெற்றிபெற்றது. அடுத்ததாக ‘போராளி’, ‘நிமிர்ந்து நில்’ ஆகிய படங்கள் ஊழல் எதிர்ப்பு போன்ற சமூகப் பிரச்சினைகளைப் பேசின. 2016-ல் வெளியான ‘அப்பா’ சில தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையையும், அவற்றால் மாணவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளையும் பொட்டில் அறைந்தார் போல் பேசியது. கடைசியாக இயக்கிய ‘நாடோடிகள் 2’ சாதி ஏற்றத் தாழ்வுகளற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கான பயனுள்ள வழிமுறைகளைப் பரிந்துரைத்தது. இடையில படங்கள் வரிசைகட்ட நீர்பறவை, விசாரணை, அப்பா, வடசென்னை, அடுத்த சாட்டைனு பல படங்களில் தன்னோட முத்திரையை பதிக்கிறார். விசாரணை படத்துக்காக சிறந்த துணை நடிகர்னு தேசிய விருதும் வாங்கினார். அதே நேரத்துல தெலுங்கு, மலையாளம் மொழிகள்லயும் பல படங்கள் நடிச்சு முடிச்சிருக்கார்.
Also Read – செல்வராகவன் படங்கள்ல நம்மதான் ஹீரோ… ஏன் தெரியுமா?
பன்முக நடிகர்
நாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் எனப் பல வகையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். எந்த கேரக்டராக இருந்தாலும், அதில் தனித்துவம் இருக்கணும்ங்குறதுதான் இவரோட கொள்கை. விவசாயி, சிறுநகரத்து வியாபாரி, பெருநகரங்களின் கார்ப்பரேட் ஊழியர், காவல்துறை அதிகாரி, ரவுடி, தாதா, ஆசிரியர், மருத்துவர்னு எல்லா கேரெக்டரும் பண்ணக்கூடிய நடிகர் சமுத்திரகனி. சமுத்திரகனியின் பலமே அவரது பாடிலாங்வேஜ்தான். கேரெக்டருக்கு ஏற்றவாறு பாடிலாங்வேஜ்களை வெரைட்டியாக கொடுக்கக் கூடியவர்.
சமூக ஆர்வலர் எண்ணம்!
வெறும் கமர்சியலுக்காகத்தான் பண்ணனும்னா சினிமாவுல சம்பாதிச்சு 10 வருஷத்துக்கு முன்னாலயே கோடீஸ்வரனாயிருப்பார், கனி. ஆனா சமூக ஆர்வமும் அதுல இருக்கணும்னு கவனத்தோட ஒவ்வொரு படத்தையும் இயக்குறார், சமுத்திரகனி. இந்த எண்ணம்கூட இவரோட மாமா கிட்ட இருந்து வந்திருக்கு. அவங்க மாமா சிபிஎம்ல உறுப்பினரா இருந்தார். சிவப்பு சட்டை போட்டுட்டு, நீதி, நேர்மைனு போற ஆள். அவர்கூட சிறுவயசுல சுத்தின அனுபவங்கள் மூலமா சமுத்திரகனிக்கு அந்த எண்ணங்களையும் மனசுல பதிய வச்சிருக்கார் அவரோட மாமா. அடுத்ததா எஸ்.எப்.ஐங்குற மாணவர்கள் இயக்கத்துல அடிப்படை உறுப்பினரா இருந்தார், கனி. அங்கேயும் கொஞ்சம் கத்துக்கிறார். அடுத்ததா, சட்டக்கல்லூரியில் படிக்கிறப்போவும் சுற்றி இருந்த நண்பர்கள் வட்டாரமும் இவருக்கான சமூக நல்லஎண்ணத்தை விதைத்திருக்கிறது.
சமுத்திரகனி நடிப்புல பிடிச்ச படம் சுப்ரமணியபுரமும், விசாரணையும்தான் என்னோட ஃபேவரைட். உங்களுக்கு எந்த ப்டம் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க.