சிறையில் கொலைவழக்கொன்றில் கடந்த 3 ஆண்டுகளாக விசாரணைக் கைதியாக இருக்கும் மோகன்ராம் என்பவர், தனது வழக்கு நிதியிலிருந்து ரூ.20,000 கொரோனா நிவாரண நிதிக்கு அளித்திருக்கிறார்.
கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இரண்டாம் அலையில் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஜூன் 7-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கை அரசு அமல்படுத்தியிருக்கிறது. கொரோனா பேரிடரை சமாளிக்கும் வண்ணம் பொதுமக்கள், தொழிலதிபர்கள் முதலமைச்சரின் நிவாரண நிதிக்குத் தாரளமாக நன்கொடையளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அதன்படி, அரசியல், திரையுலகம், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதிக்குத் தங்களது பங்களிப்பைச் செய்துவருகிறார்கள். மதுரையைச் சேர்ந்த சிறுவன், தனக்கு சைக்கிள் வாங்குவதற்காகச் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்தான். இதைக் கேள்விப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், அந்த சிறுவனுக்குப் புதிய சைக்கிள் வாங்கிக் கொடுத்ததுடன், தொலைபேசியில் தொடர்புகொண்டும் வாழ்த்துத் தெரிவித்தார்.
அந்தவகையில், 3 ஆண்டுகளாக சிறையில் விசாரணைக் கைதியாக இருக்கும் சிறைவாசி மோகன்ராம் என்பவர் தனது வழக்கு நிதியில் இருந்து ரூ.20,000 கொரோனா நிவாரண நிதிக்குக் கொடுத்திருக்கிறார். திண்டுக்கல் சின்னாளபட்டியைச் சேர்ந்த மோகன்ராம் மீது திண்டுக்கல், திருப்பூர் மற்றும் சென்னையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 2016-ல் கோவை சூளூரில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இவர் மீது வழக்குப் பதியப்பட்டு, போலீஸார் அவரைத் தேடி வந்தனர்.
சுமார் இரண்டாண்டுகள் தலைமறைவாக இருந்த மோகன்ராமை மும்பையில் வைத்து போலீஸார் கடந்த 2018ம் ஆண்டு கைது செய்தனர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக விசாரணைக் கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையில் இருக்கும்போது கைதிகள் செய்யும் வேலைக்கான ஊதியம் அவர்களது சேமிப்பாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அப்படி, தனது வழக்கு நிதியில் இருந்து ரூ.20,000-த்தை மோகன்ராம் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அளித்திருக்கிறார். சிறைத்துறை எஸ்.பி செந்தாமரைக்கண்ணனிடம் அந்தத் தொகையை மோகன்ராம் அளித்தார்.
Also Read – `அரசை விமர்சிப்பது தேசதுரோகமாகாது’ – ஆந்திர அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்தது ஏன்?