குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு திரையுலகில் டப்பிங் ஆர்டிஸ்ட், நடிகை, இயக்குநர் என பன்முகக் கலைஞராகக் கொண்டாடப்படும் நடிகை ரோகினி, அவ்வளவு எளிதாக இந்த இடத்துக்கு வந்துவிடவில்லை. சிறு வயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டாலும் ரோகினியின் வளர்ச்சி முழுக்க முழுக்க திறமையினாலே சாத்தியமானது. நடிகையாக இருந்துவிட்டு மட்டும் போய்விடக் கூடாது என பல்வேறு துறைகளிலும் கால்பதித்து, அங்கு தனக்கென தனித்த முத்திரையைப் பதித்த நடிகை ரோகினியோட கதையைத்தான் நாம இந்த வீடியோவில் பார்க்கப்போறோம்.
நடிகை ரோகினி
ரோகினி என்கிற இந்திரா ராணியோட சொந்த ஊர் ஆந்திர மாநிலம் அனகாபள்ளி. ஆனாலும், அப்பாவோட வேலையால இவங்களோட சின்ன வயசுல பெரும்பாலான நாட்களை சென்னையிலேயே கழித்திருக்கிறார். பஞ்சாயத்து போர்டு ஊழியரான அப்பா அப்பாராவ் நாயுடுவுக்கு சின்ன வயசுல இருந்தே சினிமாவுல நடிக்கணும்கிறது ஆசை. ஆனால், அவரின் ஆசை நிறைவேறவில்லை. இதனால், மகள் ரோகினி மொலெட்டியை நடிக்க வைக்க அவர் ஊக்கப்படுத்தியிருக்கிறார். அப்படித்தான் முதல்முறையாகத் தனது ஐந்து வயதிலேயே ஹராத்தி என்கிற படம் மூலம் 1974-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார் ரோகினி. பெரிய விழிகளோடு முதல் படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக ரோகிணியின் நடிப்பு பெரிதாகப் பேசப்பட்டது. இன்னும் ஒராண்டில் சினிமாவில் பொன்விழா கொண்டாட இருக்கும் ரோகினி, தமிழின் முக்கியமான இயக்குநர்களான கே.பாலச்சந்தர், மணிரத்னம், பரதன், பத்மராஜன் உள்ளிட்டோரோடு பயணித்தவர்.
டப்பிங் கலைஞராக இவரது பயணம் தொடங்கியது மணிரத்னத்தின் கீதாஞ்சலி (1989) படம் மூலமாகத்தான். தொடர்ச்சியாக அவரது பல படங்களில் ஹீரோயின்களின் குரலாக ஒலித்தார். குறிப்பாக இருவர், ராவணன் படங்களில் ஐஸ்வர்யா ராய்க்குக் குரல் கொடுத்தது இவர்தான். அதுவும் ராவணன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக கிட்டத்தட்ட 25 முறைக்கும் மேல் கத்தி கத்தி குரல் கொடுத்திருக்கிறார். ஹீரோயினின் உணர்வுகளுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் டப்பிங் இருக்க வேண்டும் என்று மெனக்கெட்டு, தாமே முன்வந்து இதைச் செய்திருக்கிறார். இதனால், ராவணன் டப்பிங்குக்குப் பிறகு பல நாட்கள் தொண்டை வலியாலும் அவதிப்பட்டார். அந்த அளவுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை சிரமேற்கொண்டு செய்துமுடிக்கத் துடிக்கும் கலைதாகம் கொண்டவர்.
மணிரத்னம் படங்களில் ஹீரோயின்களுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்தது மட்டுமல்ல… இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் படமொன்றில் பாடல் ஒன்றையும் எழுதிக் பிரபலமான பாடலாசிரியராகவும் ரோகினி உருவெடுத்தார். பிரபலமான அந்தப் பாடல் இடம்பெற்ற படம்… எந்தப் பாடல்னு கெஸ் பண்ணிட்டே இருங்க… விடையை கன்ஃபார்ம் பண்ணிக்க வீடியோவைத் தொடர்ந்து பாருங்க.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ரோகினி ஹீரோயினாகப் பயணித்த படங்களை விட குணச்சித்திர கேரக்டர்கள்தான் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. கல்லூரி சென்று படிக்காத ரோகினி, எழுத்தின் மீது மிகப்பெரிய ஆர்வம் கொண்டவர். ஒரு கேரக்டரில் நடிக்கும் முன் அந்த கேரக்டர் பத்தி நிறைய யோசிச்சு ஒரு முடிவுக்கு வா என மலையாள நடிகர் நெடுமுடி வேணு ஒருமுறை இவரிடம் சொல்லியிருக்கிறார். அதன்பின்னரே, நடிப்பது மட்டுமல்ல நம்மிடமும் சொல்ல பல கதைகள் இருக்கின்றன என்பதை உணர்ந்திருக்கிறார். அதன்பிறகே இயக்குநராக வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டு ஓடத் தொடங்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளராக பொதுவெளியில் களமாடும் தோழர் ரோகினி, நடிகர் ரகுவரனை 1996-ல் திருமணம் செய்துகொண்டார். பின்னர், 2004-ல் இவர்களுக்கு விவாகரத்தானது. ரயில் பயணங்கள் என்றால் ரோகினிக்கு கொள்ளைப் பிரியம். இதனாலேயே மகனை அமெரிக்காவில் படிக்கக் கூட்டிச் சென்றபோது அங்கு ரயில் பயணத்தைத் தேர்வு செய்திருக்கிறார். பழங்களில் வாழைப்பழம் என்றால் இவருக்கு தனிப்பிரியமாம். உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றபோது அங்கு ஒரு ரூமில் வாழைப்பழங்கள் வைத்திருப்பதைப் பார்த்த இவர், உறவினர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக வாழைப்பழத்தை கேட்டு வாங்கி சுவைத்திருக்கிறார். அப்படி அளவுக்கு அதிகமான வாழைப்பழத்தை சாப்பிட்டதால் அன்று இரவு இவருக்கு உடல்நலன் குன்றியதாம். ஆனாலும், வாழைப்பழம் மீதான ஆசை இன்று வரை போகவில்லையாம். 1976 தொடங்கி மேயர் மீனாட்சி, நிழல்கள் போன்ற படங்களில் நடித்திருந்தாலும், இவருக்கு பெரிய பிரேக் கொடுத்த படம் என்றால் சுமை படம்தான். அதன்பின்னர், மலையாளம், தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டே அவ்வப்போது தமிழிலும் நடித்துக்கொண்டிருந்தார். பார்வையின் மறுபக்கம், இளமைக் காலங்கள், தண்டிக்கப்பட்ட நியாயங்கள், வளர்த்த கிடா, திருட்டு ராஜாக்கள், பொன்மாலைப் பொழுது, தாய்க்கு ஒரு தாலாட்டு, பவுனு பவுனுதான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் பவுனு பவுனுதான் படத்தில்தான் பெயர் சொல்லிக்கொள்ளும்படியான கேரக்டர் இவருக்குக் கிடைத்தது. இயக்குநர் சி.வி.ஸ்ரீதர் இயக்கிய கடைசிப் படமான தந்துவிட்டேன் என்னை படத்தின் ஹீரோயின் ரோகினிதான். அதன்பின்னர், குணச்சித்திர கதாபாத்திரமான மகளிர் மட்டும் பொன்னம்மா, விருமாண்டி ஏஞ்சலா காத்தமுத்து கேரக்டர்கள் பெரிதும் பேசப்பட்டன. பாகுபலி படத்தின் ஷிவுடுவை எடுத்து வளர்த்த தாய் சங்கா கேரக்டரிலும் நடித்திருப்பார். இதுதவிர, டிவி நிகழ்ச்சிகள் பலவற்றையும் தொகுத்து வழங்கியதோடு, சில நாடகங்களையும் எழுதியிருக்கிறார். மேலும், Silent Hues என்ற பெயரில் தமிழ் சினிமாவின் குழந்தை நட்சத்திரங்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்றையும் இயக்கியிருக்கிறார்.
தெலுங்கு, மலையாள சினிமாக்கள் இவரைப் பயன்படுத்திக் கொண்ட அளவுக்குத் தமிழ் சினிமாவில் ரோகினி என்கிற நடிகை கொண்டாடப்படவில்லை என்றுதான் தோன்றுகிறது. குறிப்பாக தெலுங்கில் ஒரே ஆண்டில் 16 படங்களில் இவர் ஹீரோயினாக நடிக்க காலமெல்லாம் உண்டு. ஆனால், தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை 1991-ல் வெளியான பவுனு பவுனுதான், 1994-ல் வெளியான மகளிர் மட்டும், 2004-ல் வெளியான விருமாண்டி மற்றும் 2017-ல் வெளியான வேலைக்காரன் உள்ளிட்ட வெகுசில படங்களில்தான் ரோகினிக்குக் கனமான பாத்திரம் கொடுக்கப்பட்டது என்று சொல்லலாம். இதனாலேயே தமிழ் சினிமாவின் Underrated நடிகை என்று ரோகினியைக் குறிப்பிடலாம் என்று தோன்றுகிறது. இவங்க ஸ்ரத்தா ஸ்ரீநாத்தோட சேர்ந்து நடிச்சு சமீபத்துல ஓடிடி தளத்துல நேரடியா ரிலீஸான விட்னெஸ் படம் ரொம்பவே முக்கியமானதுனு சொல்லலாம். காரணம், சிஸ்டத்தோட தவறால மலக்குழியில் தனது மகனைப் பறிகொடுத்துவிட்டு அதற்காக நீதிகேட்டு போராடுற இந்திராணி என்கிற அம்மா கேரக்டருக்கு உயிர் கொடுத்து நடிச்சிருப்பாங்க ரோகினி. இயல்பாவே என்னோட கேரக்டருக்கு ஏத்த மாதிரியான ரோல் என்பது தெரிஞ்ச உடனேயே இதுக்கு ஓகே சொல்லிட்டேன். ஏற்கனவே, சில ஆண்டுகளுக்கு மலம் அள்ளுவது பற்றி வாசனை என்கிற பெயரில் மேடை நாடகம் ஒன்றை அரங்கேற்றியிருந்தேன். அவர்களின் பிரச்னை பற்றி தெரியும் என்பதால் இந்த கேரக்டரில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன் என்று சொல்லியிருந்தார்.
Also Read – கேரளாவில் செம கில்லி… யார் இந்த சம்யுக்தா?!
கௌதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார் – ஜோதிகா – ஆண்ட்ரியா நடித்திருந்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் இடம்பெற்றிருந்த உனக்குள் நானே பாடலைத்தான் ரோகினி எழுதியிருந்தார். அந்தப் பாடல் இவருக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத்தந்தது. அதேபோல், மாலைப்பொழுதின் மயக்கத்திலே படத்தின் அனைத்து பாடல்களையும் இவரே எழுதியிருந்தார். கோலிவுட்டைப் பொறுத்தவரை நடிகை ரோகினி Underrated நடிகைதானா… அவங்க நடிச்சதுல உங்களோட ஃபேவரைட் கேரக்டர் என்ன… இதைப்பத்தின உங்க ஒப்பீனியனை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க..