தஞ்சை களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில் நடந்த மின் விபத்தில் இரண்டு சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.
களிமேடு அப்பர் தேர் திருவிழா
தஞ்சை அருகே உள்ள களிமேடு கிராமத்தில் ஆண்டுதோறும் அப்பர் திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா ஆண்டுதோறும் நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கி அதிகாலை 3-4 மணி வரை நடைபெறுமாம். அந்தவகையில், 94-வது ஆண்டு அப்பர் திருவிழாவின் ஒரு பகுதியாக தேர் திருவிழா நேற்று நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கியது. களிமேடு கிராமத்தின் பல்வேறு தெருக்களின் வழியாகவும் தேர் பவனி வந்தது. தேரை வடம் பிடித்து இழுப்பவர்களின் கால்களில் மக்கள் தண்ணீர் ஊற்றுவது வழக்கம்.
தேரில் ஒரு சப்பரத்தில் சுவாமி சிலை வைக்கப்பட்டு சுற்றிலும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தேரில் இருக்கும் விளக்குகளுக்கு மின்சாரம் அளிக்கும் வகையில் தேரோடு இணைக்கப்பட்ட ஜெனரேட்டர் வண்டியும் பின்னாலேயே கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஒரு தெருவின் ஓரத்தில் தேரை வளைக்க முயன்றிருக்கிறார்கள். அந்தத் தெருவில் சாலை சீரமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்ததாகவும், இதனால் வழக்கத்தை விட சாலை 2 அடி உயரமாகப் போடப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது. தேரைத் திருப்புகையில் தேரின் பின்னால் வந்த ஜெனரேட்டர் வண்டி, வளைவில் சிக்கிக் கொண்டது. இதனால், தேர் பின்னால் இழுக்கப்பட்டு, அதன் மேலே சென்றுகொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பியில் உரசியிருக்கிறது. தேரின் மேலே வைக்கப்பட்டிருந்த கும்பம் மின் கம்பியில் உரசியதும் தேரை வடம் பிடித்து இழுத்தவர்கள், அவர்களின் கால்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தவர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள்.
94 ஆண்டுகளில் முதல்முறை
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். தேரின் பல பகுதிகள் தீயில் எரிந்து நாசமாகின. 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்திருக்கிறது. 94 ஆண்டுகால திருவிழா வரலாற்றில் இப்படியோர் விபத்து நிகழ்வது இதுதான் முதல்முறை என்கிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்திருக்கிறார்கள். தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சமும் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்தில் மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். அதேபோல், தஞ்சாவூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை செல்ல இருப்பதாக சட்டப்பேரவையில் அறிவித்தார்.
Also Read –