காமெடியோ, குணச்சித்திர வேடமோ எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பில் வெரைட்டி காட்டும் வித்தகர் தம்பி ராமையா. அவருக்கு Tamilnadu Now Golden Carpet விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவின் குணச்சித்திரக் கலைஞர்களைக் கொண்டாடும் விதமாக `Tamilnadu Now’ கோல்டன் கார்பெட் விருது வழங்கும் விழா மிக பிரமாண்டமாக சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ் சினிமாவின் முக்கியமான அங்கமான 23 குணச்சித்திரக் கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
தம்பி ராமையா
30 படங்களுக்கு மேல் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சிரிப்பு மத்தாப்பு கொளுத்திக்கொண்டிருந்தவர் சரவெடியாக வெடித்துச் சிதறிய படம் ‘மைனா’. அத்தனை காலம் நடிப்பு ராட்சசனை தனக்குள் அடக்கி வைத்திருந்தவருக்கு காமெடி, சென்டிமென்ட், வன்மம் என பல பரிமாணங்கள் அடங்கிய ராமையா கதாபாத்திரம் தலை தீபாவளி விருந்தாக அமைந்தது.
‘தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’ என்பதைப் போல தம்பி ராமையாவிடம் எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அஞ்சத்தேவையில்லை என்பது இயக்குநர்களின் நம்பிக்கை.
பத்து வயதிலிருந்து நாடகத்தில் நடிக்கத் தொடங்கியவர், வசனகர்த்தா, உதவி இயக்குநர், பாடலாசிரியர் பல படங்களில் திரைக்குப் பின் பணியாற்றினார். மலபார் போலீஸ் மூலம் திரையில் முகம் காட்டியவருக்கு, அதன்பின் தமிழ் திரையுலகம் விரித்தது ராஜ பாட்டை.
தோற்றுப்போன உதவி இயக்குநரின் சோகம், பொறாமை கொண்ட ஆசிரியரின் கோபம் என எந்த உணர்வையும் தனது முகபாவத்தில் இயல்பாக வெளிப்படுத்தும் எதார்த்தக் கலைஞன் தம்பி ராமையா அவர்களுக்கு சிவப்புக்கம்பளம் அல்ல… தங்கக் கம்பளம் விரித்து வரவேற்பதில் பெருமை கொள்கிறது, Tamilnadu Now Golden Carpet Awards. தம்பி ராமையாவுக்கு Tamilnadu Now சார்பாக Golden Carpet Lifetime Achievement விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தம்பி ராமையாவுக்கான விருதை இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி வழங்கி கௌரவித்தார். `நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பறையடித்த குழுவினருக்கு முதல் வணக்கம்’ என்று தனது பேச்சைத் தொடங்கிய தம்பி ராமையா, நமது Tamilnadu Now-ன் மிஸ்டர் மினிஸ்டர் நிகழ்ச்சி பற்றியும் அதன் சாரம்சம் குறித்தும் விரிவாகப் பேசினார். அத்தோடு, தான் உலக அரசியல் தொடங்கி உள்ளூர் அரசியல் வரை தெரிந்து வைத்திருப்பேன் என்றும், மிஸ்டர் மினிஸ்டர் நிகழ்ச்சியை நீங்களும் பார்க்க வேண்டும் என்று விஜய் ஆண்டனியிடமும் கேட்டுக் கொண்டார். `எல்லோரையும் நெஞ்சுக்குப் பக்கத்தில் வைச்சுப் பாக்குற மனசு பெருசு. அவங்களோட உரையாடணுங்கிற மனசு வராது. ஆனா உங்களைப் (விஜய் ஆண்டனி) பார்த்தா நிச்சயம் வரும். சுவாமிநாதன் சொன்ன மாதிரி Subtleஆ நடிக்கிறது கஷ்டம். தெலுங்குல மகேஷ் பாபு அதைத்தான் பண்ணிட்டு இருக்கார். விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவோட மகேஷ் பாபு’ என்று பேசினார்.
அதன்பின்னர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பார் சீமான் பற்றி பேசுகையில், `மேடைப் பேச்சு என்பது ஒரு கலை. சென்ற தலைமுறை பேரறிஞர் அண்ணாவின் பேச்சைக் கேட்டு ஐம்பெரும் தலைவர்கள் மட்டுமல்ல; அதற்கடுத்தகட்ட தலைவர்களும் உருவானார்கள். அதற்கு அடுத்தபடியாக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர். நிறைய மேடைப்பேச்சாளர்கள் உருவாக அவர் தாயாக இருந்திருக்கிறார். அதற்குப் பிறகு நிறைய மேடைப் பேச்சாளர்கள் இருந்திருக்கலாம். அவர்களின் மேடைப் பேச்சை ரசித்திருக்கலாம். ஆனால், மேடைப்பேச்சாளர்களை உருவாக்குவது என்பது வேறு. மேடைப் பேச்சாளர்கள் இன்று உருவாகிக் கொண்டிருப்பதற்கும், உருவாகி நிற்பதற்கும் அடுத்த தலைமுறை நம்பிக்கை நட்சத்திரம் சீமான்’ என்று பேசினார். இதேபோல், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தி.மு.க இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் பற்றி தம்பி ராமையா பேசியது ஹைலைட்டான மொமண்ட். அதேபோல், ஆர்.ஆர்.புரம் டூ ராமாபுரம், எம்.ஜி.ஆர் மீதான பற்று, சின்ன வயசில் பள்ளிக் கூடத்தில் `உன்னோட ஆசை என்ன’ என்ற ஆசிரியரின் கேள்விக்கு தம்பி ராமையா சொன்ன சுவாரஸ்யமான பதில்னு அந்த இண்ட்ரஸ்டிங்கான மொமண்டுகளைப் பார்க்க நம்ம Tamilnadu Now யூடியூப் சேனல்ல வெளியாகியிருக்க விருது விழாவை மிஸ் பண்ணாமப் பாருங்க மக்களே!