ஸ்பாட்டிஃபையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? அதில் ஏன் இத்தனை கடுப்படிக்கும் விளம்பரங்கள். ஸ்பாட்டிஃபையை உருவாக்கிய டேனியல் எக் 13 வயசுலயே எவ்வளவு பெரிய பிஸ்து தெரியுமா? அத்தனையையும் இந்த வீடியோவில் பார்ப்போம்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் லேப்ல சில பசங்க ரகசியமா பேசிகிட்டிருக்காங்க. உனக்கு இந்த வீடியோ கேம் நான் தரேன், பதிலுக்கு இந்த வெப்சைட்ல இந்த மாட்யூலை நீ டெவலப் பண்ணி குடுன்னு ஒரு 14 வயசுப் பையன் பேரம் பேசிக்கிட்டிருக்கான். அந்தச் சின்னப்பையன் 13 வயசுல இருந்தே இணையதளங்களை வடிவமைச்சுக்கிட்டிருக்கான், முதல் இணையதளத்துக்கு 100$ சம்பளம் வாங்கி இருக்கான், இரண்டாவது தளத்துக்கு 200$ வாங்கியிருக்கான். இப்படியே வளர்ந்துகிட்டுப் போன அந்தப் பையன் ஒரு இணையதளம் வடிவமைக்க ஒரு காலத்தில் 5000$ வரைக்கும் சம்பளம் வாங்கி இருக்கான். தனியா இந்த வேலைகளை செய்து சமாளிக்க முடியாத நிலை வந்தப்போ தான், மேலே சொன்ன மாதிரி வீடியோ கேம்களைக் கொடுத்து பசங்க கிட்ட வேலை வாங்கி இருக்கான். ஒரு கட்டத்தில் ஒரு மாதத்துக்கு 50,000$ வரை சம்பாதிச்சிருக்கான். இந்தக் காசில் பெரிய பெரிய டிவிக்களை வீட்டுக்கு வாங்கி வரும்போதுதான், பையனுக்கு எப்படி இவ்வளவு காசு கையில புழங்குதுன்னு அவன் பெற்றோர் சந்தேகப் பட்டு விசாரிச்சிருக்காங்க. கல்லூரியில் பொறியியல் படிக்க சேர்ந்தபோதும், இந்தக் கல்லூரி பட்டமெல்லாம் நமக்கு உதவாது, படிப்பை விட்டுட்டுப் பொழப்பைப் போய் பார்ப்போம்னு கிளம்பிட்டான் அந்தப் பையன். பையனோட பெயர், Daniel Ek. கல்லூரியை விட்டு வெளியே வந்தபிறகு அவன் சம்பாதித்தது கிட்டத்தட்ட 500 Million மக்களின் மனங்களை. 13வயதிலேயே இந்த ஜித்து வேலைகளைக் காட்டிய அந்த டேனியல் எக் உருவாக்கியது தான் நம்மில் பலரும் பயன்படுத்தும் Spotify.
ஸ்பாட்டிஃபை ஆப்’பில் நீங்கள் பாடல்களைக் கேட்கும் போது வரும் விளம்பரங்களால் நீங்கள் எரிச்சலடைந்திருக்கிறீர்களா? அப்படி எரிச்சலான விளம்பரங்கள் ஏன் வருது தெரியுமா? கடைசியில் அதற்கான விடையைப் பார்ப்போம்.
டேனியலின் கதையைப் பார்ப்பதற்கு முன்பு ஸ்பாட்டிஃபை ஆரம்பித்த கதையைப் பார்ப்போம். ஒரு பத்து வருஷங்களுக்கு முன்னாடி நீங்க எப்படி பாடல்களைக் கேட்டீங்கன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?
அந்தக் காலகட்டத்தில், Fm Radio-க்களும் sun music, ss music போன்றவற்றின் மூலமாகவே புதிய பாடல்களைக் கேட்கும் பழக்கம் நம்மூரில் இருந்தது. அதிலும் நமக்கு விருப்பப்பட்ட பாடல்களை அந்த RJ/VJ பிளே செய்வதற்கான வாய்ப்புகள் ரொம்பவே கம்மி. நோக்கியா 1100 காலத்துக்குப் பிறகு மெமரி கார்ட் பயன்படுத்தி பாடல்கேட்கும் வாய்ப்பு வந்தபோதுதான் 90ஸ் கிட்ஸ் பாடல்களைக் கேட்கும் வாய்ப்பே மொத்தமாக மாறியது. ஊர்பக்கம் பாட்டு ஏத்திக்கொடுக்க ஒரு பாட்டுக்கு 2 ரூபாய் எல்லாம் வாங்குனாங்கன்னா பாருங்களேன். இப்போவும் ஊர்ப்பக்கங்களில் பூமர்கள் மத்தியில் இந்தப் பழக்கம் இருக்குன்னு என் தாத்தா சொன்னார். Starmusiq, sensongs, tamilmp3world, songs.pk இந்தப் பெயர்கள் எல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? இதெல்லாம் போக “இளையராஜா கலெக்ஷன்ஸ்”, “ஏ.ஆர்.ரஹ்மான் கலெக்ஷன்ஸ்” என்றெல்லாம் ஒட்டுமொத்தமாக டாரண்ட்டுகளில் இருந்து டவுன்லோட் செய்து கேட்கும் பழக்கம் இருந்தது. அப்போ இருந்த மாட்டுவண்டி வேகத்திலான இண்டர்நெட் கனெக்ஷனில் ஒரு பாட்டு கேட்குறதுக்குள்ள ஒன்பது முறை கர்ணன் படம் பாத்துடலாம்னா பாருங்களேன்.

கிட்டத்தட்ட இதே நிலைமை தான் அப்போது ஐரோப்பாவிலும் இருந்தது. மேலே சொன்ன டேனியலும் இதே மாதிரிதான் பைரேட் பே போன்ற டாரெண்ட் தளங்களில் இருந்து பாடல்களை டவுன்லோட் செய்துகேட்கும் ஒரு இசை வெறியன்.
என்னடா இது ஒரு இசையை கேட்க, ரசிக்கக்கூட ஏழு மலையைத் தாண்டி வந்து என்பது அடி கிணத்துல இருந்து தண்ணீர் எடுக்கனுமான்னு யோசிச்ச டேனியல், அதுல ஒரு வாய்ப்பு இருக்குன்னு யோசிக்கிறார். இன்னும் சில நிமிடங்களில் நாம பார்க்கப்போற Martin Lorentzon என்ற நபரைச் சந்திக்குறார், தன்னுடைய ஐடியாவை அவர்கிட்ட pitch பன்றார். அவரும் முதலீட்டை இறக்குறார். இரண்டு பேரும் சேர்ந்து பல கட்ட யோசனைகள், நபர்களை பணிக்கு அமர்த்துவது, பெயரை யோசிப்பது என, நிறுவனத்தைத் துவங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது Spotify. அந்த சமயத்தில் ஏற்கனவே அந்த இடத்தில் ஆப்பிளின் iTunes கோலோச்சிக் கொண்டு இருக்கிறது. அதே சமயத்தில் வேறு சில Music streaming Service-களும் இருக்கின்றன.
Also Read – தமிழ் சீரியல்களில் டாப் 10 ஹீரோயின்ஸ் இவங்கதான்!
போட்டியாளர்களை எல்லாம் மீறி ஸ்பாட்டிஃபை எப்படி இந்தச் சந்தையில் சாதித்தது? ஒரே வார்த்தையில் பதில் சொல்வதென்றால், Simplicity. அதற்கு அடுத்த இன்னொரு விஷயம், பொதுவாகவே இந்த சோஷியல் மீடியா யுகத்தில் நம்ம மக்களுக்கு “பெருமை பீற்றிக்கொள்ள” சில விஷயங்கள் வேண்டும். ஹோட்டலுக்கு சாப்பிடப் போனா, முதல் வாய் சோறு உள்ள போறதுக்குள்ள முப்பது லைக் இன்ஸ்டாகிராம்ல விழுந்துரனும், 145 ஸ்னாப் எடுத்திருக்கனும், ஃபேஸ்புக், வாட்ஸ்அப்-ல ஸ்டேட்டஸ், ஸ்டோரிஸ்லாம் பூமர்ஸ் தான் வைக்குறாங்க. அங்கேதான் ஸ்பாட்டிஃபை பயனாளர்களுடைய இசை ரசனையைப் பறைசாற்றிக்கொள்ள #SpotifyWrapped என்ற வசதியை வழங்க பயன்படுத்துபவர்களிடம் அது ஹிட்டடித்தது. இதோ டிசம்பர் மாசம் வந்துருச்சுல்ல, என் Spotify Wrap கேளுங்கன்னு ஓராயிரம் போஸ்ட் நம்ம கண்ல படும். அந்த பட்டியலைப் பகிர்ந்து பெருமையடிக்க ஒரு வருசமா வித்தியாசமா எல்லாம் பாட்டுகளைக் கேட்க ஆரம்பிச்சுடுறாங்க. தொடர்ந்து ஸ்பாட்டிஃபையை விடாம பயன்படுத்த இது ஒரு காரணமாகவே ஆகிருக்கலாம்.
ஸ்பாட்டிஃபை மூலமா இசை மட்டுமல்ல, கடந்த சில வருஷங்களா பாட்காஸ்ட்டும் பெரிய ஹிட்டடிச்சுகிட்டிருக்கு. வழக்கம் போல இந்தியர்கள் கொஞ்சம் இந்த விஷயத்தில் ஸ்லோ தான். ஆனா தேவர் மகன் சிவாஜி சொல்ற மாதிரி சீக்கிரமே வந்து சேந்துருவாங்க.

ஸ்பாட்டிஃபையின் கதை இருக்கட்டும், டேனியலின் கதையைக் கொஞ்சம் இப்போ பார்ப்போம். ஸ்வீடனில் பிறந்த ‘டேனியல் எக்’, கல்லூரிப் படிப்பை பாதியில் கைவிட்டதும் ஒரு ஏலம் விடும் நிறுவனத்தில் டெவலப்பராக வேலைக்குச் சேர்கிறார். அங்கேயும் சீனியர் லெவலுக்கு உயர்ந்த போது போரடிக்க வேறு ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். அந்த வேலையையும் விட்டுவிட்டு Advertigo என ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்துகிறார், அதன் பிறகு அந்நிறுவனத்தை ஐரோப்பாவின் இன்னுமொரு பெரிய விளம்பர நிறுவனமான TradeDoubler-ற்கு மிகப்பெரிய தொகைக்கு விற்கிறார். அந்நிறுவனத்தின் co founder-ஆன Martin Lorentzon என்பவருக்கு இந்த டேனியல் கிட்ட எதோ ஒரு திறமை ஒளிஞ்சிருக்குன்னு ஒரு ஸ்பார்க் அடிச்சிருக்கு. உன்னுடைய அடுத்தடுத்த முயற்சிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய நான் தயார் அப்படிங்குற முடிவுக்கு வரார் மார்டின். டேனியல், அவருடைய நிறுவனத்தை விற்ற பிறகு 90S kids அதிகமா பயன்படுத்திய μTorrent நிறுவனத்திற்கு 23 வயதிலேயே CEO-ஆகி இருக்கிறார். அதனை bittorrent நிறுவனத்திற்கு விற்றபோது, அந்தப் பொறுப்பில் இருந்து விலகிய பிறகுதான் மார்டினுடன் டேனியல் சேர்ந்து ஸ்பாட்டிஃபையை ஆரம்பித்தார்.
ஸ்பாட்டிஃபை ஆப்ல ஹிப் ஹாப் ஆதின்னா பாட்டைக் கேக்குறதை விட கொடுமையான ஒரு விஷயம் கடுப்படிக்குற அதோட விளம்பரங்கள் தான். டேனியல் பைரேட் பே மாதிரியான டாரண்ட் தளங்களில் பாட்டை டவுன்லோட் செய்தவர் தான். அந்த மாதிரியான டாரண்ட் தளங்களில் ஒரு டவுன்லோட் பட்டனைக் கண்டுபுடிக்க 88 டவுன்லோட் பட்டன்களைத் தாண்டி வரனும். நேரடியா அந்த தளங்களுடைய மாற்றாக கொண்டு வந்த ஸ்பாட்டிஃபையிலும் இப்படி விளம்பரம் போட்டு கடிப்படிச்சு, இவங்களை பிரிமீயம் யூசர்களா மாத்துவோம்னு டேனியல் யோசிச்சாரோ என்னமோ?
ஸ்பாட்டிஃபை இலவசமாகவே இருந்தாலும், கடுப்படிக்குற விளம்பரங்களை நிறுத்தவும், ஆஃப்லைனில் பாட்டு கேட்கவுமாக பிரிமீயம் வெர்ஷனும் இருக்கு. பொதுவா இலவசமா கிடைச்சா, அந்த சேவையை சப்ஸ்க்ரைப் செய்யும் பழக்கம் இந்தியர்களுக்குப் பொதுவா கம்மி. ஆனால், ஸ்பாட்டிஃபை உலகளவில் இருக்குறதால அது ஒரு பெரிய வருமானமாக ஸ்பாட்டிஃபைக்கு இருக்கு. அதை பகிர்ந்து கலைஞர்களுக்குக் கொடுக்குறதுல சில பல பஞ்சாயத்துகளையும் ஸ்பாட்டிஃபை சந்திச்சிருக்குறது தனிக்கதை. கிட்டத்தட்ட கடந்த செப்டம்பர் 2022 கணக்கு வழக்குப்படி 450 மில்லியன் யூசர்கள் ஸ்பாட்டிஃபைக்கு இருக்காங்க. அதுல 50% பேர் ஸ்பாட்டிஃபையின் பிரிமீயம் சேவையைப் பயன்படுத்தியவர்கள்னு ஸ்பாட்டிஃபை அறிக்கை கொடுக்குறாங்க.