`வெளியே போக இவ்வளவு பில்டப் தேவையில்லை; வெளியே போய்ட்டா ஒருமனதா நிறைவேற்றிடுவோம்’ – சட்டப்பேரவை கலகல!

நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், அந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசியபோது சபாநாயகர் அப்பாவு மற்றும் அவை முன்னவர் துரைமுருகன் ஆகியோர் பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

நீட் விலக்கு மசோதா

மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் சட்ட மசோதா, தமிழக சட்டப்பேரவையில் கடந்தாண்டு செப்டம்பர் 13-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், 142 நாட்களுக்குப் பிறகு பேரவையின் பரீசிலனைக்காக அதை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இந்த மசோதா உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக இருப்பதாகவும், ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கமளித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 5-ம் தேதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதென முடிவெடுக்கப்பட்டது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம்

அதன்படி, தலைமைச் செயலகத்தின் பேரவை மண்டபத்தில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூடியது. அப்போது, மசோதாவைத் திருப்பி அனுப்ப ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையது அல்ல என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். பேரவையில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “நீட் விலக்கு மசோதா மீதான ஆளுநரின் கருத்து தவறானது. ஏ.கே.ராஜன் குழுவை அவமானப்படுத்துவதாக உள்ளது. கொள்கை அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டத்தை உரிய கண்ணோட்டத்தோடு பார்க்காமல், குறை கூறுவது சரியல்ல. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் திருப்பி அனுப்புகிறேன் என்பது ஏற்கத்தக்கதல்ல’ என்று பேசினார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

உறுப்பினர்கள் பேசிக்கொண்டிருக்கையில் பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் குறுக்கிட்டுப் பேசத் தொடங்கினார். தங்கள் முறை வரும்போது பேசுங்கள் என்று சபாநாயகர் அப்பாவு எடுத்துக் கூறியும் நயினார் நாகேந்திரன் தொடர்ந்து பேச முயற்சி செய்தார்.

அப்போது நயினார் நாகேந்திரன், ஏற்கனவே இந்த அவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டபோது பா.ஜ.க உறுப்பினர்களாகிய நாங்கள் வெளிநடப்புதான் செய்தோம். அந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்படவில்லை’ என்றார். அதற்குப் பதிலளித்த சபாநாயகர்,வாக்கெடுப்பின் போது அவையில் இருப்பவர்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வோம்’ என்று கூறி அவை முன்னவர் துரைமுருகனை அவர் பேச அழைத்தார்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

துரைமுருகன் எழுந்து, ’மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் வெளியே போய்விட்டார்கள். அவையில் இருப்பவர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அப்போது, அந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகவே கருதப்படும். அதனால, இப்போ நீங்க வெளியே போய்டீங்கன்னா, நாங்க ஒருமனதாக நிறைவேற்றிடுவோம்’ என்று கூறி அமர்ந்தார். ஆனால், நயினார் நாகேந்திரன் பேசுவதை நிறுத்தாமல் பேசிக்கொண்டிருக்கவே, மீண்டும் குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு,வெளியே போறதுக்கு இவ்வளவு பில்டப் எல்லாம் தேவையில்லை. வெளியே போறதுன்னா போங்க’ என்றார்.

அவை முன்னவர் துரைமுருகன்
அவை முன்னவர் துரைமுருகன்

தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், `ஆளுநரின் விளக்கத்தைக் குறிப்பிட்டு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேசுகையில், ஏ.கே.ராஜன் குழுவின் கருத்தை அவமதிப்பதாகக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். நிச்சயமாக, ஆளுநரின் நோக்கம் அதுவாகக் கிடையாது. ஏ.கே.ராஜன் அறிக்கையில் இயற்பியல், உயிரியல், வேதியியல் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்..’ என்று பேசினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு,`நீங்கள் அமைச்சராக இருந்தவர். அமைச்சர் பேசும்போது, 12-ம் வகுப்பு வரை அந்த 3 பாடங்களையும் கற்பித்தே வருகிறோம் என்று குறிப்பிட்டுப் பேசினார். தவறாகச் சொல்லவில்லை’ என்று பதிலளித்தார். தொடர்ந்து பேச முயற்சித்த அவரை, நீங்கள் அமருங்கள். வரிசையாக உங்கள் முறை வரும்போது பேசுங்களேன்’ என்றும்,ஜெகன் மூர்த்தி நீங்கள் பேசுங்கள். நீங்கள் அமருங்கள். எல்லோருடைய கருத்துகளையும் கேட்டுக்கொண்டு பதில் சொல்லுங்கள்’ என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தினார். அதன்பிறகு ஜெகன்மூர்த்தி பேசத்தொடங்கினார். பா.ஜ.க உறுப்பினர்கள் நான்கு பேரும் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “பா.ஜ.க, தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. இதை எங்கள் கட்சியைச் சேர்ந்த மாநிலத் தலைவர் உள்பட பல தலைவர்கள் விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவதை பா.ஜ.க எதிர்க்கிறது’ என்று கருத்துத் தெரிவித்தார்.

Also Read – தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டங்கள்… எப்போதெல்லாம் கூட்டப்பட்டிருக்கின்றன? #Rewind

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top