தேர்தலுக்காகக் கட்சி வழங்கிய பணத்தை செலவழிக்காமல் ரூ.4 கோடியில் ஹெச்.ராஜா வீடு கட்டியிருப்பதாகப் புகார் கிளப்பியிருக்கிறார்கள் காரைக்குடி பா.ஜ.கவினர். அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கூண்டோடு ராஜினாமா செய்துவருகிறார்கள். பின்னணி என்ன?
2019 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, 3.24 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வியடைந்தார். அதேபோல், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட அவரால் வெற்றிபெற முடியவில்லை. இந்தநிலையில், தேர்தல் தோல்விக்கு பா.ஜ.க நிர்வாகிகள் சிலர் ஒழுங்காகத் தேர்தல் பணியாற்றததே காரணம் என ஹெச்.ராஜா தலைமையிடம் புகார் கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் காரைக்குடி பா.ஜ.க-வினர் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார்கள்.
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட பா.ஜ.க தலைவர் செல்வராஜுக்கு காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன் கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், ` ஹெச்.ராஜா, தனது தோல்விக்கான காரணங்களை ஆராயமலும் சுய பரிசோதனை செய்துகொள்ளாததாலும் தான் செய்த தவறுகளை மறைப்பதற்காக எங்களது நகர் கமிட்டி மீது குற்றம்சாட்டுகிறார். இதில், ஏதோ உள்நோக்கம் இருப்பதாக அறிகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ஹெச்.ராஜாவின் மருமகன் சூரியநாராயணன் தன்னைத் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் தனது உயிருக்கு ஆபத்து எதுவும் நேர்ந்தால் ஹெச்.ராஜா, அவரது மருமகன், மாவட்ட துணைத்தலைவர் எஸ்.வி.நாராயணன் ஆகியோரே பொறுப்பு என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரம் சர்ச்சையாகியிருக்கும் நிலையில், சிவகங்கை மாவட்டத் தலைவர் செல்வராஜ் கட்சித் தலைமைக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியிருக்கிறார். அவருக்கு ஆதரவாக காரைக்குடி மட்டுமல்லாது சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்து வருகிறார்கள். திருப்புவனம் ஒன்றியத் தலைவர் பாலமுருகன் ராஜினாமோ செய்ததோடு, அந்த ஒன்றியத்தில் இருக்கும் 59 கிளைகளும் ஒட்டுமொத்தமாகக் கலைக்கப்பட்டதாக அறிவித்திருக்கிறார்கள். ஏற்கெனவே தேர்தல் செலவுக்குக் கொடுத்த பணத்தை ஹெச்.ராஜா செலவழிக்கவில்லை என்று அவர் மீது நாடாளுமன்றத் தேர்தலின்போதே குற்றச்சாட்டை பா.ஜ.க நிர்வாகிகள் எழுப்பியிருந்தனர். அத்தோடு, காரைக்குடியில் அவர் ரூ.4 கோடியில் வீடு கட்டுவது, அவரது பண்ணை தோட்டத்தில் புதிய வீடு கட்ட எங்கிருந்து பணம் வந்தது எனவும் காரைக்குடி பா.ஜ.க-வினர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இதனால், ஹெச்.ராஜா மீது பா.ஜ.க தலைமை நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.