ஆளுநர் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் நோக்கில் தமிழக சட்டப்பேரவை-யின் சிறப்புக் கூட்டம் 2022 பிப்ரவரி 8-ல் கூட இருக்கிறது. இதற்கு முன்னர் எப்போதெல்லாம் தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது… என்ன காரணத்துக்காகக் கூட்டப்பட்டது என்பது பற்றி தெரிஞ்சுக்கலாமா?
தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கடந்த 10 ஆண்டு காலத்தில் நான்கு முறை கூட்டப்பட்டிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவை-யின் சிறப்புக் கூட்டங்கள்:
2011 – முல்லைப் பெரியாறு அணை விவகாரம்
முல்லைப் பெரியாற்றில் கேரள புதிய அணை கட்டுவதை எதிர்த்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 2011 டிசம்பர் 15-ல் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு அரசியல் கட்சி உறுப்பினர்களின் ஆதரவோடு, முல்லைப் பெரியாற்றில் புதிய அணையை கேரளா கட்டக் கூடாது என ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2013 – இலங்கை காமன்வெல்த் மாநாடு
இலங்கையில் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 15 முதல் 17 வரை காமன்வெல்த் நாடுகளின் கூட்டம் நடைபெற்றது. இறுதிப் போரின்போது பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கையில் நடக்கும் அந்த மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. இதே கருத்தை வலியுறுத்தி 2013 அக்டோபரில் நடந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசியல் கட்சிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளவில்லை. ஆனால், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் இந்தியக் குழுவினர் பங்கேற்க முடிவு செய்தனர். இந்தசூழலில், அதை எதிர்த்து 2013 நவம்பர் 2-ம் தேதி தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் அவசரமாகக் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டைத் தமிழர்கள் புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
2017 – ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்
கடந்த 2017 ஜனவரியில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடந்தது. குறிப்பாக சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில் 2017 ஜனவரி 23-ல் சட்டப்பேரவை கூடியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையுடன் பேரவை முடிவுற்றது. அதன்பின்னர், நடைபெற்ற பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் , ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு அன்று (2017 ஜனவரி 23) மாலை 5 மணிக்கு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது.
2018 – மேகதாது அணை விவகாரம்
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்தது கடந்த 2018-ல் பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்ப்பைப் பதிவு செய்ய 2018 டிசம்பர் 6-ல் தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தனித் தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் பேரவை உறுப்பினர்களின் ஆதரவோடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக் கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
2022 – நீட் மசோதா
மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்குக் கோரும் சட்ட மசோதா, கடந்தாண்டு செப்டம்பர் 13-ல் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்தநிலையில், 142 நாட்களுக்குப் பிறகு இது கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்று கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி, பிப்ரவரி 1-ம் தேதி திருப்பி அனுப்பினார். இதையடுத்து, பிப்ரவரி 5-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், ஆளுநர் தெரிவித்த கருத்துகள் குறித்து விவாதம் நடத்தி, நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதற்காக, பிப்ரவரி 8-ம் தேதி தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
சட்டப்பேரவை விதி 143
சட்டப்பேரவை விதி எண் 143-ன் கீழ் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா ஒன்றை ஆளுநர், மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்பும்பட்சத்தில், அந்தக் கருத்துகள் குறித்து விவாதிப்பதற்காக சபாநாயகர் சட்டப்பேரவையைக் கூட்ட முடியும். அந்தக் கூட்டத்தில் ஆளுநர் கூறிய கருத்துகள் பற்றி விவாதம் நடத்தி, அந்த மசோதா பற்றி முடிவெடுக்கலாம். இதன்படி, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டப்பேரவை விதி 143ன் கீழ் சட்டமன்றத்தினுடைய சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்டி நீட் சம்பந்தப்பட்ட இந்த சட்ட முன்வடிவை மீண்டும் சட்டமன்றத்தில் விவாதித்து குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என சபாநாயகருக்குக் கடிதம் மூலம் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில் பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
Also Read – ஆளுநர் பதவி எப்படி வந்தது… நியமனம், அதிகாரங்கள் என்னென்ன?