போரிஸ் ஜான்ஸன் மற்றும் கேரி சைமன்ட்ஸ்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரகசியத் திருமணம் – யார் இந்த கேரி சைமன்ட்ஸ்?

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அவரது நீண்டநாள் காதலியான கேரி சைமன்ட்ஸை ஒரு சில தினங்களுக்கு முன்பு ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் குறித்து தனது அலுவலகத்துக்குகூட அதிகாரப்பூர்வமாக போரிஸ் ஜான்ஸன் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அதிகளவில் கூட்டம் கூடக்கூடாது என்பதற்காக அவர் எளிமையாக திருமணம் செய்ய முடிவு செய்திருக்கலாம் என்றும் தெரிகிறது. சரி.. போரிஸ் ஜான்ஸனின் மனைவி கேரி சைமன்ட்ஸ் யார்? அவருடைய பின்னணி என்ன? என்பது பற்றி தான் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

யார் இந்த கேரி சைமன்ட்ஸ்?

மேத்யூ சைமன்ட்ஸ் மற்றும் ஜோஸ்பின் மெக்காஃபி ஆகிய தம்பதியின் மகளாக மார்ச் 17-ம் தேதி 1988-ம் ஆண்டு பிறந்தார், கேரி சைமன்ட்ஸ். மேத்யூ சைமன்ட்ஸ் லண்டனில் மிகப்பெரிய பத்திரிக்கையாளராக உள்ளார். ஜோஸ்பின் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கேரி சைமன்ட்ஸ், இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக்கழகத்தில் நாடகம் மற்றும் கலை வரலாற்றைப் படித்துள்ளார். பின்னர், கன்சர்வேடிவ் கட்சியின் பத்திரிக்கை அதிகாரியாக தனது பணியைத் தொடங்கினார். 2010-ம் ஆண்டு கன்சர்வேடிவ் தலைமையகத்தில் பணிபுரிந்தபோது ஜான்ஸன் மேயராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பெரிய பங்காற்றினார். அதேபோல, 2012-ம் ஆண்டு நடந்த தேர்வுக்கும் பங்காற்றினார்.

Carrie symonds
Carrie symonds

கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய உறுப்பினர்களான ஜான் விட்டிங்கேல் மற்றும் சஜித் ஜாவித் ஆகியோரிடமும் ஊடக சிறப்பு ஆலோசகராக இவர் பணியாற்றியுள்ளார். மேலும், தனது 29-வது வயதில் 2018-ல் கன்சர்வேடிவ் கட்சியில் தகவல்தொடர்பு பிரிவின் மிகவும் இளைய தலைவர் ஆனார். பின்னர், கன்சர்வேடிவ் கட்சியின் பொறுப்பில் இருந்து வெளியேறிய அவர் அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுசூழல் தொடர்பான பிரசாரக் குழுவான ஓசியானாவில் மக்கள் தொடர்புப் பிரிவில் இணைந்தார். கடல் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை இந்த ஓசியானா அமைப்பு ஏற்படுத்துகிறது. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உள்ள டிஸ்கிரிப்ஷனில் `கன்சர்வேஷனிஸ்ட்’ என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

போரிஸ் ஜான்ஸன் மற்றும் கேரி சைமன்ட்ஸ்
போரிஸ் ஜான்ஸன் மற்றும் கேரி சைமன்ட்ஸ்

பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் சுற்றுசூழல் பற்றிய தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் `Aspinall Foundation’ இவரை பணியமர்த்தியதை உறுதிப்படுத்தியது. இந்த அறக்கட்டளை வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பாக செயல்பட்டு வருகிறது. 2018-ம் ஆண்டு வர்த்தகம் தொடர்பான பி.ஆர் இதழில் டாப் 10 அரசியல் தகவல் தொடர்பாளர்களில் ஒருவராக பட்டியலிடப்பட்டார். 2019-ம் ஆண்டு போரிஸ் ஜான்ஸன் பிரதமராக போட்டியிட்டபோது அவரது பிம்பத்தை உயர்த்த பணியாற்றியவர்களில் கேரி சைமன்ட்ஸ் முதன்மையானவர். போரிஸ் ஜான்ஸன், கேரி சைமன்ட்ஸை விட சுமார் 23 வயது மூத்தவர்.

போரிஸ் ஜான்ஸன்
போரிஸ் ஜான்ஸன்

போரிஸ் ஜான்ஸனின் மூன்றாவது திருமணம் இது. கேரி சைமன்ட்ஸூக்கு இது முதல் திருமணம். பிரதமர் மற்றும் கேரியின் முதல் சந்திப்பு பற்றிய தெளிவான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. ஆனால், ஜான்ஸன் தனது இரண்டாவது மனைவியான மெரினா வீலரை 2018-ல் விவாகரத்து செய்வதாக அறிவித்து குறைந்த காலத்திலேயே கேரி சைமன்ட்ஸ் உடனான ரிலேஷன்ஷிப்பை அவர் உறுதி செய்தார். 2019-ம் ஆண்டு முதல் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் விரைவில் திருமணம் செய்யப்போவதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போரிஸ் ஜான்ஸன் அறிவித்தார். இவர்களுக்கு ஒரு வயதில் மகனும் உள்ளார். கடந்த 200 ஆண்டுகளில் பிரிட்டனில் பதவியில் இருந்தபோது திருமணம் செய்துகொண்ட முதல் பிரதமர் என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார்.

Also Read : தகிக்கும் மேற்குவங்க அரசியல்… மம்தா – மத்திய அரசு மோதல் – யார் இந்த அலப்பன் பந்தோபாத்யாய்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top