எடப்பாடி பழனிசாமி

சிந்தனை சிற்பி.. சைனடு குப்பி.. எடப்பாடி பழனிசாமியின் பேச்சுகள் என்ன சொல்லுது?

“அதாவது இதையெல்லாம் பேசணும்னா புராணம் படிக்கோணும். நான் அந்த அளவுக்குப் படிச்சவனில்ல. ஏன்னா இந்த கதையையெல்லாம் படிச்சுச் சொல்லணும்னா ஒரு பெரிய ஆய்வு பண்ணோனும். ஆய்வு பண்ணாதான் உண்மையா பொய்யானு தெரியும். அதுக்கு நான் உட்பட்டவனல்ல’’…. `அதை ஆளுநர்கிட்டதான் கேக்கணும். அவரைப் பாத்து கேக்குற கேள்வியை என்னையைப் பாத்து கேட்டா எனக்கு என்ன தெரியும். அது ஆரியமா… இதானு அறிஞர்கள் பார்த்து கேட்டாதான் தெரியும். அது உண்மையா பொய்யானு ஆய்வு செஞ்சாத்தான் தெரியும். ஏன்னா ஆய்வு பண்ணாம நீங்க கேக்குற கேள்விக்குத் தவறான பதில் நான் கொடுத்துடக் கூடாது. இந்த கேள்விக்கு இடம் தேவையில்லை. இது தேவையில்லாத கேள்வி’ – தமிழ்நாட்டில் ஆரியமும் இல்லை; திராவிடமும் இல்லை என்கிற ஆளுநரின் பேச்சுகுறித்த கேள்விக்கு அதிமுக… அதாவது தன்னுடைய கட்சிப் பெயரிலேயே திராவிடத்தை வைத்திருக்கும் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்ன பதில்… இபிஎஸ் இப்படி பேசுவது இதுதான் முதல்முறையா… இப்படி கேக்குறதே தப்பு, அவர் என்னைக்கு சரியா பேசியிருக்காருனுதான நினைக்கிறீங்க.. எடப்பாடி பழனிசாமி இந்த மாதிரி வேற என்னலாம் எப்படிலாம் பேசியிருக்காருனு பார்ப்போமா?

திராவிடம் என்றால் தெரியாது என்று சொன்ன இதே எடப்பாடி பழனிசாமி ஒரு பொதுக்கூட்டத்தில் திராவிட மாடல் பற்றியும் பேசியிருக்கிறார். அதைப் பத்தி தெரிஞ்சுக்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.

எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டங்கள்ல பேசுனதுலயே ரொம்ப ஸ்பெஷல் ஐட்டம்னா அது தஞ்சாவூர்ல நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கூட்டத்துல பேசுன விஷயம் ஒண்ணு இருக்கு. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரா இருந்த 2017 காலகட்டத்துல தமிழ்நாடு முழுக்க பல்வேறு பகுதிகள்ல எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர்ல நடந்த கூட்டத்துல எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “காவிரி குறுக்கே கல்லணை கட்டிய கரிகால சோழன், கலை, இசை, நாட்டியம் ஆகியவற்றை உலகறியச் செய்த இரண்டாம் சரபோஜி மன்னன், பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பா, கணித மேதை ராமானுஜர், கம்பராமாயணம் தந்த சேக்கிழார், கர்நாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜ சுவாமிகள், கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றவர்களை தந்த பூமி இந்த தஞ்சை பூமி’னு பேசியிருந்தார். அந்த டோன் என்னவோ.. எங்கள் தலைவன், வண்டு முருகன் அண்ணன், பேச்சிலே மன்னன், கருமை நிற கண்ணன், சிந்தனை சிற்பி, சைனடு குப்பின்ற மாதிரியே தான் இருந்துச்சு. சரி, அதைவிடுவோம். அந்தப் பேச்சுலயே ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதிர்ந்து குழம்பிய விஷயம்னா.. கம்பராமாயணம் தந்த சேக்கிழார் மொமண்ட்தான். இதையே பத்தாங்கிளாஸ்ல நாங்க சொல்லியிருந்தா ஃபெயில் பண்ணியிருப்பாங்க. ஆனால், நீங்க சி.எம்மே ஆயிட்டீங்க. வேறலெவல் தல..!

விலைவாசி உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி, மின்கட்டண உயர்வை எதிர்த்து அதிமுக சார்பில் கடந்த 2022 செப்டம்பரில் சிவகாசியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, `இந்தியாவிலேயே தமிழகம் இன்று முன்னணி மாநிலமாக திகழ்கிறதென்றால் 32 ஆண்டுகால ஆட்சியில் அ.தி.மு.க அமைத்த அடித்தளமே காரணம். இந்த அடித்தளமே திராவிட மாடல். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 16 மாதங்கள் ஆகியும் இதுவரை தமிழகத்திற்கு உருப்படியாய் எந்த ஒரு விஷயத்தையும் செய்யவில்லை’’ என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போ என்ன சொன்னீங்க.. திராவிட மாடல் அமைச்சதே அதிமுகதான்.. இப்போ என்ன சொன்னீங்க.. திராவிடம்னா என்னனு தெரியாது.. ரெண்டுல எதுனே உண்மை. புரிஞ்சுதுனே.. ரெண்டுமே உண்மை அதானணே.. இப்படி நாங்களா புரிஞ்சுகிட்டு போனும் அப்படிதான.. ரைட்டு நடத்துங்க!

இதையெல்லாம் விட இன்னொரு காமெடியையும் சமீபத்துல பண்ணிருந்தார் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டில் நீட் எக்ஸாம் வந்ததுல இருந்தே அதுபத்தின விவாதங்கள் சூடாவே நடந்துட்டு இருக்கும். நீட்டை கொண்டுவந்தது யாருங்குற கேள்வியை அதிமுகவும் திமுகவும் மாத்தி மாத்தி கேட்டுவாங்க. இப்படியான சூழல்ல போன ஆகஸ்ட் மாசம் மதுரைல நடந்த அதிமுக மாநாட்டுல பேசிய எடப்பாடி பழனிசாமி, `2019 காங்கிரஸ் ஆட்சி; நீட்டைக் கொண்டுவந்ததே திமுகதான்’னு ஆவேசமா பேசியிருந்தார். மாநாட்டுல கலந்துக்கிட்ட அதிமுக தொண்டர்கள் பலபேரே இந்த ஸ்டேட்மெண்டைக் கேட்டு குழம்பிட்டாங்கனுதான் சொல்லணும். தலைவரே 2019ல மத்தியில இருந்த பிஜேபி கவர்மெண்ட்; அப்போ நாமளும் அவங்க கூட்டணிலதான் இருந்தோம்ங்குறதையே மறந்துட்டுப் பேசுறீங்களேனு மைண்ட் வாய்ஸ்ல பேசிருக்கவும் வாய்ப்பிருக்கு. இதையேதான் அமைச்சர் மா.சுப்ரமணியனும் எதிர்க்கட்சித் தலைவர் குழப்பத்துல இருக்கார்னு கலாய்ச்சிருந்தார். என்ன எடப்பாடி ஐயா.. ஒருதடவை.. ரெண்டு தடவைனா.. முட்டுலாம் கொடுக்கலாம். ஓயாமல் உளறிட்டு இருந்தா எப்படி முட்டிகொடுக்குறது. அட்மின்ஸ் பாவமில்லையா?

Also Read – குஜராத் மாடல்.. இந்தியாவுக்கே ரோல் மாடல்.. உண்மையா? – ரோஸ்ட்!

இதையெல்லாம் தாண்டி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த இடத்துக்கு நான்தான் தகுதியானவன்னு கொஞ்சம் கொஞ்சமா அதிமுக தொண்டர்களுக்குப் புரியவைத்ததோடு, அரசியல் சதுரங்கத்தில் சரியாகக் காய்களை நகர்த்தியது, முதல்வராக சட்டமன்றம் தொடங்கி பொதுவெளி வரை மீடியாவையும் எதிர்க்கட்சிகளையும் சமாளித்ததுன்னு தன்னை ஒரு ஆளுமைமிக்க தலைவராகவே எடப்பாடி பழனிசாமி வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இல்லை தான? இருக்குனு வேற சொல்லுவியா நீனு சண்டைக்கு வராதீங்க.. நானே கம்பராமாயணம் தந்த சேக்கிழாருக்கும், 2019-ல ஆட்சில இருந்த திமுகவுக்கும், ஆய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய திராவிட மாடலுக்கும் கடைசியாக தமிழகத்தின் குழந்தை முகம் கொண்ட எடப்பாடி அண்ணனுக்கும் ஃபேன்தான்.

எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கங்குறதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top