அ.தி.மு.க ராஜ்யசபா எம்.பிக்களான கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் இருவரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் வென்றிருக்கிறார்கள். இதனால், எம்.பி பதவியில் நீடிப்பதா அல்லது எம்.எல்.ஏக்களாகப் பதவியேற்றுக் கொள்வதா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 159 இடங்களில் வென்று பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கிறது. ஆளும்கட்சியான அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. அந்தக் கட்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரில் யாரைத் தேர்வு செய்வது என்பதை முடிவு செய்வதில் குழப்பம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதேபோல், மற்றொரு இடியாப்ப சிக்கலிலும் அ.தி.மு.க இப்போது இருக்கிறது.
அ.தி.மு.க-வின் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர்களான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் இருவரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட்டனர். ஏற்கனவே எம்.பி-யாக இருக்கும் அவர்களுக்கு தேர்தலில் சீட் கொடுக்கப்பட்டபோதே அ.தி.மு.க-வில் சலசலப்பு எழுந்தது. எப்படியும் வெற்றிபெற்று அமைச்சராகிவிடலாம் என்ற எண்ணத்தில் தேர்தலில் அவர்கள் போட்டியிட்டதாக விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.
கே.பி.முனுசாமி, வேப்பனஹள்ளி தொகுதியிலும் வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும் போட்டியிட்டு வென்றனர். வேப்பனஹள்ளியில் கே.பி.முனுசாமி 3,045 வாக்குகள் வித்தியாசத்திலும், ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம் 28,961 வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றனர். அ.தி.மு.க ஆட்சிக்கு வராத நிலையில், எம்.பி பதவியில் நீடிப்பதா அல்லது எம்.எல்.ஏக்களாக நீடிப்பதா என்ற குழப்பம் அவர்களுக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். மாநிலங்களவை எம்.பியான வைத்திலிங்கத்தின் பதவிக் காலம் 2022-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி வரை இருக்கிறது. அதேபோல், கே.பி.முனுசாமியின் பதவிக்காலம் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி வரை இருக்கிறது.
எம்.பி பதவியை ராஜினாமா செய்தால், இரண்டு ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளை தி.மு.க-விடம் விட்டுக்கொடுக்கும் நிலை. மக்களவையிலும் அ.தி.மு.க-வுக்கு ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே இருக்கிறார். இதனால், ராஜ்யசபாவில் தனது பலத்தைக் குறைத்துக்கொள்ள அ.தி.மு.க விரும்பாது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். அதேபோல், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தால் இடைத்தேர்தலை அ.தி.மு.க சந்திக்க நேரிடும். இதுவும் தி.மு.க-வுக்கு சாதகமாகிவிடும் என்று அ.தி.மு.க தலைமை நினைப்பதாகச் சொல்கிறார்கள். தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வு நடைபெறும் முன்னதாக இந்த விவகாரத்தில் ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
Also read – TN Election 2021: 3,000 கையிருப்பு எம்.எல்.ஏ முதல் 10 அமைச்சர்கள் ஷாக் வரை… ரிசல்ட் சுவாரஸ்யங்கள்