90-களில் பொண்ணுப் பார்க்கப் போன மாப்பிள்ளை வீட்டுக்காரங்க.. கோபத்தோட திரும்பிப் போன கதைகள் ஏராளம்… அதுக்கு பாதிக்காரணம், நடிகர் அரவிந்த்சாமி-யாகவே இருந்திருக்கும். அந்த அளவுக்கு பெண் ரசிகர்கள் அரவிந்த் சாமிக்கு இருந்தது.
சாக்லேட் பாய் டு டிரெண்ட் செட்டிங் வில்லன்… அரவிந்த் சாமியின் இந்த அசாத்தியப் பயணம் எப்படி சாத்தியமானது… 6 பாயிண்டுகளில் தெரிஞ்சுக்கலாமா?
அரவிந்த்சாமி கரியர்
ஆரம்பமே அதகளம்
அரவிந்த்சாமியோட கரியர் விளம்பரப் படங்கள்ல இருந்துதான் தொடங்குச்சு. இவருக்கு முதல் விளம்பரப் பட வாய்ப்புக் கிடைச்ச சம்பவம் ஆக்ஸிடண்டலா நடந்தது. அரவிந்த்சாமியோட நண்பர் ஒருத்தர் மாடலா இருந்திருக்கார். அவர் மாடலிங் போன ஒரு இடத்துக்கு அரவிந்த்சாமியும் கூடப் போயிருக்கார். அந்த ஷூட்ல இருந்த டைரக்டர், தம்பி நீங்க ஓரமா நில்லுங்க’னு அரவிந்த்சாமியோட நண்பர்கிட்ட சொல்லிட்டு,நீங்க வந்து நடிங்க’னு அரவிந்த்சாமிகிட்ட கேட்ருக்கார். அவரும் ஓகே சொன்ன பிறகு விளம்பரப்படத்துல நடிச்சார். அதுல இருந்துதான் மாடலா தன்னோட வேலையை பாக்கெட் மணிக்காக ஆரம்பிச்சிருக்கார், அரவிந்த்சாமி.
மாஸ் ஆக்டிங்
இயக்குநர் மணிரத்னத்தின் `தளபதி’ மூலம் 1991-ம் ஆண்டில் தமிழ் சினிமாவுல முதல்முதலா என்ட்ரி கொடுத்தார். அப்போ கலக்டரேட் ஆபீஸ் சீன்… ரஜினி, மம்முட்டி, நாகேஷ்னு பல ஜாம்பவான்கள் கூட இருக்குறப்போ.. அரவிந்த்சாமி அதட்டல் தொனியில பேச வேண்டிய சீன் அது. அதை அசால்ட்டா பண்ணி முடிச்சார், அரவிந்த்சாமி. ஷூட் முடிஞ்சதுக்கு அப்புறமா, நாகேஷ் வந்து அரவிந்த்சாமிகிட்ட ‘கரெக்டா சொல்லு, இதுதான் உனக்கு முதல்படமா?.. பார்த்தா அப்படி தெரியலையே’னு சொல்லியிருக்காரு. இன்னைக்கும் அந்த சீனை பார்க்குறப்போ அரவிந்த்சாமி கண்ல எந்த நடுக்கம் இல்லாம மனுஷன் தெறிக்கவிட்ருப்பார். அந்த அளவுக்கு முதல் படத்துல தன்னோட நடிப்பால முத்திரை பதிச்சார், அரவிந்த்சாமி.
ரோஜா கொடுத்த லைம்லைட்!
அடுத்த வருஷமே மணிரத்னத்தோட ரோஜா படத்தின் மூலம் ஹீரோவானார், அரவிந்த் சுவாமி, இந்த படத்துல இருந்துதான் ஏகப்பட்ட இளம்பெண்களின் கனவு நாயகனா மாறினார். ரோஜாவுல ஒரு லவ் சீன்ல “நான் ஒண்ணும் ரொம்ப மோசமானவன் இல்லை கொஞ்சம் நல்லவன்தான்” சொல்ற இடமாகட்டும், தாய்நாட்டுக்காக உருகுற இடமாகட்டும் வேறலெவல்ல இருக்கும். காதல் ரோஜாவே பாட்டுக்கு தன் நடிப்பால் உயிர் கொடுத்திருப்பார், அரவிந்த்சாமி. அதுக்குப் பின்னாலதான் தமிழ் சினிமாவின் கனவு நாயகனாகக் கொண்டாடப்பட்டார் அரவிந்த்சாமி.
Also Read:
பேஸ் வாய்ஸ்
90ஸ் தமிழ் சினிமா ரசிகைகளின் ஆதர்ஸ ஹீரோக்களின் அரவிந்த்சாமி முக்கிய இடம் பிடிக்கக் காரணமான இன்னொரு விஷயம் அவரது பேஸ் வாய்ஸ். ரகசியம் பேசும் தொனியில் தான் பேச நினைப்பதை பிசிறு இல்லாமல் ஒலிக்கும் அரவிந்த்சாமியின் வாய்ஸுக்கு ரசிகைகள் ஏராளம் என்று சொல்லலாம். டயலாக் டெலிவரியும் அவரின் மாடுலேஷனும் வேற ரகம். அரவிந்த்சாமி டயலாக்கை அரவிந்த்சாமியால்தான் பேச முடியும். பம்பாய் படத்தில், `நான் உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்துருவேன். நீ எனக்காக வருவியா?’ என மனிஷா கொய்ரலாவிடம் உருகும் சேகர் கேரக்டர் கேட்கும் இடம் உணர்வுக் குவியல். தளபதி கலெக்டர் கேரக்டர் மாஸ்னா… பம்பாய் சேகர் கேரக்டர் அரவிந்த்சாமி கரியர்ல கிளாஸ்னு சொல்லலாம்.
அலட்டிக் கொள்ளாத attitude!
ஸ்டார் அந்தஸ்து வந்த பின்னால, எனக்கு இந்த அந்தஸ்து எல்லாம் தேவையில்லனு யாருமே விலகிப் போக மாட்டாங்க. சினிமாவில் ஸ்டார் அந்தஸ்துங்குறது அரசியல்வாதிகளோட நாற்காலி ஆசை மாதிரினு கூட சொல்லலாம். இவ்வளவும் அன்னைக்கு அரவிந்த்சாமிக்கு கிடைச்சது. அதை எதையுமே மனசுல வச்சுக்காம தூக்கி ஓரமா வச்சுட்டு, அப்பாவோட கம்பெனியைப் பார்க்க ஆரம்பிச்சுட்டார். அப்போ மட்டும் அதை அரவிந்த்சாமி கெட்டியா பிடிச்சு நடிக்க ஆரம்பிச்சிருந்தா, இன்னைக்கு முன்னணி நடிகர்கள் வரிசையில முக்கியமான இடம் கிடைச்சிருக்கும்.
ப்ரோ ரிலீஸ் என்ற நிறுவனத்தில் இயக்குனராகவும், இன்டெர்ப்ரோ என்ற நிறுவனத்தில் தலைவராகவும் இருந்தார். பின்னர் தானே சொந்தமாக டேலண்ட் மேக்சிமஸ் என்ற கன்சல்டன்சி நிறுவனத்தை ஆரம்பிச்சார். இப்படி இருந்தவருக்கு ஒரு விபத்தினால் முதுகு தண்டுவடத்துல காயம் ஏற்பட்டு, நாலு வருஷங்கள் படுக்கையிலயே கழிச்சார். இதனால அவரோட தோற்றம் மாறி குண்டனார். நிலைகுலைந்த தனிமையில் இருந்தவரை, `நீ பழைய பன்னீர்செல்வமா நடிக்க வரணும்’னு உரிமையாக் கூப்பிட்டு கடல் படத்துல மணிரத்னம் நடிக்க வைச்சார். 13 வருஷங்களுக்குப் பிறகு மணிரத்னம் மூலமா 2013-லதான் கடல் படத்துக்கு திரும்பி வந்தார்.
ஹீரோவை ஓவர்டேக் செய்த வில்லன்!
மோகன்ராஜாவின் தனி ஒருவனில் சித்தார்த் அபிமன்யூ என்ற வொயிட் காலர் கிரிமினல் கேரக்டராகவே வாழ்ந்திருப்பார். தமிழ் சினிமா வில்லன்களுக்கென அதுவரை வகுக்கப்பட்டிருந்த விதிகளை எல்லாம் ஜஸ்ட் லைக் தட்னு லெஃப்ட் ஹேண்ட்ல தட்டி சுக்கு நூறா உடைச்ச கேரக்டர் அது. வில்லன் தோற்கடிக்கப்படும்போது கொண்டாடுவதுதானே இயல்பு. ஆனால், தனி ஒருவன் கிளைமேக்ஸில் சித்தார்த் அபிமன்யூ இறக்கும் தருவாயில், ‘நீ கொடுத்த வாழ்க்கைய நான் ஏத்துக்கல; நீ கேட்ட வாழ்க்கைய நான் கொடுத்துட்டேன். நாட்டுக்காகலாம் இல்ல, நீ கேட்ட.. நான் கொடுத்துட்டேன்’ங்குற டயலாக் வேற லெவல்ல இருக்கும். ஹீரோவைத் தாண்டி, ச்சே… சித்தார்த்துக்கு இந்த முடிவு ஏற்பட்டிருக்க வேண்டாமே’ என்று தமிழ் சினிமா ரசிகனை உச் கொட்ட வைத்தது அரவிந்த்சாமியின் நடிப்புக்குக் கிடைத்த பரிசுதானே?
வேற எதுவும் வேண்டாங்க… இன்னிக்கும் தனி ஒருவன் படம்னு நீங்க நினைச்சுப் பார்த்தாலே…. கோட் சூட்டில் கூர்மையாகப் பார்க்கும் அரவிந்த் சாமியும், தீமைதான் வெல்லும்’ தீமில் அவரோட பெர்ஃபாமென்ஸும்தான் உங்களுக்கு முதல்ல நினைவுக்கு வரும். தமிழ் சினிமாவின் ஆல்டைம் டாப் வில்லன் கேரக்டர்களில் சித்தார்த் அபிமன்யூவுக்கு நிச்சயம் டாப்ல ஒரு இடம் தாராளமா கொடுக்கலாம். அதுக்கப்புறம், செக்கச்சிவந்த வானம் வரதனாக ரௌத்திரம் பழகிய அரவிந்த்சாமி, சமீபத்தில் வெளியான `தலைவி’யில் எம்.ஜி.ஆரை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்.
எல்லாத்தையும கடந்து `வெள்ளை மழை’ பாடல் ஒலிக்கும்போது, அந்த கிளாசிக் அரவிந்த் சாமி நிச்சயம் நம் நினைவில் ஒரு செகண்டாவது வந்து போவார்!
Also Read – Prabhu: இந்த 9 கேரக்டர்கள் பிரபுவால் மட்டுமே சாத்தியம்..!