‘கொரோனா’ கொடும் தொற்றால்…. மயானங்களில், இரவும் பகலும் இடைவிடாமல் பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கின்றன. எரிகிற பிணங்கள் சாம்பலாவதற்குள், அடுத்தடுத்த பிணங்கள் வந்து குவிகின்றன. மயான ஊழியர்கள், ” ‘தங்கள் வாழ்நாளில் இவ்வளவு பிணங்களை எரித்ததித்திலை; இத்தனை பிணங்களை எரிக்கும் நெருக்கடி ஏற்படும்’ என்று கனவிலும் நினைத்ததில்லை” என்கின்றனர். டாக்டர்கள், நர்சுகள், போலீஸ்காரர்களைப் போல, மயான ஊழியர்களும் இரவும் பகலும் இடைவிடாமல் பணியாற்றுகின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் பிணங்களை எரிக்க மயானத்தில் இடம் இல்லாத காரணத்தால், புதிய தற்காலிக மயானங்கள் உருவாக்கப்பட்டன. அதற்குப்பிறகும், பிணங்களை எரிக்க இடமில்லை. அதனால், நூற்றுக்கணக்கான பிணங்களை கங்கையில் வீசி எறிந்தனர். நீரில் அழுகிக் கிடந்த பிணங்களை நாய்கள் கடித்துக் குதறும் காட்சிகள் உலகையே உலுக்கி எடுத்தன.
தமிழகத்தில் நிலைமை அவ்வளவு மோசமில்லை. ஆனால், இடைவிடாது எரியும் பிணங்கள், எரிப்பதற்கு வந்து குவியும் பிணங்கள், அதில் புரளும் வியாபாரம் எல்லாம் தமிழகத்திற்கும் அதிர்ச்சியான புதுமையாகத்தான் உள்ளது.
கல்லறை போகும்வரை சில்லறை தேவை!
“கல்லறை போகும் வரை சில்லரை தேவை” என்பதற்கு மற்ற காலகட்டத்தில், பலவகையான வியாக்கியானங்களைச் சிந்திக்கலாம். ஆனால், “அதற்கு எந்தத் தேவையுமில்லை; இது மட்டும்தான் அர்த்தம்” என்று கொரோனா காலகட்டம், பிணங்களை எரிப்பதற்கான பேக்கேஜைக் காட்டுகிறது. அதன்படி, இன்றைய தேதியில், தமிழகத்தில் ஒரு பிணத்தை கண்ணியமான முறையில் எரிப்பதற்கு சுமார் 19 ஆயிரம் முதல் அதிகபட்சம் 25 ஆயிரம் வரை செலவாகிறது. வசிக்குமிடம் அமைந்திருக்கும் நகரம், நகரத்தில் இருந்து மயானம் உள்ள தூரம் அதைப் பொறுத்து இந்தக் கட்டணத்தில் சில பேரங்கள் உண்டு. ஆனால், 20 ஆயிரம் ரூபாய் இருந்தால் மட்டும்தான் இப்போதைக்கு இறந்தவரின் பிணத்தை எளிமையாகவும், கண்ணியமாகவும் எரிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பது அப்பட்டமான எதார்த்தம்!
உறவினர்கள் தொடக்கூட தேவையில்லை!
மரணமடைந்தவரின் உறவினர்கள், சொந்தங்கள், இந்த பேக்கேஜ் நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தகவல் சொன்னால் போதும். போனிலேயே பேக்கேஜ் தொகையைப் பேசி முடித்து உறுதி செய்து விடுகின்றனர். பேரம் படிந்து, பேக்கேஜ் உறுதியானதும் அவர்களே வண்டியில் வீட்டிற்கு வந்து பிணங்களை எடுத்துக் கொள்கின்றனர். கொரோனா பிணங்கள் என்றால், பெற்ற பிள்ளைகள் கூட பக்கத்தில் வருவதில்லை. அதைப் புரிந்து கொண்ட இந்த ‘பேக்கேஜ்’ நிறுவனங்கள், அந்த சிரமத்தையும் உறவினர்களுக்குக் கொடுப்பதில்லை. அவர்களே பிணத்தை வண்டியில் ஏற்றி மயானத்தில் சேர்த்து விடுகின்றனர். இறந்தவரின் உறவினர்களோ… பிள்ளைகளோ… பிணத்தின் அருகில் கூட செல்லத் தேவையில்லை.
மாநகராட்சி பதிவும்… கொள்ளிக்குடமும்…
அதுபோல், மயானத்தில் எரிப்பதற்கு எந்தப் பதிவும் இறந்தவரின் உறவினர்கள் செய்யத் தேவையில்லை. மாறாக, இந்த நிறுவனங்களே, மாநகராட்சியில் 2500 ரூபாய் கட்டணம் செலுத்தி, ரசிது வாங்கி விடுகின்றனர். பிணங்கள் அதிகம் இருக்கும் நேரத்தில், இவர்களுக்கும், மயான ஊழியர்களுக்கும் இடையில் இருக்கும் உடன்பாட்டின்படி, இவர்கள் கொண்டு செல்லும் பிணங்களுக்கு விரைவில் டோக்கன் கிடைக்கிறது. பொதுமக்கள் அவர்களாக முயற்சி செய்தால், டோக்கன் கிடைப்பதும் சிக்கலாகிறது. அப்படியே கிடைத்தாலும், முதல் நாள் இரவில் இறந்தவர்களை, மறுநாள் மாலை அல்லது அதற்கடுத்த நாள் எரிப்பதற்குத்தான் டோக்கன் கிடைக்கிறது.
இறுதிச் சடங்கிற்கான பொருள்களையும் அவர்களே வாங்கி வந்து விடுகின்றனர். கொள்ளிக்குடத்திற்கு ஒரு மண்பானை, ஒரு தேய்காய், 4 வாழைப்பழம், இரண்டு கற்பூரக் கட்டிகள், ஒரு பத்தி பாக்கெட் போன்றவை ரெடிமேடாக அவர்களிடம் இருக்கிறது. அதுபோல், உறவினர்கள் மயானத்தில், ஒரு மணி நேரம் காத்திருந்தால், எரிக்கப்பட்ட பிணத்தின் சாம்பலையும் அப்போதே பெற்றுக் கொள்ளலாம். இல்லையென்றால், சாம்பல் டோக்கனைப் பெற்றுக் கொண்டு, மறுநாள் காலை வந்து சாம்பலைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த இக்கட்டான காலத்தில், இப்படியொரு வசதியை வரமாகப் பார்ப்பதா? அல்லது இந்த இக்கட்டான காலகட்டத்தில், விழும் பிணத்திலும் வியாபாரமா… என விமர்சனம் செய்வதா? என்றால், அது அவரவர் கையில் இருக்கும் காசைப் பொருத்தது.
Also Read – `ஆன்லைன் கிளாஸுக்கு டவலோடு வந்தார்!’ பாலியல் தொல்லை புகாரில் சென்னை பள்ளி ஆசிரியர்