கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்து தினமும் சோகமான செய்திகளை மட்டுமே அதிகமாக கேட்டுக்கொண்டிருக்கிறோம். இதுமட்டுமல்லாமல் ஊரடங்கு விதிகளும் கடுமையாக போடப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் பலரும் மன அழுத்தங்களுக்கு ஆளாகி பாஸிட்டிவ் எனர்ஜியை இழந்து காணப்படுகின்றனர். எல்லா நேரங்களிலும் பாஸிட்டிவ் எனர்ஜியுடன் இருப்பது கடினம் என்றாலும் முடிந்த வரை பாஸிட்டிவான எண்ணங்களுடன் இருக்க முயற்சி செய்யலாம். இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த ஹர்ஷினி ராஜி என்பவர் `மென்டல் வெல்னஸ்’ என்ற சேட்பாட் ஒன்றை உருவாக்கி மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்காக மக்களுக்கு உதவி வருகிறார்.
ஹர்ஷினி ராஜி, கடந்த 2020-ம் ஆண்டு கடுமையாக விதிக்கப்பட்ட ஊரடங்கு நாள்களின் போது மனநல ஆரோக்கியத்தைப் பற்றி படிக்க ஆரம்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மக்களுக்கு மனநலம் சார்ந்து உதவ முடிவும் செய்துள்ளார். இதுதொடர்பாக ஹர்ஷினி ராஜி பேசும்போது, “மன ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. மக்கள் மெதுவாக தங்களது போராட்டங்களைப் பற்றி பேசத் தொடங்கினார்கள். ஊரடங்கு விதிக்கப்பட்ட போது மக்கள் மன அழுத்தங்களில் இருந்து விடுபட என்னுடைய சேட்பாட் அவர்களுக்கு உதவக்கூடும் என்று நினைத்தேன். பலரின் மத்தியிலும் இந்த சேட்பாட் பரவலாக கவனம் பெற்றபோது இதனை ஆப்பாக உருவாக்க நான் விரும்பவில்லை. ஏனெனில், இதை ப்ளே ஸ்டோரில் தேடி பயன்படுத்த பலருக்கும் நேரம் இருக்குமா என்பது தெரியாது” என்று கூறினார்.
ஃபேஸ்புக்கில் ஹர்ஷினி சாட்பாட் ஒன்றை உருவாக்கியுள்ளார். இது அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடிய ஒன்றாக உள்ளது என்ற ஹர்ஷினி, “சாட்பாட்டை உருவாக்கும் முன் நடைமுறை சிக்கல்களைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தில் இருந்தேன். மனதளவில் சிரமப்படுபவர்களுக்கு உதவி செய்ய நான் மருத்துவ நிபுணர் ஒன்றும் இல்லை. இதனால், மக்களின் உளவியலைப் புரிந்துகொள்ள சில கோர்ஸ்களைப் படித்தேன். கோர்ஸ் முடிந்ததும் சாட்பாட்டை உருவாக்கினேன். ஆரம்பத்தில் மூன்று விஷயங்களின் மீது கவனம் செலுத்தினேன். சாட்பாட் மக்களுக்கு பாஸிட்டிவான எண்ணங்களை அளிக்கிறது. இதனையடுத்து மெடிட்டேஷன் மற்றும் கிரேட்டிடியூட் ஜார்னலிங்க்கு முக்கியத்துவம் அளிக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய ஹர்ஷினி, “மக்கள் மெடிட்டேஷனை தேர்வு செய்தால் பாட் ஐந்து நிமிட ஆடியோ கிளிப் ஒன்றை அவர்களுடன் பகிர்ந்துகொள்கிறது. இது மெடிட்டேஷனுக்கான வழிகளை மக்களுக்கு காட்டுகிறது. டூட்லிங்கில் ஈடுபடுவதற்கும் மக்களுக்கு உதவுகிறது. இதன்மூலம் ஆங்ஸைட்டியை கையாள மக்களுக்கு உதவி கிடைக்கிறது. இந்த சாட்பாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல உளவியலாளர் ஒருவருடன் இணைந்து பணியாற்றத் திட்டமிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். ஹர்ஷினி நாள்கள் செல்ல செல்ல தோட்டக்கலை, அடிப்படை உடற்பயிற்சிகள், இம்மியூனிட்டியை வளர்ப்பதற்கான டிப்ஸ்கள் போன்ற புதிய கேட்டகிரிகளையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
சுகாதாரத்துறையில் உள்ள இடைவெளிகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் அதிகளவில் குறைப்பதாக ஹர்ஷினி ராஜி கருதுகிறார். “மக்கள் டிஜிட்டல் டிரான்ஸ்மிஷன் மூலம் உதவி பெற முடியும். தெரபிஸ்டை பலருக்கும் பல்வேறு காரணங்களால் அணுக முடியாத நிலை இருக்கும். சாட்பாட்கள் மற்றும் மென்டல் வெல்னஸ் ஆப்கள் மூலம் மக்கள் தங்களது மனநலம் சார்ந்த போராட்டங்களை சரிசெய்ய முடியும். இந்தத் துறையில் அரசாங்கம் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார். டெலிகிராமில் சாட்பாட்டை உருவாக்குவதே ஹர்ஷினி ராஜியின் எதிர்காலத் திட்டமாக உள்ளது. இத்தகைய சாட்பாட்கள், யாரோ ஒருவர் தங்களுடைய பிரச்னைகளை கேட்பதற்கு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை மக்களுக்கு அளிப்பதால் பரவலாகக் கவனம் பெற்று வருகிறது.
Also Read : கொரோனா ஊரடங்கில் பாஸிடிவ்வாக இருக்க 6 வழிகள்!