`பருத்திவீரன்’ தமிழ் சினிமாவுக்கு ஏன் ஸ்பெஷல்… 5 காரணங்கள்!

`ஆமா ஆமா ஆமோய்’ என்று நய்யாண்டி மேளத்தின் உற்சாகத்துடன் தொடங்கி க்ளைமேக்ஸில் ‘வலிக்குதுடா வீரா’ என்று வெடித்து அழ வைத்து அனுப்பிய பருத்திவீரனை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? அமீருக்கு மாஸ்டர்பீஸ், கார்த்திக்கு நல்ல அறிமுகம், பிரியாமணிக்கு தேசியவிருது, சித்தப்பு சரவணனுக்கு கம்பேக், யுவனோட இசை ராஜ்ஜியம் இப்படி நிறைய பேருக்கான வாழ்க்கையை மாற்றியமைத்த ஒரே படம். 15 வருடங்கள் கடந்தும் மக்கள் மனதில் நிற்கும் பருத்தி வீரன் படத்தின் 5 முக்கியமான விஷயங்களைப் பார்க்கலாம்.

கார்த்தியின் நடிப்பு

கார்த்தி - பிரியாமணி
கார்த்தி – பிரியாமணி

மெட்ராஸ் ஜெயிலைப் பார்ப்பதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு ஊருக்குள் ஒரண்டை இழுத்துத் திரியும் சண்டியர் கேரக்டர் கார்த்திக்கு. “அப்பத்தா… இவன்தான் சிவக்குமாரோட இளையமகன்.. வெளிநாட்டுல படிச்சிருக்காப்ல” என்று பருத்திவீரன் போஸ்டரை தண்டட்டி கிழவிகளிடம் காட்டியிருந்தால் எந்தக் கிழவியும் நம்பியிருக்காது. அந்தக் கேரக்டருக்கு அப்படியே பொருந்தியிருப்பார். அழுக்கு லுங்கியும் ஷேவிங்கே பார்த்திராத தாடியுமாக ‘கண்ணை மூடுனா கனவுல நீதானே’ என்று ரவுசு காட்டிய கார்த்திக்கு சிட்டி பெண்களும் லவுசு காட்டினார்கள். ஒரு ஹீரோவுக்கு முதல் படம்னா தக்காளி இப்படி அமையணும்டா என்று இண்டஸ்ட்ரியவே பொறாமைப் பட வைத்தது பருத்திவீரன்.

பிரியாமணியின் நடிப்பு!

பிரியாமணி
பிரியாமணி

‘நீ கொன்னாக்கூட குத்தமில்ல’ என்று ஹீரோவை உருகி உருகிக் காதலிக்கும் ஹீரோயின். இந்த ஒரு விசயத்தைத் தவிர வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயின்களின் எந்தச் சாயலும் இல்லாத கிராமத்து முத்தழகுவாக வாழ்ந்திருந்தார் பிரியாமணி. அப்பாவிடம் அடி வாங்கிய பின்னரும், திமிராகச் சாப்பிட்டு ஸ்கோர் செய்யும் பருத்தி வீரனின் லேடி வெர்சன். பருத்திவீரனை கல்யாணம் செய்ய அவருடைய சித்தப்பா சம்மதிக்கும்போது ‘யோவ் எழுந்திரு’ என்று மிரட்டல் தொனியில் அதட்டி ‘ஆசிர்வாதம் பண்ணு மாமா’ என்று சடாரென்று காலில் விழுந்து நெகிழ வைத்ததும், கிளைமேக்ஸில் ‘வலிக்குதுடா வீரா’ என்று கதற வைத்ததும் முத்தழகுவாக பிரியாமணி நடிப்பில் மின்னிய தருணங்கள். நேசனல் அவார்டு சும்மா கிடைச்சுடுமா!

அமீரின் திரைமொழி!

ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த தந்தைக்கும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்து பெற்றோரை இழந்து சித்தப்பாவிடம் வளர்ந்து அவருடன் சேர்ந்து சண்டித்தனம் செய்துகொண்டு திரியும் இளைஞன், தன் அத்தை மகளின் அப்பழுக்கற்ற காதலால் மதிக்கத்தக்க மனிதனாகக் கனிவதும் அந்தப் பெண்ணைப் பெற்றவர்கள், சுற்றத்தினரின் சாதிய மேட்டிமை உணர்வால் அந்தக் காதலுக்குக் கிடைக்கும் எதிர்ப்பும் அதனால் காதலர்களுக்கு என்ன ஆகிறது என்பதும்தான் ‘பருத்திவீரன்’ படத்தின் ஒன்லைன். இந்தக் கதைக்கு அனைத்து இயல்பான மனித உணர்வுகளையும் உள்ளடக்கிய உயிர்ப்பும் மிக்க திரைக்கதை அமைத்து மிக மிக யதார்த்தமான உண்மைக்கு மிக நெருக்கமான கிராமிய வாழ்வை தன் திரைமொழியால் பதிவு செய்திருப்பார் இயக்குநர் அமீர். ஒரு படைப்பாளியா அவருடைய மாஸ்டர் பீஸ் என்றும் சொல்லலாம்.

அமீர்
அமீர்

நாட்டாரியல் இசை நாயகன் யுவன் சங்கர் ராஜா

‘தீப்பிடிக்க தீப்பிடிக்க’, ‘லூசுப் பெண்ணே’ என்று வெஸ்டர்ன் இசையில் கலக்கிக் கொண்டிருந்த யுவனிடம் பருத்திவீரன் மாதிரி மண்மனம் வீசும் ஆல்பத்தை தமிழ் சினிமாவே எதிர்பார்த்திருக்காது. இளையராஜாவின் குரலில் ‘அறியாத வயசு’ ரயில் தாலாட்டு என்றால் ‘அய்யய்யோ’ கிராமியக் காதலின் தேசிய கீதம். ‘ஊரோரம் புளியமரம்’ பாடல் நாட்டாரியல் இசைக் கருவிகளை சினிமாவுக்கான எந்த மாற்றங்களையும் செய்யாமல் அப்படியே ஒலிக்கச் செய்த அரிதான பாடல். அந்தப் பாடலும் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் பாடல்களில் ஒன்று. பாடல்கள் மட்டுமில்லாமல் படத்தின் பின்னணி இசையும், தீம் மியூசிக்குமே மிகப்பெரிய ப்ளஸ். என்ன ஒண்ணு இதுக்கு ஒரு தேசிய விருது கொடுத்திருக்கலாம்.

சரவணன் - கார்த்தி
சரவணன் – கார்த்தி

சித்தப்பு சரவணன்

‘நீ பண்றா மகனே.. பார்த்துக்கலாம்’ என்று மகனின் எல்லாக் கிரைமிலும் உடனிருக்குற சித்தப்பு கேரக்டரில் கலக்கியிருந்தார் சரவணன். மகனோடு சேர்ந்து ஆட்டமான ஆட்டம் ஆடுகிற போதும்.. பிரியாமணியின் உண்மைக் காதலை உணர்ந்து கார்த்திக்கு கண்கலங்க புத்திமதி சொல்லும் போதும் இருவேறு பரிமாணங்களைக் காட்டினார். கார்த்தியின் மெனக்கெடலான திமிர் உடல்மொழியை அசால்ட்டாக செய்துகாட்டினார், சரவணன். கிட்டத்தட்ட படத்தின் இரண்டாவது ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு மனதில் நிறைந்து நின்றார். நீண்ட நாளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த சரவணனுக்கு இந்தப் படம் கம்பேக் படமாக அமைந்தது.

Also Read – கார்த்திக் சுப்புராஜ் முதல் லோகேஷ் கனகராஜ் வரை… ஃபேன் பாய் மொமண்ட் இயக்குநர்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top