சர்வைவர் – தமிழின் முதல் சீசன்! – எப்படி இருந்தது +/- ரிப்போர்ட்

விஜயலட்சுமி, சரண், உமாபதி, நாராயணன், ஐஸ்வர்யா, விக்ராந்த், அம்ஜத், நந்தா, லட்சுமி பிரியா, பெசண்ட் ரவி, வி.ஜே.பார்வதி, ராம்.சி, காயத்ரி, இந்திரஜா, ஸ்ருஷ்டி டாங்கே, லேடி காஷ் என் மொத்தம் 16 போட்டியாளர்களோடு ஆரம்பிக்கப்பட்ட சர்வைவர் நிகழ்ச்சியில் இடையில் வனேசா மற்றும் இனிகோ பிரபாகர் போட்டியாளர்களாக சேர்க்கப்பட்டனர். ஜி தமிழ் சேனலில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்க கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு ஆரம்பித்த நிகழ்ச்சி தற்போது முடிந்திருக்கிறது. நடிகை விஜயலட்சுமி இந்த நிகழ்ச்சியில் வெற்றிப்பெற்று 1 கோடி ரூபாய் பரிசையும் வென்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் நிறை, குறைகளை இந்த கட்டுரையில் பார்க்கலாமா…

சர்வைவர்
சர்வைவர்

சர்வைவர் நிகழ்ச்சியின் ஃபார்மட்:

சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு காடர்கள், வேடர்கள் என பெயரிடப்பட்டு இரண்டு வெவ்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். இவர்களுக்கும் வாரம் மூன்று டாஸ்குகள் நடக்கும். முதலில் அந்த வாரத்தின் குழுவின் தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க். இரண்டாவது டாஸ்க், ரிவார்ட் சேலன்ஜ். இதில் வெற்றிப்பெறும் ஒரு அணிக்கு சில ரிவார்ட்ஸ் கொடுக்கப்படும். அது உணவாகவோ அல்லது அங்கு தங்குவதற்கு தேவையான பொருட்களோ என வாராவாரம் ரிவார்ட் மாறிக்கொண்டே இருக்கும். மூன்றாவது டாஸ்க் இம்யூனிட்டி சேலன்ஜ். இதில் வெற்றிப்பெறும் அணிக்கு அந்த வாரம் எலிமினேஷன் கிடையாது. தோல்வியடையும் அணி, அன்று இரவு நடக்கும் ட்ரைபல் பஞ்சாயத்தில் அவர்களுக்குள் ஒருவரை ஓட்டுப்போட்டு எலிமினேட் செய்ய வேண்டும். அப்படி ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு ஒரு மறுவாய்ப்பு தரப்படும். அங்கே இருக்கும் கால் சிலம்புகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். அதில் வெள்ளை முத்துக்கள் இருந்தால் அவரின் எலிமினேஷன் உறுதி. தங்க முத்துகள் இருந்தால் அவர் காப்பாற்றப்படுவார். ஆனால், அவருக்கு பதிலாக இன்னொருவரை அவரே தேர்வு செய்து எலினிமேட் செய்ய வேண்டும்.

Also Read : பிக் பாஸ் சீசன் 5 : 50 நாள்களில் நடந்தது என்ன!?

மூன்றாம் உலகம்

மெயின் கேமில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டவர், மூன்றாம் உலகம் என்ற தனித்தீவுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அங்கே அவர்களுக்கு சில டாஸ்குகள் கொடுக்கப்படும். அதில் வெற்றிப்பெறுபவருக்கு மறுபடியும் மெயின் கேமில் விளையாட வாய்ப்பு தரப்படும். தோல்வியடைந்தவர் போட்டியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்படுவர். அதிலும் நிகழ்ச்சியில் பாதி நாட்கள் கடந்தப்பிறகு வெளியேறும் போட்டியாளர்களை ஜூரிகளாக மாற்றி ஃபைனலின் போது ஃபைனலிஸ்ட் போட்டியாளர்களுக்கு ஓட்டுப் போட வைத்து வின்னர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

சர்வைவர் நடைபெற்ற தான்சானியா தீவு
தான்சானியா தீவு

களம்:

பல சேனல்களின் ரியாலிட்டி ஷோக்களில் இருந்து மாறுபட்டு, வித்தியாசமான களத்தில் இந்தப் போட்டி நடக்கிறது என்பதாலேயே மக்களுக்கு இந்த நிகழ்ச்சி மீது ஒரு எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது. இந்தியாவில் இருந்து சுமார் 5000 கிலோமீட்டர் தொலையில் இருக்கும் சான்சிபார் –  தான்சானியா தீவில் இந்தப் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சி நடந்த 90 நாட்களில் போட்டிகளை காட்டியதோடு, இந்த தீவின் அழகையும் அவ்வப்போது காட்டியதால் இந்த களமும் நிகழ்ச்சியின் நிறைகளில் ஒன்றாகிவிட்டது.

சர்வைவர் போட்டியாளர்கள்
சர்வைவர் போட்டியாளர்கள்

டாஸ்க்:

போட்டி நடைபெறும் களத்திற்கு ஏற்ப போட்டியாளர்களுக்கு டாஸ்கு கொடுக்கப்பட்டது. இதுவரைக்கும் தமிழில் பார்த்த ரியாலிட்டி ஷோக்களின் டாஸ்குகளை விட இதில் சுவாரஸ்யமாகவும், ரிஸ்காகவும் பல டாஸ்குகள் கொடுக்கப்பட்டன. அந்த டாஸ்குகளுக்காக போட்டப்பட்ட செட், அதில் இருந்த ட்விஸ்டுகள் என ஒரு டாஸ்க்கை மெருகேற்ற பல கூடுதல் விஷயங்கள் சேர்க்கப்பட்டதால், சுவாரஸ்யத்திற்கு குறையில்லாமல் இருந்தது.

எலிமினேஷன்:

ஒரு ரியாலிட்டி ஷோவில் ஒரு போட்டியாளர் வெளியேறுகிறார் என்றால் ஒன்று, அவர் டாஸ்கில் மற்றப் போட்டியாளர்களிடம் தோற்றிருக்க வேண்டும். இரண்டு, மற்றப் போட்டியாளர்கள் சேர்ந்து ஒருவரை நாமினேட் செய்து மக்களின் வாக்குகள் மூலம் அவர் போட்டியில் இருந்து வெளியேறியிருக்க வேண்டும். இதுதான் நாம் இதுவரைக்கும் பார்த்த ரியாலிட்டி ஷோக்களின் ஃபார்மட். ஆனால், இந்த நிகழ்ச்சியில் இந்த இரண்டு முறையையும் கலந்துகட்டி ஒரு புதுமுறையில் எலிமினேட் செய்தார்கள். ஒரு போட்டியாளரை மற்றப் போட்டியாளர்கள் வெறுப்பினால் வெளியேற்றினாலும் அவருக்கு மூன்றாம் உலகத்தில் டாஸ்க் கொடுக்கப்பட்டு அதில் தோல்வியடைந்தால் மட்டுமே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவர். இது தோல்வியால் வெளியேற உணர்வைத்தான் அந்தப் போட்டியாளருக்கு கொடுக்கும் என்பதால், அவர் துரோகத்தால் வெளியேறிய வேதனை அவருக்கு இருக்காது. இது ஒரு நல்ல முறையாக பார்க்கப்பட்டது.

சர்வைவர்வனேசா, இனிகோ பிரபாகர்
வனேசா, இனிகோ பிரபாகர்

சர்வைவர் நிகழ்ச்சியின் குறைகள்:

  • பல சமயங்களில் இது ரியாலிட்டி ஷோவா அல்லது ஸ்கிரிப்ட்டடு ஷோவா என்கிற சந்தேகம் வந்தது. ஏனென்றால், போட்டியாளர்கள் எங்கு சென்றாலும் கேமராமேன்கள் பின் தொடர்கிறார்கள் என்றால் எப்படி ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் கிசுகிசுக்க முடியும். இது நிகழ்ச்சியின் நம்பகத்தன்மையை குறைக்கவும் செய்தது.
  • வாரத்தில் மூன்று நாட்களில் நடக்கும் டாஸ்குகளும், வாரயிறுதியில் வரும் ட்ரைபல் பஞ்சாயத்தும் மட்டுமே சுவாரஸ்யமாக இருந்ததால், மீதமிருக்கும் மூன்று நாட்களில் கன்ட்டென்ட் இல்லாமல் எபிசோடுகளை கடத்தியது நன்றாகவே தெரிந்தது. இதனை முன்னரே கணித்து சரிசெய்திருக்கலாம்.
  • வித்தியாசமான களம், சுவாரஸ்யமான டாஸ்குகள்தான் இந்த நிகழ்ச்சியின் தனித்துவமாக இருந்து மக்களை ரசிக்க வைத்தது. ஆனால், நாட்கள் செல்ல, செல்ல போட்டியாளர்கள் அவர்களுக்குள் மற்றவர்களைப் பற்றி கிசுகிசு பேசுவது; வியூகம் என்கிற பெயரில் நண்பர்களையே பகைத்துக் கொண்டது என வழக்கமான ஷோவாக ஒரு கட்டத்தில் மாறத் துவங்கியது.
  • நிகழ்ச்சியில் சில இடங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாததைப் போல் உணர முடிந்தது. சரணும், விஜயலட்சுமியும் தங்களது வீட்டிற்கு போன் செய்து பேசியது, லேடி காஷ் வெளியேறியது, ‘விக்ராந்த் – உமாபதி – வனேசா’ மூவருக்கும் உடல்நிலை சரியில்லை என்று ஒரு வாரத்திற்கு மேல் ஓய்வு கொடுத்தது என சில விஷயங்களை மக்களுக்கு சரியாக புரியவைக்கவில்லை.
  • டாஸ்குகளை போட்டியாளர்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் சில இடங்களில் தங்களுக்கு பிடித்த போட்டியாளருக்காக விட்டுக்கொடுப்பதைப் போல் விளையாடியது மக்களுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கும். மூன்றாம் உலகத்தில் இருந்து மெயின் கேமிற்குள் வருவதற்காக நடத்தப்பட்ட போட்டியில் சரணுக்காக நந்தா விட்டுக்கொடுத்ததும், மூன்றாவது ஃபைனலிஸ்ட்டுகான போட்டியில் சரணுக்காக உமாபதி விட்டுக்கொடுத்ததும் சரியான விஷயங்களாக இல்லை.
  • பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஃபைனல் டே’ டக்குனு முடிந்தது ஏமாற்றமாக இருந்தது. ஃபைனலுக்கு தேர்வான விஜயலட்சுமி, வனேசா, சரண் என மூவருக்கும் ஜூரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட நந்தா, அம்ஜத், விக்ராந்த், இனிகோ பிரபாகர், ஐஸ்வர்யா, நாராயணன், உமாபதி என இவர்கள் ஏழு பேரும் ஓட்டுப்போட்டு வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்கள். அதற்கு பதில் இவர்கள் மூவருக்கும் ஒரு டாஸ்க் வைத்திருக்கலாம். அதன் பிறகு ஓட்டுப்போட வைத்திருக்கலாம். இதில் விஜயலட்சுமிக்கு நான்கு ஓட்டுகளும், சரணுக்கு மூன்று ஓட்டுகளும் கிடைத்தது. விஜயலட்சுமி வின்னராக அறிவிக்கப்பட்டார். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top