தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்ற பத்து திரைப்படங்களின் பட்டியல் இங்கே…
1) மாஸ்டர்
இந்த வருஷத்துக்கு பிள்ளையார் சுழி போட்டு வெற்றியைப் பதிவு செய்த திரைப்படம், மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நடிகர்களின் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றது. ஜே.டி-ஆக விஜயும் பவானியாக விஜய் சேதுபதியும் திரையில் மேஜிக் செய்திருப்பார்கள். இருவரின் காம்பினேஷன் காட்சிகள் எல்லாம் பக்கா வெறித்தனம். அனிருத் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களது பங்கினை சிறப்பாக செய்திருப்பார்கள். ரசிகர்களுக்கும் ஃபேமிலி ஆடியன்ஸுக்கும் இப்படி ஒரு படத்தைத்தவிர வேறு என்ன வேணும்?! Master the Blaster!
2) ஜெய் பீம்
சூர்யா நடிப்பில் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த `ஜெய்பீம்’ திரைப்படம் அதிக சர்ச்சையை கிளப்பியது. அதே அளவு விவாதங்களையும் ஏற்படுத்தியது. பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டதால் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக மக்கள் பலர் குரல் கொடுத்தனர். இதேபோல நிறைய படங்களை சூர்யா நடிக்கணும் எனவும் குரல்கள் எழுந்தன. இந்த ஆண்டின் மிகச்சிறந்த திரைப்படம் இது. ஜெய் பீம்!
3) டாக்டர்
பக்கா தியேட்டர் ஆடியன்ஸ்க்கான படம் டாக்டர். கூட்டத்தோட உட்கார்ந்து இந்தப் படத்தைப் பார்த்தா ஒவ்வொரு காட்சிக்கும் சிரிக்கலாம். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு மிகச்சிறந்த கம்பேக் படமாக அமைந்தது. யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, வினய், பிரியங்கா மோகன், அர்ச்சனா மற்றும் அனிருத் என பலரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்துள்ளனர். இந்த வருடத்தின் பெஸ்ட் தமிழ் டார்க் காமெடி திரைப்படம் என டாக்டர்’ படத்தை நிச்சயம் குறிப்பிடலாம். வீ ஆர் வெயிட்டிங் ஃபார்
பீஸ்ட்’ நெல்சன்!
4) சார்பட்டா பரம்பரை
பா.இரஞ்சித் பேக் டு ஃபார்ம்க்கு வந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யாவின் கெரியரிலும் முக்கியமான திரைப்படமாக இது அமைந்தது. வடசென்னையில் இருந்த பாக்ஸிங் விளையாட்டை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கும். காதல் காட்சிகள், சவால் விடும் காட்சிகள் முதல் கிளைமேக்ஸ் வரை ரசிகர்களை பா.இரஞ்சித்தின் மேஜிக் கட்டிப்போட்டு வைத்திருக்கும். சந்தோஷ் நாராயணன் இசையும் வழக்கம்போல வேற லெவலில் இருக்கும். இதுவரை பாக்ஸிங் பற்றி வந்த திரைப்படங்களில் சார்பட்டா பரம்பரையை அடிச்சுக்க ஆள் இல்லைப்பா.
5) லிஃப்ட்
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு கவின்’ நாயகனாக நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் 'லிஃப்ட்'. வினித் வரபிரசாத் இதனை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கவினுக்கு நாயகியாக அம்ரிதா நடித்துள்ளார். இந்த வருடத்தின் சிறப்பான ‘ஹாரர்’ படங்களில் ஒன்றாக இதனைக் குறிப்பிடலாம்.
6) மண்டேலா
யோகிபாபு நடிப்பில் மடோனி அஷ்வின் இயக்கத்தில் அரசியல் நையாண்டி திரைப்படமாக வெளிவந்தது, ‘மண்டேலா.’ மண்டேலாவின்
‘ஒரு ஓட்டு’ அதைப்பெற தேர்தலில் நிற்பவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. இதைவைத்து அதகளம் செய்திருப்பார், இயக்குநர். இசை, ஒளிப்பதிவு என அனைத்துமே இந்தப் படத்துக்கு ப்ளஸ்தான். மண்டேலா இஸ் அவர் ஹீரோ!
7) கர்ணன்
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம், கர்ணன். அடக்குமுறைகளுக்கு எதிரான குரலை தனது முதல்படத்தைப் போலவே இதிலும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார், மாரி செல்வராஜ். வசனம் முதல் இசை வரை அனைத்துமே இந்தப் படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ் எனலாம். இன்னும் நிறைய இதேபோன்ற படைப்புகளை மாரி செல்வராஜூம் தனுஷூம் தர வேண்டும்.
8) ஓ மணப்பெண்ணே
தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற திரைப்படத்தை தமிழிலும் `ஓ மணப்பெண்ணே’ என்று ரீமேக் செய்திருக்கிறார்கள். ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இது. ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கு இடையில் இருக்கும் கெமிஸ்ட்ரி காட்சிகள் படத்துக்கு செம பலம். ஜாலியாக ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டால் நிச்சயம் ஓ மணப்பெண்ணே பெஸ்ட் சாய்ஸ்!
9) தலைவி
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்துள்ள திரைப்படம், தலைவி. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். இன்ஸ்பைரிங்கான ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் தலைவியை நிச்சயம் மிஸ் பண்ணாதீங்க!
10) மாநாடு
கடைசியா வந்து சேர்ந்தவர்தான், வினாயக். அப்டின்றமாதிரி இந்த லிஸ்ட்ல கடைசியா வந்து சேர்ந்த படம், மாநாடு. சிம்புவின் பெஸ்ட் கம்பேக் என ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிருயதர்ஷன் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது. டைம் லூப் திரைப்படமாக வெளிவந்துள்ள இந்தத் திரைப்படத்தை ரசிகர்கள் இன்னும் கொண்டாடி தீர்த்தபாடில்லை. செம படம்… இதுவரை பார்க்கலைனா, கண்டிப்பா பாருங்க!
இந்த திரைப்படங்களில் உங்களோட ஃபேவரைட் எது? நாங்க எதாவது மிஸ் பண்ணியிருந்தா அதையும் கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read : `இதெல்லாம் 2021 ஹிட்ஸ்!’ – தமிழ் சினிமாவின் டாப் 10 காதல் பாடல்கள்