அமீர் எனும் தனிக்காட்டு ராஜனின் கதை இது!

1986-87 காலக்கட்டம் மதுரையில இருந்து சென்னைக்கு வந்து இறங்குறாங்க, ரெண்டு இளைஞர்கள். அதில் ஒருவர் மட்டும் பாலுமகேந்திராகிட்ட உதவி இயக்குநரா சேர, இன்னொருவரோ நண்பனை சேர்த்துவிட்ட திருப்தியோடு மறுபடியும் மதுரைக்கே கிளம்பிடுறார். பாலுமகேந்திராகிட்ட உதவி இயக்குநரா சேர்ந்தவர் 10 வருஷம் கழிச்சு ஒரு படம் இயக்க, மறுபடியும் அந்த நண்பர் மதுரையில இருந்து சென்னைக்கே வந்து அந்த நண்பர்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்துடுறார். பல கட்ட போராட்டத்துக்கு அப்புறமா அந்த படம் ரிலீசாகுது. அந்த படம் மெகாஹிட் ஆகுது, இயக்குநருக்கும் நல்ல பேர் கிடைக்குது. அடுத்தபடத்தை ஆரம்பிக்கிறார், அந்த இயக்குநர், முன்னாடி உதவி இயக்குநரா இருந்த நண்பர், இந்த படத்துல அசோசியேட் இயக்குநரா வேலை பார்க்க படப்பிடிப்பும் 70 சதவிகிதம் முடியுது.  ஆனா, ஏதோ ஒரு காரணத்தால அந்த நண்பர் அசோசியேட் வேலையை விட்டுட்டு அந்த படத்துல இருந்து வெளியேற்றப்படுறார், இல்லனா வெளியேறிட்டார்னு எப்படி வேணும்னாலும் சொல்லலாம். அந்த படம் ரிலீஸ் ஆகுது. டைட்டில் கார்டுல அசோசியேட் நண்பர் பெயர் இல்ல, அதைப் பார்த்து ரொம்பவே நொறுங்கிப்போறாரு அவர். அந்த நண்பர்கள் பெயர் பாலா-அமீர் சுல்தான். முதல் முதலா நந்தாவுல உதவி இயக்குநரா வேலை பார்த்த அமீர், நந்தாவுல 70 சதவிகிதம் படப்பிடிப்பு முடிஞ்ச நேரத்துல அதுல இருந்து வெளியேறினார்.  டைட்டில் கார்டுல அமீரோட பெயரும் இல்ல. இது பெரிய வலியையும், அவமானத்தையும் அமீருக்கு கொடுக்கவே, இதற்கப்புறம் பாலாகிட்ட பேசுறதை அமீர் நிறுத்திட்டார்.

Bala
Bala

மெளனம் திரையில் பேசியது!

பாதியில வெளியேறின அமீர் பொருளாதார ரீதியா ரொம்பவே கஷ்டப்பட்டார். அந்த நேரத்துல நந்தா பட தயாரிப்பாளர்கள், விரக்தியில இருந்த அமீரைச் சந்திச்சு கதை இருக்கானு கேட்க, தான் நோட்ல எழுதி வச்சிருந்த கதையை சொல்றார் அமீர். கதை நல்லா இருக்கு, ஹீரோகிட்ட சொல்லுங்கனு தயாரிப்பாளர்களும் சொல்றாங்க. அமீரும் சூர்யாகிட்ட கதை சொல்ல, சூர்யாவுக்கும் பிடிச்சுப்போக படம் ஆரம்பமாகிறது. சுற்றியிருந்தவர்கள் அமீரைப் பார்த்து இவனுக்கு என்னடா தெரியும் என ஏளனமாய் சிரித்தனர். இரண்டு படங்களில் ஓரளவு வேலை மட்டுமே செய்த அமீர், இத்தனை வருஷமா தான் பார்த்த படங்களையே குருவா வச்சுகிட்டு, மெளனம் பேசியதேனு டைட்டில் வைக்கிறார். டைட்டில் போலவே இதயத்தில் பூட்டி வைத்திருந்த வலிகளை எல்லாம் மெளனமாய் திரையில் பேச வைச்சார் அமீர். காதலை வெறுக்கும் ஒருத்தனோட வாழ்க்கையில மெளனமாய் வந்த காதல் அவன் வாழ்க்கையை எப்படி மாத்திச்சுங்குறதை ரொம்ப சுவாரஸ்யமாவே படமாக்கியிருந்தார் அமீர்.

Mounam Pesiyathe
Mounam Pesiyathe

தமிழ்சினிமாவின் போல்டான அட்டெம்ப்ட்!

முதல் படத்துலேயே தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர். அடுத்து அவரே தயாரித்து இயக்கிய படம் ராம். இந்த முறை ராம் படம் மூலமா தமிழ்சினிமாவின் போல்டான அட்டெம்ப்ட்டை ட்ரை பண்ணாரு அமீர். நிதானமாக இருப்பதுபோல நடிக்கும் பல மன நோயாளிகளோடும், சுய சிந்தனை கொண்ட ஒருவனை மனநோயாளியாக பார்த்தும் வாழ்கிறோம் என்ற கருத்துக்களை முன்வைத்து திரையில் காட்டினார் அமீர். கவனிக்கத்தக்க இயக்குநர், முக்கிய இயக்குநராக மாறிய தருணம் அது. இயக்கத்தோடு கூடுதலாக தயாரிப்பும் சேர்ந்து கொண்டது. ஆனால் இந்த முறை பெரிய அடி, சுமார் 50 லட்சம் ரூபாய் நஷ்டம். அந்தப் படம் வியாபார ரீதியாக வெற்றிப்படமாக இல்லை என்றாலும், படைப்பு ரீதியாக மிகப் பெரிய படம். இப்படம் மூலம் சைப்ரஸ் நாட்டில் நடந்த உலகப் படவிழாவில் வீரபாண்டிய கட்டப்பொம்மன் படத்திற்கு அப்புறம் நாற்பது ஆண்டுகள் கழித்து ஹீரோ ஜீவாவுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது. யுவனின் இசையில் ‘ஆராரி ராரோ’ பாடல் மக்களோட தேசிய கீதமாக ஒலிக்க துவங்கியிருந்தது. வியாபாரம் நஷ்டத்தைக் கொடுத்தாலும், மீண்டும் படம் இயக்க தயாரானார் அமீர்.

அசலான ட்ரண்ட் செட்டர் கிராமக்கதை!

இந்த முறை கையிலெடுத்தது, கிராமம் சார்ந்த ஒரு அச்சு அசலான மண்ணின் கதை.  இந்த முறை நேர்த்தியான சினிமா கொடுத்து தமிழ் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார். இந்த படத்தை முடித்து ரிலீசுக்கு முன்னர் ஒருமுறை மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு திரையிட்டு காண்பித்தார் அமீர். படம் பார்த்து முடித்த கலைஞர், ‘என்னோட தூக்கத்தை கெடுத்துட்டியே, இன்னைக்கு இரவு முழுக்க தூக்கமே வராதேப்பா. கனமான முடிவா இருந்தாலும் நல்லா இருக்கு’னு வாழ்த்திட்டு போனார். அவர் சொன்னபடியே 350 நாட்களுக்கும் மேல் பருத்திவீரன் ஆட்சிதான் நடந்தது. பட்டிதொட்டியெங்கும் படம் பட்டையை கிளப்பியது. இந்த முறை பல விருதுகளை குவித்து, முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் முக்கியமான இடத்தைப் பிடித்தார், அமீர். பருத்தி வீரனுக்குப் பின் இதே டெம்ப்ளேட்டில் வந்த படங்கள் மட்டும் ஒரு 200-க்கும் மேல் இருக்கும்.

அமீர்
அமீர்

திரைப்பயணத்தின் முதல் அடி!

பருத்திவீரன் கொடுத்த புத்துணர்ச்சியோடு அடுத்தபடமான யோகியில் நடிகராக அறிமுகமாகிறார், அமீர். ஆனால் படம் எதிர்த்பார்த்த வெற்றி பெறவில்லை. அடுத்ததாக இயக்கிய ஆதிபகவன் படமும் தோல்வியை தழுவ அடிமேல் அடி விழ, மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்துல கன்னித்தீவு பொண்ணா பாட்டுக்கு ஆடின ஒரு டான்ஸ் அமீர் எனும் நடிகனை கவனிக்க வைச்சது. அடுத்ததா இயக்க ஆரம்பிச்ச சந்தனத் தேவன் கால்வாசி படப்பிடிப்பு முடிஞ்சு  படம் ட்ராப் ஆனது. இப்படி அடிமேல் அடியாக விழ ஆரம்பித்தது அமீருக்கு. முன்னணி இயக்குநராக இருந்த அமீரின் பயணம் சரிய ஒரு காரணமும் இருந்தது.

அமீரின் சறுக்கலுக்கு காரணம்!

ஒரு படைப்பாளி, அதுவும் மார்கெட்டில் உச்சத்திலிருக்கும்போது சினிமா சங்கங்களின் பொறுப்பை ஏற்றுக்கொள்வது தற்கொலைக்கு சமம். பருத்திவீரன் கொடுத்து உச்சத்தில் இருக்கும்போது பெப்சி சங்க தலைவர் பொறுப்பை ஏற்றார், அமீர்.
சங்கங்களை வழி நடத்திப் போவது ஒரு கலை. அது எல்லோருக்கும் வந்துவிடாது. சங்க பொறுப்புகளுக்குப் போய் வேலைபார்த்த ஆறு வருடம் படம் இயக்காமல் தனிப்பட்ட முறையில் பெரிய வாய்ப்புகளை இழந்திருந்தார் அமீர். அதைப்பற்றியெல்லாம் கவலை கொண்டு என்ன ஆகிட போகுதுனு, பொறுப்புகளை விட்டு அடுத்த வேலைகள்ல ஈடுபட ஆரம்பிச்சாரு அமீர்.

அமீர் - ஆண்ட்ரியா
அமீர் – ஆண்ட்ரியா

அமீரின் இயல்பான குணமும், வட சென்னை ராஜனும்!

அடுத்ததாக ஒரு வாய்ப்பு அமீரின் வீட்டுக்கதவை தட்டியது, அந்த வாய்ப்பின் பெயர் வடசென்னை. வாய்ப்பினை தந்தவர் வெற்றிமாறன். இந்த முறை வடசென்னையின் ராஜனாக களமிறங்கினார், அமீர்.  இயக்குநர் அமீர் ஒரு நடிகனா முழுசா கவனிக்க வச்ச படம்னா அது வடசென்னைனு கூட சொல்லலாம். ரொம்ப நாளா கட்டுத்தறியில ஒரு காளையை கட்டி வச்சிருக்குனு வச்சுக்குவோம். ஒரு நாள் கயிறு அறுந்து கூட்டத்துக்குள்ள ஓடிச்சுன்னா, எப்படியிருக்கும். அப்படித்தான் வடசென்னையில் ராஜன்ங்குற கட்டுத்தறிக் காளையா ஓடினார், அமீர். ஒவ்வொரு பிரேம்லயும் வடசென்னை ராஜனாவே மாறியிருந்தார். கிங் ஆப் சீ தீம் சாங்க் ஆரம்பிக்கிறப்போ போட் முனையில கம்பீரமா நின்னுட்டு வர்ற தோரணையாகட்டும், “நோவ் முத்துண்ணா வெளியூர்க்காரங் கைல ஊரைக் குடுக்றதுக்கு நாங்க என்ன ஊக்கையா?, ஊ மூணு சீட்டு வேலைலாம் என்னாண்ட வச்சிக்காத’னு பேசுற இடமாகட்டும், போலீசையே கட்டிவச்சு அடிக்கிற இடமாகட்டும், அதேபோல ஆண்ட்ரியாவுடனான ரொமான்ஸிலும் பின்னி பெடலெடுத்திருப்பார் அமீர். இந்த கேரக்டர் பெயர் அமீர் சுல்தானா இருந்தாலும், அவர் அப்படித்தான் நடிச்சிருப்பார். ஏன்னா? அதுதான் அமீரோட இயல்பான குணம்.

மதுரை முத்து…ஹோட்டல் சர்வர் டிரெண்டிங் காமெடியன் ஆன கதை! #EmotionalStory 

யாருக்காகவும், எதற்காகவும் எப்போவும் தன்னை மாத்திக்க மாட்டார். அடுத்தவர்கள் ‘சினிமாவுல இப்படித்தான் இருக்கணும்’னு யோசனை சொன்னா, ‘நான் எங்கப்பா, அம்மா சொல்லியே கேட்கலை, என் குணம் நானா யோசிச்சாதான் மாறும். யாரும் சொல்லி மாற மாட்டேன்’ங்குறதுதான் அமீரோட பதிலா இருக்கும். இயக்குநர், நடிகர்ங்குறதையெல்லாம் தாண்டி சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுக்குறப்போ தன்னோட வாதத்தை முழுசா தைரியமா எடுத்து வைப்பார் அமீர். இதுவரைக்கும் தான் சொன்ன வாக்கியத்துல இருந்து அமீர் எப்பவுமே பின்வாங்குனதே கிடையாது. சொல்லப்போனா, கோலிவுட்ல அமீர் இதுவரைக்கும் ‘பயப்படுறார்’னு யாரும் சொன்னது  கிடையாது. வடசென்னைக்குப் பின்னால படங்கள் வரிசைகட்டினப்போவும் மொத்தமா ஒத்துகிட்டதும் இல்ல. எனக்கு சரினுபட்டா நான் பண்ணுவேன்னு தன் முடிவுல உறுதியா இருக்கார். கஷ்டம் வந்தப்பவும் சரி, புகழ் வந்தப்பவும் சரி பெரிசா எதுக்கும் கவலைப் பட்டதில்லை, அலட்டிக்கிட்டதும் இல்லை. எனக்கு ராஜாவா நான் வாழுறேன்ங்குற மோடுலதான் அமீர் இப்பவும் இருக்கார்.

அமீர் படங்கள்ல எனக்கு பிடிச்சது ராஜன் கேரெக்டர். உங்களுக்கு பிடிச்சது எதுனு கமெண்ட்ல சொல்லுங்க மக்களே..!

https://fb.watch/fxaxOH6AsC/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top