Jakki Vasudev

ஜக்கி முதல் சத்குரு வரை… ஈஷாவின் மர்மங்களும்… சத்குருவின் சர்ச்சைகளும்!

ஈஷா யோக மையமும், அதன் நிறுவனர் ஜக்கி வாசுதேவின் செயல்பாடுகளும் எப்போதும் மர்மமானவை; ஜக்கியின் தொடர்புகள் எந்தளவுக்கு ஆச்சரியமூட்டக்கூடியதோ, அதே அளவுக்கு ஜக்கி தெரிவிக்கும் அரசியல் மற்றும் சமூகக் கருத்துக்கள் அபத்தமானவை.

ஜக்கியின் யோகா முறைகளைப் பயின்றவர்கள், அதை சிலாகிக்கும் அளவுக்கு, அவரது ஈஷா யோகா மையத்தின் செயல்பாடுகளை அறிந்தவர்கள் அதிருப்தியும் தெரிவிக்கின்றனர்.
வழக்குகள்-வாய்தாக்களுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டிய ஆன்மிக குரு ஜக்கி, எப்போதுமே அவற்றுக்குள் சிக்கிக் கொண்டவராகவே இருந்து வருபவர். இந்தச் சிக்கல் அவரது ஆரம்ப காலகட்டம் முதல் தொடர்ந்து வருகிறது.  ஈஷா யோகா மையம், அங்கு நிறுவப்பட்ட லிங்கம், அதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், அவரது திருமண வாழ்க்கை, தற்போது ஈஷா யோகா மையத்தின் பிரதான சிஷ்யையாக உள்ள பாரதி, ஜக்கியின் அரசியல் தொடர்புகள், ஆதியோகி சிலை, அண்மையில் ஜக்கி தெரிவித்த அரசியல் கருத்துக்கள் என அனைத்தும் இதற்குள் அடக்கம். இவற்றை விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஜக்கியின் கடந்த காலத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

ஜக்கி வாசுதேவ்

கர்நாடக மாநிலத்தில் தெலுங்குக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஜக்கி என்ற ஜெகதீஷ். இவரது அம்மா சுசீலா.. அப்பா பெயர்த வாசுதேவ். பின்னாட்களில் தனது பெயரான ஜெகதீஷைத்தான் சுருக்கி ஜக்கி என்றும், தனது தந்தையின் பெயரான வாசுதேவை அதோடு சேர்த்து  ஜக்கி வாசுதேவ் என்று வைத்துக் கொண்டார்.

சிறுவயதில் ஸ்ரீராகவேந்திராவின் யோக முறைகள் சிலவற்றைக் கற்றுக் கொண்ட ஜக்கி, அதை தீவிரமாக பயிற்சி செய்ய ஆரம்பித்ததுடன், அவருடைய நண்பர்களுக்கும் அதைக் கற்றுக் கொடுக்கிறார். அதே நேரத்தில் படிப்பும் தொடர்கிறது. கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்த ஜக்கி, அதன்பிறகு செங்கல் சூளை நடத்துவது, கோழிப்பண்ணைகளை நடத்துவது போன்ற தொழில்களைச் செய்து வந்தார். ஆனால், அவரது யோகா பயிற்சிகளை அவர் ஒருபோதும் கைவிடவில்லை. அதில் அவருக்கு நண்பர்கள் வட்டம் பெரிதாகிறது.

யோகாவும்… தொழிலும்…

கர்நாடகாவில் தனது சொந்த ஊரிலேயே சிறிய அளவில் ஒரு யோகா பயிற்சி மையத்தை நிறுவி, அனைவருக்கும் யோகா கற்றுக் கொடுக்கிறார். அதன்பிறகு, இந்தியா முழுவதும் பயணம் செய்து, தனது யோகா முறைகளைப் பலருக்கும் சொல்லிக் கொடுத்த ஜக்கி, கோயம்புத்தூருக்கும் அதுபோல் யோகா சொல்லிக் கொடுக்க வந்துள்ளார். 1994 காலகட்டத்தில் கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதி அருகே யோகா சொல்லிக் கொடுக்க வந்த ஜக்கி, அந்தப் பகுதி, கர்நாடகாவில் தனக்கு விருப்பமான சாமூண்டீஸ்வரி மலைப் பகுதியை நினைவுபடுத்தியதால், அங்கேயே முகாமிட்டார். ஆரம்பத்தில் சிறிய அளவில் சொந்தமாக இடத்தை வாங்கிப் பதிவு செய்த ஜக்கி, அதன்பிறகு அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி ஆசிரமத்தை விரிவுபடுத்தத் தொடங்கினார்.

இன்போசிஸ் நாராயணமூர்த்தி முதல் ஆனந்த விகடன் வரை…

தற்போது ஜக்கி தெரிவிப்பது போல், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி சாயல் கருத்துக்களை 1990-களில் அவர் பேசவில்லை. அந்த சயமங்களில் அவர் தன்னை முற்போக்கான ஒரு சாமியராகவே காட்டிக் கொண்டார். 1990-களில் இறுதியில், 2000-த்தின் தொடக்கம் ஐ.டி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பொற்காலமாக இருந்த நேரம். அந்தத் துறையில் ஊதியம் இருந்த அளவுக்கு பணிச்சுமையும், மன அழுத்தமும் இருந்ததையொட்டி நிறைய ஐ.டி துறை பொறியாளர்கள் ஜக்கியிடம் வந்து யோகா கற்றுச் சென்றனர். அவர்களின் நிறுவனங்களைப் பகுத்துப் பார்த்த போது, இன்போசிஸ் நிறுவன ஊழியர்கள் அதிகமாக ஜக்கியிடம் வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இன்போசிஸ் நாராயண மூர்த்தியைத் தொடர்பு கொண்ட ஜக்கி, ‘அந்த நிறுவனத்தில் உள்ள சில பிரச்னைகளை கண்டறிந்து சொன்னார். இதையடுத்து இன்போசிஸ் நாராயண மூர்த்தியும் ஜக்கியிடம் வந்து யோகா கற்றுக் கொண்டு, அந்த நிறுவனத்தில் உள்ள பிரச்னைகள் பற்றிய சில ஆலோசனைகளையும் பெற்றுச் சென்றார். இதையடுத்து, ஐ.டி  நிறுவன ஊழியர்கள் மற்றும் சி.ஈ.ஓ-க்கள் மத்தியில் ஜக்கி பிரபலமானார். ஆனால், அந்தளவிற்கு மட்டுமே இருந்த ஜக்கி, தமிழகத்தில் பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக, ‘எலைட் கிளாஸ்’ பொதுமக்கள் மத்தியில் பிரபலமானது, ஆனந்த விகடன் பத்திரிகையில் அவர் தொடர் வெளியானதற்குப் பிறகுதான்.    

Jakki Vasudev
Photo – ISHA foundation

‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்ற பெயரில் அந்தத் தொடர் வெளியானது. அதற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட்டில் ஜக்கி கோல்ப் விளையாடுவது, பாம்புகளை கையில் பிடித்திருப்பது, விலையுயர்ந்த வெளிநாட்டு கார்கள் மற்றும் பைக்குகளை ஓட்டுவது, ஹெலிகாப்டரில் பறப்பது போன்று போஸ் கொடுத்திருந்தார். அது அந்த நேரத்தில் ஜக்கியை வித்தியாசமானவராகவும், அதே நேரத்தில் எளிய மக்களுக்கான சாமியார்  அவர் இல்லை… முழுக்க முழுக்க எலைட் கிளாஸ் மக்களுக்கான சாமியர் என்பதும் வெளிப்பட்டது. அதன்பிறகு, ஈஷா யோகா மையத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. அந்த நேரத்தில், ஈஷாவை பெரியளவில் விரிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் 5 லட்சம் சதுர அடிகளை மெதுவாக வளைக்க ஆரம்பித்தார். ஈஷாவிற்குள் புதிய புதிய கட்டிடங்கள் கட்டணத்திற்கு தக்க ஹோட்டல் ரூம்களைப் போல் உருவாகத் தொடங்கின. அதற்குள் பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டன. இதற்கெல்லாம், அனுமதி வாங்குவதைப் பற்றி எந்தக் கவலையும் படாத ஜக்கி வாசுதேவ், கட்டிடங்கள் கட்டும் வேலைகளை மட்டும் செய்து கொண்டிருந்தார். உள்ளூர் மக்கள், உள்ளூர் அரசியல்வாதிகளின் எதிர்ப்பும் அந்த நேரத்தில் அதிகரிக்க ஆரம்பித்தது. அதை சமாளிக்க வேண்டுமானால், அரசியல் தொடர்புகளை அதிகரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார் ஜக்கி.

கருணாநிதி முதல் மோடிவரை – ஜக்கியின் அரசியல் ஆதிக்கம்!

 அன்றைய முதலமைச்சர் கருணாநிதியைச் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினார். கோபாலபுரம் இல்லத்தில் வந்து இரண்டு மரக்கன்றுகளை நட்டார். அதன்பிறகு, ஜக்கியை எந்த வனத்துறை அதிகாரிகளும் தொந்தரவு செய்யவில்லை. ஈஷா யோகா மையம் அமைந்திருந்த இயற்கை வனம் அழிந்து, கான்கீரிட் காடுகள் உருவாகின.  மின்வெட்டால் ஆட்சியை இழந்த அன்றைய தி.மு.க அரசாங்கம் ஜக்கியின் ஈஷாவிற்கு எந்த மின்வெட்டும் வராமல் பார்த்துக் கொண்டது.

அதன்பிறகு வந்த ஜெயலலிதாவும் பெரிதாக ஜக்கியைக் கண்டுகொள்ளவில்லை. இத்தனைக்கும் ஜெயலலிதா ஆட்சி நடந்தபோது, “ஜக்கி தன் பிள்ளைகளை மூளைச்சலவை செய்து சாமியார்களாக மாற்றிவிட்டார்; அவர்களைப் பார்க்கவும் தங்களை அனுமதிக்க மறுக்கிறார்” என இரண்டு குழந்தைகளின் பெற்றோர், ஈஷா வாசலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அது பரபரப்பாக அப்போது பேசப்பட்டாலும், எல்ல விவகாரங்களும், வெள்ளியங்கிரி மலைக்குள்ளே அடங்கிப்போனது. அதன்பிறகு, ஆதியோகி என்ற பெயரில் சிவபெருமான் சிலை ஒன்றை 112 அடியில் நிறுவினார். அதை திறந்து வைத்தவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சிவராத்திரியில் கலந்து கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி அந்தச் சிலையை திறந்து வைத்தார். அதோடு அந்த விழாவில், அன்றைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி, அவரது ஒட்டுமொத்த அமைச்சரவையும் ஈஷா யோகா மைய விழாவில் கலந்து கொண்டது. ஜக்கியின் நடன ஆவர்த்தனத்துக்கு முன்னால், தமிழகத்தின் அமைச்சர்கள் கையைக் கட்டிக் கொண்டு பக்தி பரவசத்தோடு, அமைதியாக உட்கார்ந்திருந்தனர். சென்னை உயர் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகளாக அப்போது இருந்த பலரும் அந்த விழாவில் பங்கெடுத்தனர்.

Adhi Yogi statue
Photo – ISHA foundation

இதையெல்லாம் பார்த்த பிறகு, எந்த அதிகாரி ஜக்கியை நெருங்க முடியும்? மேலும், 2011 முதல் 2021 வரை அ.தி.மு.க ஆட்சி வேறு. ஈஷா யோகா மையம் தொண்டாமுத்தூரில் தான் உள்ளது. தொண்டாமுத்தூர் தொகுதியில் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெறும், முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்களும், ஜக்கியின் நெருங்கிய நட்பில் இருப்பவர். அதனால், நில ஆக்கிரமிப்பு, காடுகளை அழிப்பது, மின்வேலி போட்டு யானைகள் மரணத்திற்கு காரணமாக இருப்பது என எந்தக் குற்றச்சாட்டுக்கள் வந்தாலும், புகார்கள் பதிவு செய்யப்பட்டாலும், வழக்குகள் நடந்தாலும், எதுவும் ஜக்கிக்கு பெரிதாக சிக்கலை ஏற்படுத்தவில்லை.

கோயில் அடிமை நிறுத்து கோஷமும்… எதிர்வினையும்!

1990-கள் தொடங்கி 2000-க்குப் பின்னரும் தன்னை ஒரு முற்போக்கு சாமியாராகவே காட்டிக் கொண்ட ஜக்கியின் கருத்துக்களில், 2014-க்குப் பிறகு தடுமாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு அவர் வேத இந்தியா, சமஸ்கிருதம், தனியார்மயம் என்று பேச ஆரம்பித்தார். குறிப்பாக, ”சிவபெருமானுக்குத் தமிழ் தெரியாது; சமஸ்கிருதம்தான் தெரியும்; அதனால், அனைவரும் சமஸ்கிருதம் கற்க வேண்டும்” என்றும், “பள்ளிக்கூடங்களை நடத்துவது அரசாங்கத்தின் வேலையல்ல; அதனால், பள்ளிக்கூடங்கள் அனைத்தையும் தனியாரிடம் கொடுக்க வேண்டும்” என்றும், ”இந்து சமய அறநிலையத்துறையின் கோயில்களை அரசாங்கம் விடுவித்து, தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றும் பேச ஆரம்பித்தார்.

Jakki Vasudev
Photo – ISHA foundation

இவற்றை உற்று நோக்கும் அரசியல் வல்லுநர்கள், ஜக்கி வாசுதேவ் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் பாதைக்குத் திரும்பிவிட்டார் என்று விமர்சிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக அரசாங்கத்திடம் இருந்து கோயில்களை மீட்டு தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது, தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் குறிப்பாக, அந்தக் கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் கோரிக்கையாகவே உள்ளது. இதையடுத்து, கோயில்களை அரசாங்கத்திடம் இருந்து மீட்டு தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜக்கி சொன்ன கருத்துக்குக்கு, சைவ ஆதின மடங்கள், சிவாச்சாரியார்கள் என ஆன்மீகவாதிகளே கடும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கினர்.

குறிப்பாக, தி.மு.க எம்.எல்.ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அது தி.மு.க-வின் குரலாகத்தான் ஒலித்தது. அதோடு, 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, நிதியமைச்சர் பொறுப்புக்கு வந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்னும் கடுமையாக ஜக்கியை விமர்சிக்க ஆரம்பித்தார். அதையடுத்து, ஜக்கி வாசுதேவ் ‘கோயில் அடிமை நிறுத்து’ விவகாரத்தை அப்படியே விட்டுவிட்டு பின்வாங்கினார். அதோடு ஒரு கட்டத்தில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும், அந்த விவகாரத்தை நிறுத்திக் கொண்டார். இப்போதைக்கு அந்த சர்ச்சை ஒய்ந்ததில் ஜக்கி சற்று ஆசுவாசமாகி உள்ளார். ஆனால், ஈஷாவிற்குள் புதைந்துள்ள மர்மங்களும், ஜக்கியை இறுக்கமாகச் சுற்றி இருக்கும் சர்ச்சைகளும் முற்றுப்பெற்றுவிடவில்லை.

Also Read – #FreeTNTemples இந்து சமய அறநிலையத்துறை எப்போது, ஏன் ஆரம்பிக்கப்பட்டது?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top