பி.வாசு

கதைகளின் மேக்கப்மேன்… பி.வாசு-வின் கதை!

பி.வாசு | 1980-கள்ல எல்லா ஜானர்லயும் படங்கள் வந்தன. ஏகப்பட்ட இயக்குநர்கள் அவங்களுக்கு ஒரு பாணியில படம் பண்ணிட்டிருந்தாங்க. அதுல எக்கச்சக்கமான வெற்றிப்படங்கள் கொடுத்து பிரம்மிக்கவும் வச்சாங்க. அதுல இன்னைக்கும் சில படங்களைப் பார்க்கிறபோது கொஞ்சநேரம் நம்மை மறந்து பார்க்க வைக்கும். அப்படிப்பட்ட படங்களைக் கொடுத்த இயக்குநர்கள்ல ஒருத்தர்தான் பி.வாசு. அந்தக் காலத்துல, எம்ஜிஆர், சிவாஜி, என்.டி.ஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு மேக்கப் போட்டவர், பீதாம்பரம். என்.டி.ஆருக்கு கிருஷ்ணர் வேஷம் அமைச்சு, ஆந்திரத்து மக்கள் அவரை கிருஷ்ணராவே வணங்கியதற்கு சொந்தக்காரர். அவரின் மகன்தான் பி.வாசு.

பி.வாசு
பி.வாசு

சினிமா உலகுல முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தின இயக்குநர் ஶ்ரீதர். ஹீரோக்களோட படங்களை சொல்லி அடையாளம் கண்ட மக்கள் ‘இது இயக்குநர் ஶ்ரீதர் படம்’னு சொல்ல வைத்தவர் அவர். இவரின் சீடர்தான் பி.வாசு. ‘ஓ மஞ்சு’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படங்கள்ல ஶ்ரீதர்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்தவர், அங்கே நட்பான சந்தான பாரதிகூட சேர்ந்து பன்னீர் புஷ்பங்கள் கொடுத்தார். இரட்டை இயக்குநராக அறிமுகமானது, பி.வாசு-சந்தானபாரதி கூட்டணி. விடலைப் பருவத்துக் காதல், அது காதலே இல்லைங்குறதையும், அந்த வயதில் படிப்பு முக்கியம், பெற்றோர் முக்கியம்ங்குறதை கண்ணியமாகவும், ரசனையுடனும் கொடுத்திருந்தார்கள்.

அதன்பின் தனியா வந்து படங்கள் இயக்க ஆரம்பிச்சார். பிரபுவை நாயகனாக வைச்சு ‘என் தங்கச்சி படிச்சவ’ மூலம் தனி இயக்குநரா களம் இறங்கினார். முதல் படமே சூப்பர் ஹிட். வரிசையா பிரபு, சத்யராஜ், கார்த்திக், விஜயகாந்த், ரஜினினு பலபேரை வைச்சும் பல படங்களை இயக்கினார். எல்லோருக்குமே பாரபட்சமே இல்லாம ஹிட்டுகளை அள்ளி தெளிச்சார்னுகூட சொல்லலாம். அந்த அளவுக்கு எல்லா ஹீரோக்களோடவும் இணைஞ்சு ஹிட்டு கொடுத்தவர்.

தனித்தன்மை!

சத்யராஜை வைச்சு ‘வேலை கிடைச்சிடுச்சு’ படத்தை இயக்கினார். அதுல பம்மல் ரவிங்குற ஸ்டண்ட் மாஸ்டரை அறிமுகப்படுத்தினார். சண்டைக்காட்சிகள் மிரட்டலா இருந்தது. வில்லனின் அடியாட்களுக்கு வெள்ளை வேட்டி சட்டை கொடுத்து உலவவிட்ட டிரெண்டை உருவாக்கியதும் வாசுதான்.

கதை இருக்கும். காமெடி இருக்கும். ஆபாசம் இருக்காது. அழகான நாயகி இருப்பார். ஆனால் கிளாமராக இருக்கமாட்டார். செண்டிமெண்ட் இருக்கும். உருக்கம் இருக்கும். உணர்வுபூர்வமான காட்சிகளுக்கும் வசனங்களுக்கும் ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பார். பிரபுவுக்கு தக்கபடி படம் பண்ணுவார். சத்யராஜின் ப்ளஸ்ஸையெல்லாம் கொண்டு வந்துவிடுவார். கார்த்திக்கின் நடிப்பாற்றலை வெளிப்படுத்துவார். இப்படி பலரோட நடிப்பை வெளிக்கொண்டுவந்தவர், பி.வாசு.

ஒரு டம்ளர் காபிக்கு எவ்வளவு சர்க்கரைங்குற அளவு பலருக்கும் தெரியாம இருக்கலாம். ஆனா இரண்டரை மணி நேர சினிமாவுல, கதையை எங்க தொடக்கணும், எங அம்மா செண்டிமெண்ட் வரணும், தங்கச்சிக்கு எப்போ முக்கியத்துவம் இருக்கணும், காமெடி இங்கதான் வரணும்னு பிரிச்சு பிரிச்சு சேர்க்குறதுல சிற்பியா மாறி செதுக்குவார்.  

மறக்கமுடியாதவை!

’பாத்துட்டான்… பாத்துட்டான்’னு பெண் வேடத்தில் கவுண்டமணி அலறுனதையும், ‘மாப்பு… வச்சுட்டான்யா ஆப்பு’னு வடிவேலு கதறுனதையும், மனோரமாவின் டை அடித்த ஸ்டைல் லுக்கைக் கண்டு, சத்யராஜ் மிரளுனதையும், தியேட்டர் க்யூவுக்குள்ள வியர்க்க விறுவிறுக்கப் புகுந்து பாய்ந்து, கூலிங்கிளாஸின் ஒரு கண்ணாடியோட ஸ்டேஜ் ஏறி ஸ்டைல் காட்டும் ரஜினியையும், விஜயசாந்தியின் ஆணவத்தையும் அவ்ளோ சீக்கிரம் மறந்துட முடியாது.

பி.வாசு
பி.வாசு – ரஜினி – குஷ்பூ

திறமை!

இன்றைக்கு வரை படமும் சரி, பாடல்களும் சரி, படத்தின் வசூலும் சரி சரித்திரமா நிற்கிறது  ‘சின்னதம்பி’ சினிமா. பிரபுவுக்கு லைப்டைம் செட்டில்மெண்ட் கொடுத்த இயக்குநர் பி.வாசு. பாக்ஸ் ஆபீசுக்கு இதுதான் டார்கெட் என்று இருந்ததை உடைத்து, இந்த படம் ஓடி வசூலாகுற பணம்தான் டார்கெட்டுன்னு கோலிவுட்டை அதிர வைச்சவர். ‘தங்கப்பதக்கம்’, ‘மூன்று முகம்’, ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’க்குப் பிறகு கம்பீரமான போலீஸ் கேரக்டரும் கதையுமா இவர் கொடுத்தது ‘வால்டர் வெற்றிவேல்’. இந்த சத்யராஜைத்தான் முழு காமெடியனாக ‘நடிகன்’ படத்தில் உருமாற்றியிருந்தார் பி.வாசு. இந்த ரெண்டையும் பண்ணக்கூடிய ஒரே இயக்குநர் பி.வாசு மட்டும்தான். நம்மூர் நடிகர்கள் தவிர, ஆந்திராவுலயும், கன்னடத்திலேயும் வெற்றிக் கொடி பறக்கவிட்டவர் பி.வாசு. அங்கே உள்ள முன்னணி நடிகர்களுக்கு ஆளுக்கு நாலைஞ்சு மெகா ஹிட்டுகளை வழங்கியவர்.

அப்பா நடிகர்களின் மேக்கப் மேன்னு சொன்னா, மகன் வாசு திரைக்கதையோட மேக்கப்மேன்னு சொல்லலாம். இவர், கதைகளுக்கு மேக்கப் போடுறதுல எப்பேர்ப்பட்ட கதையா இருந்தாலும்,  இரண்டரை மணி நேர சினிமாவா நம்மைப் பார்க்க வைக்கிற கதைகளின் மேக்கப் மேன்தான், பி.வாசு. இதுபோக சுந்தரா டிராவல்ஸ், வல்லரசுனு பல படங்களையும் நடிச்சிருக்கார்.

Also Read – ஆமால்ல.. ஹேட்டர்ஸ் இல்லாத டைரக்டர்ஸ் இவங்கதான்!

சாதனை!

தமிழ் சினிமா வரலாறுல ஒரே நேரத்துல இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்தவர். ‘மன்னன்’, ‘ரிக்‌ஷா மாமா’- னு ஒரு வருஷத்தோட பொங்கல் பண்டிகையை ரஜினியை வச்சும், சத்யராஜை வைச்சும் தெறிக்கவிட்டவர். பாக்ஸ் ஆபீஸ்கள் அலறின. அப்படிப்பட்ட செய்கைக்கு சொந்தக்காரர் பி.வாசு. ரெண்டுமே வெள்ளிவிழா படங்கள். கெரியரில் 12 படங்கள் தொடர்ந்து சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர். இதுபோல செட்பேக்கில் இருந்த ரஜினியை சரவெடி கொளுத்தி சந்திரமுகி மூலம் மீண்டும் அழைத்துவந்தவரும் பி.வாசுதான். மலையாளத்தில் வந்த ‘மணிச்சித்திரத்தாழ்’, பி.வாசுவின் கைவண்ணத்துல ‘ஆப்தமித்ரா’வா கன்னடத்துல வந்தபோது வேறொரு முகம் காட்டியது. அதுவே ‘சந்திரமுகி’யா தமிழ்ல இன்னொரு விஸ்வரூபம் எடுத்தது. அதுதான் பி.வாசுவின் மேஜிக்.

இமேஜ்!

‘பி.வாசு படமா? குடும்பமா போய்ப் பாக்கலாம்’னு பெயர் வாங்கியிருக்கிறார். எண்பதுகளிலும் தொந்நூறுகளிலும் அப்படித்தான் நினைக்க வைத்தார். இதுவரைக்கும் அப்படித்தான் இருந்துகிட்டிருக்கார். இப்படித்தான் இன்னைக்கு சந்திரமுகி 2 வரை பயணிச்சுக்கிட்டு இருக்கார்.

இயக்குநர் பி.வாசுவின் படங்களோட எனக்கு பிடிச்சது மன்னன்தான். உங்களுக்கு எந்தபடம் பிடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top