வரலாற்று ஆய்வாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார். கொற்கை, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய வேண்டும். தமிழர்களின் பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது அரசுக்குப் பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். இந்தியாவில் ஒரு லட்சம் கல்வெட்டுகள் இருக்கையில், 60,000 கல்வெட்டுகள் தமிழில்தான் இருக்கின்றன. அப்படி இருக்கையில் தமிழுக்கென கல்வெட்டு இயல் நிபுணர்களை அதிகமாக நியமிக்காதது ஏன்? இப்போது கல்வெட்டு இயல் ஆய்வு நிறுவனம் மைசூரில்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் தனியாக கல்வெட்டு இயல் ஆய்வு நிறுவனம் ஏன் அமைக்கக் கூடாது? கல்வெட்டுகளில் அதிகமானவை தமிழில் இருக்கும்போது, கல்வெட்டு இயல் நிபுணர்களை நியமிக்கும்போது சமஸ்கிருதம், திராவிட மொழி கல்வெட்டு இயல் நிபுணர் என்ற பெயரில் நியமிக்கப்படுவது ஏன்?
தொன்மையான, அதிகமான கல்வெட்டுகள் கொண்ட தமிழ் மொழியை பொத்தாம் பொதுவாக திராவிட மொழியில் சேர்ப்பது ஏன்? தமிழுக்கென தனித் துறையை உருவாக்கி, கல்வெட்டு இயல் நிபுணரை நியமிக்காதது ஏன்? தமிழ் மொழிக்கென தனியாக ஒரு கல்வெட்டு ஆராய்ச்சி மையத்தை உருவாக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். மேலும், பழங்கால பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாக்க கேர் டேக்கர்கள் நியமிக்கப்படுவது குறித்தும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
Also Read – வெள்ளை அறிக்கை என்றால் என்ன… தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை.. 14 அம்சங்கள்!