நட்சத்திரங்கள் என்பது நிலவு சார் அளவு ஆகும். ராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பு என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். ஒவ்வொரு நட்சத்திரங்களும் 4 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மனிதன் பிறக்கும் பொழுதே அவனுடன் சேர்ந்து அவனுக்குரிய ராசியும் நட்சத்திரங்களும் தோன்றிவிடுகின்றன. வானில் திங்கள் நிற்கும் நாள் மீன் கூட்டம், அப்பொழுதிற்கான நட்சத்திரம் என எடுத்துக்கொள்ளப்படுவது ஐதீகம்.
அதாவது, எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன், ராசிச் சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப்பிரிவில் இருந்தால் அந்த நேரத்திற்குரிய நட்சத்திரமாக ரேவதி எடுத்துக்கொள்ளப்படுகிறது. வாழ்வில் இருள் நீங்கி ஒளிபொருந்திய சூழல் உருவாக தங்களின் நட்சத்திரங்களுக்கு உரிய கோயில்களுக்குச் சென்று வழிப்பட்டு வந்தால் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்பதைப் பற்றிதான் நாம் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளப்போகிறோம்.
கார்த்திகை நட்சத்திரம்
முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாய் விளங்கும் கார்த்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் மேஷ ராசியிலும், மற்ற மூன்று பாதங்களும் ரிஷப ராசியிலும் அமைந்திருகின்றன. கார்த்திகை நட்சத்திரத்தின் நட்சத்திர அதிபதி-சூரியன், ராசி அதிபதி-சுக்கிரன். கார்த்திகை நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதியாக முதல் மற்றும் நான்காம் பாதத்தில் குருவும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பாதத்தில் சனியும் வலம் வருகின்றன. சூரியனை அதிபதியாக கொண்ட கார்த்திகை நட்சத்திரகாரர்கள் தைரியம் மிக்கவர்களாகவும் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிக்கும் திறமை வாய்ந்தவர்களாகவும் விளங்குவார்கள்.
இந்த நட்சத்திரகாரர்கள், அக்னியை நட்சத்திர அதிதேவதையாகக் கொண்டு, சிவப்பெருமானுக்கு பரிகார பூஜைகள் செய்து வழிபட்டு வர வாழ்வில் மேன்மை அடையலாம். பொதுவாகக் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முருகப் பெருமானையும், சிவ பெருமானையும் வழிபட்டு வர வாழ்வில் இன்னல்கள் நீங்கி மேன்மை அடையலாம் என்பது நம்பிக்கை.
கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் நல்ல செல்வத்தோடு வாழ சூரிய வழிபாடு மற்றும் ஆலய வழிபாடு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கார்த்திகை முதல் நட்சத்திரக்காரர்கள், பழனி முருகனை வழிபட்டு வர சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். இரண்டாம் பாத நட்சத்திரக்காரர்கள், சென்னைக்கு மேற்கேயுள்ள திருவாலங்காட்டில் வீற்றிருக்கும் ஸ்ரீவண்டார் குழலியம்மை உடனுறை ஸ்ரீஊர்த்தாண்டேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்கி வர பல நன்மைகள் உண்டாகும். மூன்றாம் பாத நட்சத்திரக்காரர்கள் ஏகாதசமி திதியில் ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீரங்கநாதரையும், ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் வணங்க சிறந்த பலனை அடைய முடியும். நான்காம் நட்சத்திரக்காரர்கள் திண்டிவனம் அருகிலுள்ள மயிலம் முருகனை வியாழக்கிழமைகளில் வழிபட தீயவை நீங்கி நன்மைகள் உண்டாகும்.
மயிலாடுதுறை ஸ்ரீகாத்ர சுந்தரேஸ்வரர் ஆலயம்
எமனுக்கு அஞ்சாத திடமான வாழ்வை அருளிக்கும் ஸ்ரீகாத்ர சுந்தரேஸ்வரர் ஆலயம் கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் முக்கியமாக வழிபட வேண்டிய திருத்தலமாகும். இத்திருத்தலம் சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான சோழர்காலத் திருப்பணிகள் கண்டது. ஸ்ரீகாத்ர சுந்தரேஸ்வரர் என்பதற்கினங்க இறைவன் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் துயர் நீக்கி, எமனுக்கு அஞ்சாத திடமான வாழ்வருளி காத்து நிற்பதனால் தான், கஞ்சா நகர காத்ர சுந்தரேஸ்வரர் என்ற திருநாமமே ஏற்ப்பட்டது.
இத்திருத்தலத்தினுள் உள்ள தீர்த்தக்குளமானது, அலகாபாத் திரிவேணி தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் இந்நட்சத்திர தினத்திலோ அல்லது பிரதோஷ நாளிலோ இத்தல ஈசனையும், அம்பாளையும் வழிபட்டு வந்தால் தோஷங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்கிறார்க்ள். மேலும், மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் அம்பிகைக்கு சுமங்கலி பூஜை செய்வதன் மூலமும், புத்திர தோஷம் உள்ளவர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதன் மூலமும் தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன.
எப்படி செல்வது?
மயிலாடுதுறை இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சுமார் 8 கி.மீ தொலைவில் கஞ்சா நகரம் அமைந்திருக்கிறது.. அந்நகரத்தில் தான் எமனுக்கு அஞ்சாத திடமான வாழ்வருளும் ஸ்ரீகாத்ர சுந்தரேஸ்வரர் ஆலயம் ஆலயம் அமைந்திருக்கிறது. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மயிலாடுதுறைக்கு பேருந்து வசதிகள் இருக்கிறது. சில ஊர்களில் இருந்து ரயில் வசதியும் இருக்கிறது. மயிலாடுதுறை சென்று அங்கிருந்து பேருந்து அல்லது வாடகை வண்டிகள் மூலம் கஞ்சா நகரை அடையலாம். அருகிலிருக்கும் விமான நிலையம் புதுச்சேரி.