இரவு முழுவதும் நன்றாக தூங்கி எழுந்த பிறகும் சோம்பலாக உணர்கிறீர்களா? தூக்கத்தில் அதிகமாக குறட்டை விடுகிறீர்களா? தூக்கத்தின்போது அடிக்கடி விழித்துக்கொள்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் obstructive sleep apnoea (OSA) என்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்த மூச்சுத்திணறல் பிரச்னை சிகிச்சை அளித்தும் பயனில்லை என்ற நிலைக்கு செல்லும்போது மிகவும் ஆபத்தானது. ஆனால், போதிய விழிப்புணர்வுடன் இருந்தால் இந்த பிரச்னையில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம். இந்த பிரச்னை உள்ளவர்கள் தூக்க மாத்திரைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வது வழக்கம். தூக்க மாத்திரை என்பது இதற்கு சரியான தீர்வு அல்ல. உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை நீங்கள் தொடர்ந்து வாழலாம். சரி… என்னென்ன மாற்றங்களை செய்யலாம்? அதைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப்போறோம்.

- உடல் எடை அதிகமாக இருப்பது மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. உடல் எடையைக் குறைப்பதன் மூலமாக இந்தப் பிரச்னையில் இருந்து விடுபடலாம் என பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஸ்லீப் மெடிசின், சுமார் 1.5 லட்சத்துக்கும் அதிகமான நபர்களிடம் இந்த ஆய்வை நடத்தி மூச்சுத்திணறல் பிரச்னைக்கு உடல் எடைக்குறைப்பு எவ்வளவு உதவுகிறது என்பதை கண்டறிந்தது. எனவே, உடல் சார்ந்த வேலைகளை அதிகமாக செய்யலாம். தினமும் உடற்பயிற்சியினை மேற்கொள்ளலாம்.
- கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிகமாக வறுக்கப்பட்ட உணவுகள், அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் பேக்கரி பொருட்கள் போன்றவற்றை தவிர்க்கலாம். இதனால், உடல் எடை அதிகமாவதை எளிமையாக தவிர்க்கலாம். குறிப்பாக, உணவில் உப்பின் அளவைக் குறைக்கலாம். வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அதிக நார்ச்சத்து உள்ள தானியங்களையும் எடுத்துக்கொள்ளலாம்.

- மது அருந்துதால், புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்கள் இருந்தால் கண்டிப்பாக அதைத் தவிர்க்க வேண்டும். இதனால், இந்த பிரச்னையின் தாக்கம் அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது.
- தூக்கம் வருவதற்கான நல்ல ஆரோக்கியமான செயல்களில் ஈடுபடலாம். தூங்குவதற்கு முன்பு மொபைல், லேப்டாப் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. தியானம், யோகா போன்றவற்றை கடைபிடிக்கலாம்.
- தூங்கும்போது சைடாக படுப்பது நல்லது. மாறாக நீங்கள் கவிழ்ந்து படுத்து தூங்குவதால் சுவாசப் பாதையில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சுத்திணறல் பிரச்னைகளை இன்னும் அதிகமாக்கும்.
Also Read: தூக்கம் துக்கமாகிறதா… இந்த 5 ஐடியாக்கள் உங்களுக்கு உதவலாம்!