இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலை 7-ல் தனது பதவியை ராஜினாமா செய்தார். கொரோனா காலகட்டத்தில் நடந்த சர்சைகளால் தனது சொந்த கட்சியான கன்சர்வேடிவ் கட்சியிலேயே எதிர்ப்புகளை சந்தித்து நெருக்கடிக்குள்ளான அவர், வேறு வழியின்றி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து நடந்த பல்வேறு கட்ட நடைமுறைகளுக்குப் பிறகு லிஸ் டிரஸ் பிரதமராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். யார் இந்த லிஸ் டிரஸ் என்பதை பற்றி தான் நாம் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
யார் இந்த லிஸ் டிரஸ்?
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு நகரில் இடதுசாரிக் கொள்கைகளைப் பின்பற்றும் பாரம்பரிய குடும்பத்தில் 1975 ஜூலை 26-ல் பிறந்தவர் லிஸ் டிரஸ். இவர் லீட்ஸில் உள்ள ரௌண்ட் ஹே பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தபின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். கல்லூரி படிப்பை முடித்தப்பின் ஷெல், கேபிள்&வயர்லெஸ் ஆகிய நிறுவனங்களில் கணக்காளராக பணி அமர்ந்தார்.
கல்லூரி காலத்திலேயே அரசியலின் மீது ஆர்வம் கொண்ட லிஸ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக லிபரெல் ஜனநாயகக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து 1996-ல் கன்சர்வேடிவ் கட்சியில் சேர்ந்தார். அதன் பின் 2001 மற்றும் 2005 ஆகிய இருமுறை வெஸ்ட் யார்க்ஷயர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அடுத்தடுத்து வரிசையாக இரண்டு தோல்வியை சந்தித்தும் மனம் தளராத லிஸ் டிரஸ் 2006-ல் தென்கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள கிரீன்வீச்சின் கவுன்சிலராகத் தேர்வானார்.
2010 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாடாளுமன்ற எம்.பியாகத் தேர்வான லிஸ் டிரஸ், 2012-ல் பள்ளிக்கல்விதுறை அமைச்சராகவும், 2014-ல் சுற்றுச்சூழல் செயலாளராகவும் உயர் பொறுப்புகளை வகித்தார். அதன் பின், நீதித்துறை செயலாளராகவும் பொறுப்பேற்றார். 2019-ல் சர்வதேச வர்த்தக செயலாளராகவும் 2021-ல் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் தற்போது பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையை தட்டி பிரதமர் பொறுப்பேற்றார் லிஸ் டிரஸ்.
லிஸ் டிரஸ் பிரதமர் பதவி ஏற்றது எப்படி?
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், பணவீகத்தை கட்டுப்படுத்த தவறியதும், கொரோனா காலகட்டத்தில் பிறந்தநாள் கொண்டாடியது என பல சர்ச்சைகளில் சிக்கினார். அவரது மேலும் சில நடவடிக்கைகளால், சொந்தக் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியிலேயே எதிர்ப்பை சம்பாதித்தார். இதனால், ஏற்பட்ட அழுத்தங்களால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் பிரதமர் பதவிக்காகவும் கட்சியின் தலைமைக்காகவும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடும் போட்டிக்கு பிறகு அந்த கட்சியினை சேர்ந்த லிஸ் டிரஸ் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் ஆகிய இருவரும் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டனர். பல கட்டங்களாக நடைபெற்ற எம்.பிக்கள் மத்தியிலான வாக்கெடுப்பில் ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. அந்த வாக்களிப்பு நிலவரப்படி, லிஸ் டிரஸ் முன்னிலை பெற்று இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.