தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் ஒரு வழக்கம் இருந்தது. அது சீரியல் நடிகர்களை மெயின் ஸ்டீரிம் சினிமாவில் பயன்படுத்தக்கூடாது என்பது. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது, மக்கள் டிவியில் தினந்தோறும் பார்க்கும் முகங்களையே தியேட்டரிலும் பார்த்தால் சலிப்பு ஏற்பட்டுவிடும் என்பது. ஆனால் இப்போது காலமாற்றத்தில் எல்லாம் மாறுவதுபோல இந்த நிலைமையும் மாறி, சின்னத்திரையில் பிரபலமடைந்து இப்போது ஹீரோயின்களாகவே வெள்ளித்திரையில் வலம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அவர்களைப் பற்றி..
பிரியா பவானி ஷங்கர்
தமிழின் முன்னணி செய்தி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிவந்த பிரியா பவானி ஷங்கருக்கு, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளைத் தொகுத்துவழங்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்நிலையில் ‘மேயாத மான்’ படம் மூலமாக வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமான பிரியா பவானி ஷங்கருக்கு அதன்பிறகு ஏறுமுகம்தான். ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’ என அடுத்தடுத்து நடித்த படங்களும் வெற்றியைப் பெறவே தற்போது ‘இந்தியன்-2’, ‘பத்து தல’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘ருத்ரன்’ என ஏராளமான பெரிய படங்கள் இவர்வசம் இருக்கிறது.
ஹன்சிகா மோத்வானி
90-களில் மிகப் பிரபலமாக இருந்த `ஷக்கலக்க பூம் பூம்’ எனும் குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்தான் ஹன்சிகா மோத்வானி. அவ்வாறு குழந்தை நட்சத்திரமாகவே பலத் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவந்த அவருக்கு தனது 15-வது வயதில் அல்லு அர்ஜூன் ஜோடியாக ‘தேசமுத்ரு’ எனும் தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதைத்தொடர்ந்து தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ‘மாப்பிள்ளை’ படத்தில் அறிமுகமானார். அதிலிருந்து விஜய், சூர்யா, சிம்பு, ஜெயம் ரவி என தமிழின் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து ஒரு ரவுண்ட் வந்தார்.
வாணி போஜன்
விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த வாணி போஜன், மாடலிங்கும் செய்து வந்துள்ளார். சிறு சிறு வேடங்களில் சீரியல்களில் நடித்துவந்த வாணி போஜனுக்கு சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘தெய்வ மகள்’ சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐந்து ஆண்டுகள் ஒளிபரப்பான அந்த சீரியல் மூலம் தமிழ்நாடு முழுக்க பிரபலமானார். தொடர்ந்து தமிழில் ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்த இவருக்கு தற்போது, ‘மகான்’ ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘பாயும் ஒளி நீ எனக்கு’, ‘கேசினோ’ போன்ற படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
ஆரம்பத்தில் லோக்கல் சேனல்களில் காம்பியரிங் செய்துவந்த ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பிறகு ராஜ் மியூசிக் போன்ற சேனல்களில் காம்பியரிங் செய்யத் தொடங்கினார். பின்னர் சன் டிவியில் வந்த ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதைத்தொடர்ந்து, கலைஞர் டிவியின் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது சிறப்பான நடனத் திறமையால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதைத்தொடர்ந்து முதன்முறையாக 2010-ஆம் ஆண்டு ‘நீதானா அவன்’ என்ற மினிமம் பட்ஜெட் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ், பா.ரஞ்சித் இயக்கிய ‘அட்டகத்தி’ படம் மூலம் வெளிச்சம் பெற்றார். அதிலிருந்து நிற்க நேரமில்லாமல் ஒடிக்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
நிவேதா தாமஸ்
தமிழ் சின்னத்திரையில் ஒளிப்பரப்பான குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் ‘ராஜ ராஜேஸ்வரி’ ‘மை டியர் பூதம்’ போன்ற மாயாஜாலத் தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் நிவேதா தாமஸ். இவருக்கு தமிழில் முதல் வெள்ளித்திரை பிரவேசமாக விஜய்யின் ‘குருவி’ படம் அமைந்தது. அந்தப் படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த இவருக்கு, அதன்பிறகு வந்த ‘போராளி’ படம் மூலம்தான் நல்லதொரு வரவேற்புக் கிடைத்தது. அதைத்தொடர்ந்து `நவீன சரஸ்வதி சபதம்’, ‘ஜில்லா’, ‘பாபநாசம்’ போன்ற படங்களில் நடித்த நிவேதா தாமஸூக்கு ரஜினிக்கு மகளாக ‘தர்பார்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது.