ஆர்.எஸ்.சிவாஜி

குணச்சித்திர கலைஞர்களுக்கு என்ன வேண்டும் – கோல்டன் கார்பெட் அவார்டு மேடையை நெகிழ்வாக்கிய ஆர்.எஸ்.சிவாஜி!

அபூர்வ சகோதரர்கள் படத்தின் `நீங்க எங்கேயோ போய்டீங்க சார்’ டயலாக் என்றதுமே நமக்குப் பளீச்சென நினைவுக்கு வருபவர் ஆர்.எஸ்.சிவாஜி. அன்று தொடங்கி இன்றைய ஓடிடி யுகம் வரை நம்மை கலகலப்பூட்டியும் குணச்சித்திர வேடங்களில் கலங்கடித்தும் கொண்டிருக்கும் சீனியர் அவர்.

ஆர்.எஸ்.சிவாஜி

தமிழ் சினிமாவின் குணச்சித்திரக் கலைஞர்களைக் கொண்டாடும் விதமாக `Tamilnadu Now’ கோல்டன் கார்பெட் விருது வழங்கும் விழா மிக பிரமாண்டமாக சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ் சினிமாவின் முக்கியமான அங்கமான 23 குணச்சித்திரக் கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.சிவாஜி

கலகலக்கும் கலங்கடிக்கும் சீனியர்

திரை அனுபவம் – 41 வருடங்கள்

ஹிட் ஹிஸ்டரி – கள்ளமறியா முகத்துடன் காமெடி களேபரம் நடத்துவது…

பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இவருக்கு விசிட்டிங் கார்டு கொடுத்து வரவேற்ற தமிழ் சினிமா, அபூர்வ சகோதரர்கள் படத்தில் கிரீட்டிங் கார்டு கொடுத்துக் கொண்டாடியது.  பாசமலர், அன்னை இல்லம் போன்ற சிவாஜி படங்களைத் தயாரித்த இவரது தந்தை எம்.ஆர்.சந்தானம் நடிகர் திலகத்தின் மீது கொண்ட பற்றால், கடைக்குட்டியான இவருக்கு சிவாஜி என பெயர் சூட்டினார். நகைச்சுவை, குணச்சித்திரம் என திரைக்கு முன்னால் கெத்து காட்டியவர், திரைக்குப் பின்னால் உதவி இயக்குநர், ஒலி வடிவமைப்பாளர் என பல்துறை வித்தகராக உழைத்திருக்கிறார். நாற்பதாண்டு கால திரைத்துறை அனுபவத்தில் பல துறைகளில் பங்களித்தவர். கோலமாவு கோகிலா, கார்கி போன்ற படங்களில் தனது முதிர்ந்த நடிப்பால் கதாபாத்திரத்துக்கு வலிமை சேர்த்தார். இன்றைய ஓடிடி யுகத்திலும் நம்மைக் கலகலக்க கலங்கடிக்க வைக்கும் ஆர்.எஸ்.சிவாஜிக்குத் தங்கக் கம்பளம் விரித்து வரவேற்பதில் பெருமை கொள்கிறது `Tamilnadu Now’ Golden Carpet Awards.

Also Read – கோலிவுட்டின் எனர்ஜி பூஸ்டர், ஏஜெண்ட் உப்பிலியப்பன் aka சந்தான பாரதி!

இதில் சீனியர் நடிகரான ஆர்.எஸ்.சிவாஜிக்கான விருதை தேனாண்டாள் பிலிம்ஸில் முரளி வழங்கினார். மேடையில் தனது ஃபேவரைட் டயலாக்கான `நீங்க எங்கேயோ போய்டீங்க சார்’ டயலாக்கைத் தனக்கே உரிய பாணியில் பேசி தன்னுடைய பேச்சை ஆர்.எஸ்.சிவாஜி தொடங்கினார். குணச்சித்திர கலைஞர்களுக்கு அங்கீகாரம் என்பது எவ்வளவு முக்கியம் என்று குறிப்பிட்ட அவர், இந்தவகையில் நீங்கள்தான் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறீர்கள். இது இன்னும் தொடர வேண்டும் என்று தனது ஆசையையும் வெளிப்படுத்தினார். மேலும் அவர் பேசுகையில், `இது வரவேற்கப்பட வேண்டிய விருது. பொதுவாகக் குணச்சித்திரக் கலைஞர்களை சினிமா துறையினர் கண்டுகொள்ளமாட்டார்கள். வர்றாங்க, போறாங்க, நடிக்கிறாங்க அவ்ளோதான்னு விட்டுடுவாங்க. ஆனால், இப்படி ஒரு கௌரவத்தை நீங்கள் கொடுப்பது என்னோடு சேர்ந்த மற்ற கலைஞர்களுக்கும் இது மிகச்சிறப்பான தருணம் என்று நினைக்கிறேன்’ என்று நெகிழ்வாகப் பேசினார்.

ஆர்.எஸ்.சிவாஜி

அன்பே சிவம் படத்தின் `டூ டூ டூ’ டயலாக்கை நினைவுபடுத்தி காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடலையும் இணைத்து அன்றே கணித்தார் ஆர்.எஸ்.சிவாஜி என்று கேட்டபோது, `அதைக் கணித்தது நான் இல்லை. அந்த வசனத்தை எழுதியது மதன்’ என்று ஆர்.எஸ்.சிவாஜி குறிப்பிட்டார். ரஜினி, மோகன்லால், கமல், சிவாஜி என இவர்களை நடிப்புத் திறமையில் வரிசைப்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு முதலில் சிவாஜி அடுத்து கமல் என்று பதிலளித்தார். அதேபோல், கோல்டன் கார்பெட் விருதைத் தனது தாய், தந்தை, கமல்ஹாசன், தன்னை முதன்முதலில் திரையில் அறிமுகப்படுத்திய பிரதாப் போத்தன், இயக்குநர்கள், சக கலைஞர்கள், புரடக்‌ஷன் பாய்ஸ் என எல்லோருக்கும் அர்ப்பணிப்பதாகவும் பேசி அமர்ந்தார்.  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top