இந்தியாவின் பிரபலமான இந்த 5 சனிபகவான் கோயில்களைத் தெரியுமா?

சூரிய பகவானின் இரண்டாவது புத்திரரான சனி பகவான் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் வல்லமை பெற்றவர். பெரும்பாலான கோயில்களில் சனி பகவானுக்கு தனி சந்நிதி இருந்தாலும், அவருக்கென தனி கோயில்களும் பல இடங்களில் இருக்கின்றன. அப்படி இந்தியாவில் புகழ்பெற்ற 5 சனி பகவான் கோயில்களைப் பற்றி தெரிஞ்சுக்கலாம்.

சனி பகவான்

புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் ரோகினி நட்சத்திரத்துடன் கூடிய சுபவேளையில் தந்தை சூரிய பகவானுக்கும் தாயார் சாயாதேவிக்கும் மகனாக சனிபகவான் ஜனனமானார். காக்கையை வாகனமாகக்க் கொண்ட அவர், நீதிமானாகவும், நியாயவாதியாகவும் போற்றப்படுபவர். ஈஸ்வரன் பட்டம் பெற்ற சனீஸ்வரனை, மனமார வேண்டினால், பூரண ஆயுள் கொடுப்பார் என்பது ஐதீகம்.

சனீஸ்வர பகவானின் புகழ்பெற்ற 5 திருக்கோயில்கள்

திருநள்ளாறு

புதுச்சேரியின் காரைக்கால் அருகே தமிழக எல்லையில் அமைந்திருக்கும் சின்ன கிராமம்தான் திருநள்ளாறு. இங்கு அமைந்திருக்கும் தர்பாராண்யேஸ்வரர் ஆலயம் புகழ்பெற்றது. சனி பகவான் இறைவனை வணங்கி பேறு பெற்ற தலம். இங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி, சனீஸ்வர பகவானை வணங்கினால், ஏழரை சனி உள்ளிட்ட பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. திருஞான சம்மந்தர், சுந்தரர், அப்பர் என மூவராலும் பாடல்பெற்ற இந்தத் திருத்தலம், சோழநாட்டு காவிரி தென்கரையில் உள்ள 52-வது தலம்.

திருநள்ளாறு
திருநள்ளாறு

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அமைந்திருக்கும் இந்த திருத்தலம் காரைக்காலுக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்தும் பேருந்துகள் இருக்கின்றன.

சிங்னாபூர் சனீஸ்வர பகவான் ஆலயம்

சிங்னாபூர் சனீஸ்வர பகவான் ஆலயம்
சிங்னாபூர் சனீஸ்வர பகவான் ஆலயம்

மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறு நகரம்தான் சிங்னாபூர். இங்குள்ள ஆலயத்தில் ஐந்தரை அடி உயரத்தில் சுயம்பு வடிவில் அருள் பாலிக்கிறார் சனி பகவான். அவருக்கு மேற்கூரை எதுவும் இல்லை. வெட்ட வெளியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாக பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார் சனீஸ்வர பகவான். மகாராஷ்ரா மாநிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தினசரி 30,000-த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு தினசரி வந்து போகிறார்கள்.

புகழ்பெற்ற ஷீரடி சாய்பாபா கோயிலில் இருந்து 60 கி.மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த ஊர் சனி சிங்னாபூர் என்றே அழைக்கப்படுகிறது.

டெல்லி ஷனிதாம் கோயில் ( Shani Dham, Delhi)

டெல்லி ஷனிதாம் கோயில்
டெல்லி ஷனிதாம் கோயில்

டெல்லியின் Fatehpur Beri அருகே இருக்கும் அசோலோ பகுதியில் அமைந்திருக்கும் ஆலயம் Shree Sidh Shaktipeeth Shanidham. இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சனிபகவான் சிலையே உலக அளவில் மிகப்பெரியது. பூசாரிகள் யாரும் இல்லாத நிலையில், பக்தர்களே சனிபகவானுக்கு வழிபாடு நடத்துகிறார்கள். சனி பகவானுக்கு கடுகு எண்ணெயை அபிஷேகம் செய்கிறார்கள். டெல்லியின் முக்கியமான ஆலயம் இது

ஷனிசாரா (Shanichara, Madhya Pradesh)

Shanichara, Madhya Pradesh
Shanichara, Madhya Pradesh

மத்தியப்பிரதேசத்தின் குவாலியரில் இருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது ஷனிசாரா என்றழைக்கப்படும் சனி பகவான் ஆலயம். இலங்கையை எரித்த அனுமன் முன்னர் சனி பகவான் தோன்றிய நிலையில், அவரை வழிபடுவதற்காக இந்த இடத்தை அளித்ததாக நம்பப்படுகிறது. சனி பகவான் ஆலயம் அமைந்திருக்கும் மலைப்பகுதி சனி பர்வதம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கே அமைந்திருக்கும் சனி பகவானின் சிலையை உஜ்ஜயினியை ஆண்ட புகழ்பெற்ற மன்னரான விக்ரமாதித்யன் நிறுவியதாகக் கருதப்படுகிறது.

இந்தூர் சனிபகவான் ஆலயம் (Shani Temple, Indore)

இந்தூர் சனிபகவான் ஆலயம்
இந்தூர் சனிபகவான் ஆலயம்

இந்தூரில் அமைந்திருக்கும் இந்த சனி பகவான் ஆலயம் புகழ்பெற்றது. இந்த கோயிலுக்குத் தல வரலாறு என பல சொல்லப்படுகின்றன. மராத்திய ஹோல்கர் வம்சத்தில் பிறந்த புகழ்பெற்ற மகாராணியான அஹில்யா பாயின் மனதுக்கு நெருக்கமான கோயில் இது என்று சொல்லப்படுகிறது. புராண காலம் தொட்டே சனி பகவானின் ஆலயம் இங்கு அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது. தற்போது சனி பகவானின் சிலை இருக்கும் இடத்தில் ராமபிரானின் சிலை ஒரு காலத்தில் இருந்ததாகவும், பின்னர் அதுவே தாமாக நகர்ந்து சனி பகவானுக்கு இடம் அளித்ததாகவும் கோயிலின் தல வரலாறு சொல்கிறது.

இந்த சனி பகவான் ஆலயங்களுக்கெல்லாம் நீங்க போயிருக்கீங்களா… உங்க அனுபவங்களை கமெண்ட்ல சொல்லுங்க மக்களே!

Also Read – Maanadu | Sri Kal Bhairav: உஜ்ஜயினி காலபைரவர் ஆலயத்தில் என்ன சிறப்பு… தல வரலாறு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top