உங்கள் கனவு வீட்டைக் கட்டலாம் பாஸ் சிக்கனமா… 5 டிப்ஸ்

நமது கனவு வீட்டைக் கட்டும்போது எந்தெந்த விஷயங்களில் எல்லாம் சிக்கனமா இருக்கலாம்… அதுக்கான 5 டிப்ஸ்!

கனவு வீடு

வீடு
வீடு

ஒவ்வொருவருக்கும் தங்களுக்குச் சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டி விட வேண்டும் என்பது வாழ்நாள் கனவாகவே இருக்கும். அப்படியான கனவு வீட்டைக் கட்ட பணம், நேரம் ஆகியவற்றோடு மிகப்பெரிய கமிட்மெண்டும் வேண்டும். எதிர்காலத்துக்காக இதுவரை நீங்கள் சேமித்துவைத்த சேமிப்பையும் நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். வாழ்நாளின் மிகப்பெரிய முதலீடான கனவு வீட்டைக் கட்டும்போது நம் மனதில் எழும் முதல் கேள்வி, எப்படி நமது பட்ஜெட்டுக்குள் வீட்டைக் கட்டி முடிக்கப் போகிறோம் என்பதுதான். இது பெரிய கம்பசூத்திரம் ஒன்றுமில்லை. பட்ஜெட்டுக்குள் நீங்கள் வீடு கட்ட, சரியான திட்டமிடுதல் அவசியம். சரியான முறையில் நீங்கள் திட்டமிட்டு, அதை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினாலே, உங்கள் கனவு வீட்டை கச்சிதமான பட்ஜெட்டில் கட்டிவிட முடியும்.

என்ன செய்யலாம்?

தேவையானவற்றைப் பட்டியலிடுங்கள்

வீடு கட்டும்போது ஏற்படும் தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்க, முதலில் வீட்டை எந்த அளவில் கட்டப்போகிறீர்கள், அதற்குத் தேவையான கட்டுமானப் பொருட்கள் என்னென்ன, கட்டுமானத்தை எப்படி நிர்மாணிக்கப் போகிறீர்கள், கட்டுமானப் பணியை மேற்கொள்ளும் முறை என்ன, பணியாளர்கள் இப்படி என்னவெல்லாம் தேவைப்படும் என்பதை திட்டமிடல் ஸ்டேஜிலேயே வரையறுத்து அதுபற்றிய முடிவுக்கு வருவது நல்லது. இப்படியாக உங்கள் கனவு வீட்டைக் கட்ட உங்களுக்கு எவையெல்லாம் அவசியம் தேவை என்பதை வரிசையாகப் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். அந்தப் பட்டியலில் எதெற்கெல்லாம் முன்னுரிமை கொடுத்து உடனடியாக செலவழிக்க வேண்டியவை எவை என்பதையும் அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

வீடு
வீடு

சரியான பட்ஜெட்

வீடு கட்டும்போது நாம் என்னதான் தெளிவான பிளானோடு களமிறங்கினாலும் எதிர்பாராத செலவு கொஞ்சமேனும் ஏற்படும் என்பதை மனதில் கொள்ளுங்கள். இதுதவிர கட்டுமானப் பொருட்கள், கட்டுமானம், பணியாளர் கூலி போன்றவற்றோடு பத்திரப்பதிவு செலவு, காப்பீடு போன்றவற்றையும் சேர்த்து தோராயமாக எவ்வளவு செலவு ஏற்படும் என்பதை பட்ஜெட்டாக வரையறுத்துக் கொள்ளுங்கள். பொதுவாக வீடு கட்டும்போது ஒவ்வொரு ஸ்டேஜிலும் ஒரு செலவு ஏற்படும். மொத்தமாக ஒரே நேரத்தில் உங்களுக்கு செலவு ஏற்படாது. அதையும் திட்டமிட்டு, அதற்கான பணம் வரும் ஆதாரங்கள் பற்றியும் முடிவு செய்துகொள்ளுங்கள்.

கட்டுமானப் பொருட்கள் – சுவரின் ஃபினிஷிங்

கட்டுமானத்துக்குத் தேவையான பொருட்களைக் கூடுமானவரை வெளியில் இருந்து வாங்குவதைத் தவிர்த்துவிடுங்கள். உதாரணமாக, நீங்கள் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய வீடு கட்டுகிறீர்கள் என்றால், அந்த இடிபாடுகளை வைத்து அஸ்திவாரக் குழியை மூடலாம். இதனால், மணல் புதிதாக வாங்க வேண்டிய செலவு குறையும். இதேபோல், கூடுமானவரை உங்களிடம் ஏற்கனவே இருக்கும் பொருட்களை உங்கள் கனவு வீட்டைக் கட்டும்போது தரத்தில் எந்த சமரசமும் செய்யாமல் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அதேபோல், சுவரில் செராமிக் கற்கள், டைல்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி ஃபினிஷ் செய்யாமல் சிமெண்ட் ஃபினிஷிங் இருப்பது போல் திட்டமிட்டுக் கொண்டால், கூடுதல் செலவைத் தவிர்க்கலாம். மேலும், வீட்டின் வெளிப்புற ஃபினிஷிங்கை செங்கல் கட்டுமானத்தோடு விட்டுவிடலாம். உடனடியாக அந்த இடத்தில் பூச்சு வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பின்னாட்களில், பணம் இருக்கும்போது அந்த வேலையைச் செய்துகொள்ளலாம்.

சிம்பிள் டிசைன்

உங்கள் கனவு வீட்டைக் கட்டும்போது, அதன் டிசைன் குளறுபடியில்லாமல் மனதுக்குப் பிடித்தபடியிலான சிம்பிளாக இருக்குமாறு தேர்வு செய்வது நலம். சிக்கலான டிசைன்களைக் கொண்டுவர கூடுதல் செலவு செய்ய வேண்டி வரும். உங்கள் தேவைக்கேற்ப வீட்டின் ஒவ்வொரு அறையிலும் என்ன தேவை என்பதை சிந்தித்து, அதற்கேற்ப டிசைனை முடிவு செய்யுங்கள். டிசைனைப் பொறுத்தவரை அதற்காக நீங்கள் பெரிய சாஃப்ட்வேரின் உதவியை எல்லாம் எல்லா நேரத்திலும் நாட வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் நண்பர்கள் வட்டத்தில் இருக்கும் மேசன் ஒருவரை அழைத்து உங்கள் ஐடியாவைச் சொல்லி ஆலோசனை கேட்டாலே, அவர் தனது அனுபவத்தில் இருந்து உங்கள் கனவு வீட்டை எப்படிக் கட்டலாம் என்பது பற்றி ஆலோசனைகளைச் சொல்லலாம். பொதுவாக, செவ்வகம் அல்லது சதுர வடிவில் வீடு கட்டும்போது கட்டுமான செலவு குறையும் என்பார்கள்.

வீடு
வீடு

சரியான கட்டுமான நிறுவனம்

கனவு வீட்டுக்கான பிளானை இறுதி செய்துவிட்டு, அதற்கான பட்ஜெட்டையும் முடிவு செய்துவிட்டால், அடுத்த கட்டம் ரொம்பவே முக்கியமானது. உங்கள் பட்ஜெட்டில் வீட்டை நேர்த்தியாகவும் அதே சமயம் சரியான நேரத்தில் கட்டுமானப் பணிகளை முடித்துக் கொடுக்கும் கட்டுமான நிறுவனத்தைத் தேர்வு செய்வது அவசியம். நீங்கள் சரியான கட்டுமான நிறுவனத்தைத் தேர்வு செய்துவிட்டால், உங்கள் பட்ஜெட்டுக்குள் எந்த அளவில் வீட்டை நிர்மாணிக்கலாம், எந்தெந்த விஷயங்களில் எல்லாம் கட்டுமான செலவைக் குறைக்கலாம் என்பது பற்றியெல்லாம் அவர்கள் உங்களுக்கான ஆலோசனைகளை வழங்குவார்கள். அதனால், கட்டுமான நிறுவனத்தைத் தேர்வு செய்வதில் கவனமாக முடிவெடுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top