நிலக்கரி விலை உயர்வால் ஏற்படிருக்கும் தட்டுப்பாட்டால் சிமெண்ட் உற்பத்தி செலவு ஒரு மூட்டைக்கு ரூ.50-60 அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. இதனால், சிமெண்ட் விலை உயரவும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
நிலக்கரி விலை உயர்வு!
இந்திய அளவில் சிமெண்ட் தேவையின் பகுதியளவை தென்னிந்தியாவே பூர்த்தி செய்கிறது. 35% சுண்ணாம்புப் படிமங்கள் தென்னிந்தியாவில் இருக்கும் நிலையில், சிமெண்ட் உற்பத்திக்காக நிலக்கரியும் முக்கியமான மூலப்பொருளாகும். நிலக்கரியோடு `Pet Coke‘ எனப்படும் உப பொருளும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி குறைந்துவரும் நிலையில், சிமெண்ட் உற்பத்தியாளர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, பெட் கோக் மூலப்பொருட்களையே அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையோடு சேர்த்து நிலக்கரியின் விலையும் புதிய உச்சம் தொட்டிருப்பதை சிமெண்ட் உற்பத்தியாளர்கள் கவலையோடு பார்க்கிறார்கள். சமீபகாலங்களில், சர்வதேச சந்தையில் நிலக்கரியின் விலை ஒரு டன்னுக்கு 90 அமெரிக்க டாலர் என்ற நிலையில் இருந்து 170 அமெரிக்க டாலர் என்ற நிலைக்குச் சென்றிருக்கிறது.
வரிச்சுமை
இதுதவிர இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கு ஒரு டன்னுக்கு ரூ.400 என்ற அளவில் இறக்குமதி வரியும், பெட் கோக்குக்கு 11% கூடுதல் சுங்கவரியும் விதிக்கப்படுகின்றன. இதனால், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, உப பொருளின் விலை இன்னும் கூடுகிறது. சர்வதேச அளவில் நிலக்கரி உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் சீனாவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது, பிரச்னையின் வீரியத்தை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. இதனால், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கு விதிக்கப்படும் வரியைத் தற்காலிகமாவது மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்கிறார்கள் கட்டுமானத் துறையினர்.
உயரும் சிமெண்ட் விலை!
“கப்பல் போக்குவரத்துக் குறைந்திருப்பதால் பெட் கோக் இந்தியாவில் கிடைக்கவே இல்லை என்றே கூறலாம். நிலக்கரி, பெட் கோக்கின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சிமெண்ட் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால், சிமெண்ட் உற்பத்தி செலவு மூட்டைக்குக் குறைந்தபட்சம் ரூ.60 வரை கூடுதலாகும். எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தென்னிந்திய சிமெண்ட் தொழிற்சாலைகளால் முழுமையான உற்பத்தித் திறனை எட்ட முடியுமா என்பதைக் கணிப்பது கடினமே’’ என்று தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் (SICMA) கவலை தெரிவித்திருக்கிறது.
ரியல் எஸ்டேட்
சிமெண்ட் விலை உயர்வு கட்டுமானத் துறையையும் மோசமாகப் பாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை ரூ.420 என்ற விலையில் பிராண்டட் சிமெண்ட் ஒரு மூட்டை விற்கப்பட்டு வந்தது. அதேநேரம் `A’ கிரேடு எனப்படும் முதல்தர சிமெண்ட் ஒரு மூட்டையின் மொத்த விற்பனை விலை ரூ.480 – 490 ஆக உயர்ந்திருக்கிறது. அதேநேரம் சில்லறை விற்பனை விலை ரூ.490-500 என்று அதிகரித்திருக்கிறது. இதனால், கட்டுமானத் துறையினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த விலையேற்றத்தால் ரியல் எஸ்டேட் விலையும் உயரக் கூடும். விலையேற்றத்தை சமாளிக்க சதுர அடி ஒன்றுக்கு ரூ.250 முதல் ரூ.500 வரை விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த பிரச்னைகளை சமாளிக்க மத்திய அரசு நேரடியாகத் தலையிட வேண்டும் என்கிறார்கள் சிமெண்ட் உற்பத்தியாளர்கள்.