Stalin - Alagiri

மு.க.அழகிரியின் வாழ்த்துக்குப் பின்னால்… சமாதானம் பேசியவர்கள் யார்?

`எனது தம்பி முதலமைச்சராகப் பொறுப்பேற்பது பெருமை’ என ஸ்டாலினுக்கு அவரது அண்ணன் அழகிரி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக நாளை, ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். அதை முன்னிட்டு, தேர்தல் முடிவுகள் வெளியான மே 2-ஆம் தேதியில் இருந்தே, மு.க.ஸ்டாலின் பலரது வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி தொடங்கி, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மாற்றுக் கட்சித் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

அறிவாலயமும், மு.க.ஸ்டாலினின் சித்தரஞ்சன் சாலை வீடும் 24 மணி நேரமும் வி.ஐ.பி-களால் நிரம்பி வழிகிறது. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐ.பி.எஸ் அதிகாரிகள், தி.மு.க இரண்டாம் கட்டத் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வாழ்த்துச் செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், மு.க.ஸ்டாலினின் மகனும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின், மாற்றுக் கட்சித் தலைவர்கள், வெற்றிக்காக பாடுபட்ட கூட்டணிக் கட்சியினர், பேச்சாளர்கள் என பலரையும் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்று வருகிறார்.

இப்படி, மு.க.ஸ்டாலினை ஊரே வாழ்த்து மழையில் நனைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மு.க.குடும்ப உறவுகளிடம் இருந்து வாழ்த்து வருவதில் இழுபறி இருந்து கொண்டிருந்தது. குறிப்பாக அழகிரி என்ன சொல்லப்போகிறார் என ஊடகங்கள் கவனித்துக் கொண்டிருந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்று காலை, மு.க.அழகிரி, தன் தம்பி மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது அவர்களது மு.க குடும்ப உறவுகளிடமும், திமுக தொண்டர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காரணம், கடந்த 2014-ஆம் ஆண்டு அழகிரி தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டது முதல், அவரும், ஸ்டாலினும் பரம எதிரிகளைப் போல் விரோதம் பாராட்டி வந்தனர். கருணாநிதி சிகிச்சை பெற்று வந்த காவேரி மருத்துவமனையிலும், கருணாநிதி இறந்தபின்பு அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலிலும், அவரது இறுதிச் சடங்கு நடைபெற்ற மெரீனா கடற்கரை நினைவிடத்திலும், எதிரிகளைப் போன்றே ஒருவரையொருவர் எதிர்கொண்டனர்.

MK Stalin - MK Alagiri

மேலும், 2021 சட்டமன்றத் தேர்தல் தேதி, நெருங்க நெருங்க அழகிரியின் குடைச்சல்கள், மு.க.ஸ்டாலினுக்கு அதிகரித்துக் கொண்டே போனது. “ஸ்டாலினை முதல்வராக்க விடமாட்டேன்; தென் மாவட்டங்களில் தி.மு.க-வின் வெற்றியை முழுமையாகத் தடுப்பேன்” என்றெல்லாம் அதிரடியாகப் பேசிக் கொண்டிருந்தார். அழகிரியின் இந்தப் பேச்சுக்கள், மு.க குடும்பத்திற்குள் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில், அழகிரி அதைவிட பெரிய அதிர்ச்சியைக் கொடுக்க திட்டமிட்டிருந்தார். அமித்ஷா முன்னிலையில், அவர் பி.ஜே.பி-யில் இணையப்போவதாக வெளியான தகவல்களே அந்த உச்சக்கட்ட அதிர்ச்சி. கடந்தாண்டு நவம்பர் மாதம் 21-ம் தேதி அமித்ஷா தமிழகம் வந்தபோது, அழகிரியின் பி.ஜே.பி விஜயம் அரங்கேறப்போவதாக, பி.ஜே.பி வட்டாரத்தில் உற்சாகமாகவும், தி.மு.க வட்டாரத்தில் அதிர்ச்சியுடனும் பேசப்பட்டது.

Also Read : உலகம் சுற்றும் வாலிபன் போஸ்டரில் ரெடிமேட் பசை! – எம்.ஜி.ஆரை அசத்திய பாண்டு #RIPPaandu

அதையடுத்து சுதாரித்துக் கொண்ட மு.க.ஸ்டாலின், உடனடியாக, அழகிரி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார். அழகிரியிடம் சமாதானம் பேச, அவர்களது சகோதரி செல்வியை மதுரைக்கு அனுப்பி வைத்தார். அழகிரிடம் செல்வி சமாதானம் பேசியபோது, “தன் மகன் துரை தயாநிதியை கட்சிக்குள் வரவிடாமல் ஸ்டாலினும், உதயநிதியும் தடுக்கிறார்கள்; அதை எப்படி என்னால் பொறுத்துக் கொள்ள முடியும் என்றும், முரசொலி அறக்கட்டளை மற்றும் தி.மு.க அறக்கட்டளையில் என் மகனையும் சேர்க்க வேண்டும்” என்றும் அழகிரி கோரிக்கை வைத்தார். அவரை சமாதானப்படுத்திய செல்வி, “நீ கேட்கும் கோரிக்கைகள் அனைத்தையும் ஸ்டாலின் செய்து தருவதாகச் சொல்லி உள்ளார் “. அதனால் பொறுமையாக இருக்கும்படிக் கூறினார். அப்போதும் அழகிரி சமாதானம் ஆகவில்லை. இதையடுத்து, அழகிரியைச் சந்தித்தவர், எப்போதும் அவருக்கு நெருக்கமானவரும், அழகிரியின் மேல் சற்று கூடுதல் அக்கரையுள்ளவருமான துரைமுருகன்.

அவர் அழகிரியிடம் பேசியபோது, “அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, தி.மு.க-வை அங்குலம் அங்குலமாக வளர்த்தவர் உங்கள் அப்பா; அதுபோல, இந்தியாவில் பி.ஜே.பி-யை கடுமையாக சித்தாந்தரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் எதிர்த்தவர்களில், மிக முக்கியமானவரும் அவர்தான். அவரது பிள்ளையான நீங்களே பி.ஜே.பி-யில் இணைவது என்பதும், தி.மு.க-விற்கு எதிராக வேலை பார்ப்பதும், அவருக்கு வரலாற்றுப் பழியை ஏற்படுத்திவிடும். அதனால், அந்த முடிவைக் கைவிடுங்கள். தேர்தல் முடியும்வரை அமைதியாக இருங்கள்” என்று பேசிவிட்டு வந்தார்.

MK Stalin - Duraimurugan

அதன்பிறகுதான், அழகிரி மனம் மாறினார். மதுரை உள்பட தென்மாவட்டங்களில் தி.மு.க-விற்கு எதிராக அவர் எந்த வேலையும் செய்யவில்லை. மேலும், அழகிரியை அங்கீகரிக்கும்விதமாக, மதுரையில் பல தொகுதிகளில் அவருக்கு நெருக்கமான சிலருக்கே சீட்களும் ஒதுக்கப்பட்டன. அதன்பிறகே முழுமையாக சமாதானமான அழகிரி, தற்போது, ஸ்டாலினுக்கு இறங்கிவந்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அடுத்தகட்டமாக அழகிரியும், அவரது மகன் துரை தயாநிதியும் கட்சியில் சேர்க்கப்படுவார்களா? என்பதுதான் இப்போதைக்கு தென்மாவட்ட தி.மு.க-வினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top