குதிரான் சுரங்கப்பாதை

கோவை வழியாக கேரளா செல்வோருக்கு வரப்பிரசாதம் – குதிரான் சுரங்கப்பாதையில் என்ன ஸ்பெஷல்?

கோவை, பாலக்காடு வழியாக கேரளா செல்லும் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் குதிரான் சுரங்கப்பாதை மக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டது. கேரளாவின் முதல் சுரங்கப்பாதையான குதிரான் சுரங்கப்பாதையில் என்ன ஸ்பெஷல்?

தமிழகத்தில் இருந்து கோயம்புத்தூர் வழியாக கேரளா செல்வோர் வாளையார் சோதனைச் சாவடியைக் கடந்து மண்ணூத்தி மலைப்பகுதி வழியாக செல்லவேண்டும். இது மிகவும் குறுகிய பாதை என்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதோடு பயண நேரமும் அதிகமாக இருந்தது. அதிக பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை இருந்ததால், இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் என்பது வழக்கமானதாக இருந்தது. கேரளாவில் இருந்து தமிழகம், கர்நாடகா ஆகிய தென்மாநிலங்களை இணைக்கும் முக்கியமான பொருளாதார வழித்தடமாக இருக்கும் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டும் வந்தது.

குதிரான் சுரங்கப்பாதை
குதிரான் சுரங்கப்பாதை

இதையடுத்து, மண்ணூத்தி மலைப்பகுதியில் வடக்காஞ்சேரி – மண்ணூத்தி சாலை மார்க்கத்தில் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் மலையைக் குடைந்து சுரங்கப்பாதையை உருவாக்குவதற்கான பணிகள் 2016ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டன. இரண்டு வழிப்பாதையாகத் திட்டமிடப்பட்ட குதிரான் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி மக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டிருக்கிறது.1.6 கி.மீ நீளமுள்ள இந்த சுரங்கப்பாதையால் பல மணி நேரம் எடுக்கும் பயணத்தை சில நிமிடங்களில் கடந்துவிடலாம். இதனால், திருச்சூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த சுரங்கப்பாதைதான் கேரளாவின் முதல் சாலைமார்க்க சுரங்கப்பாதையாகும்.

குதிரான் சுரங்கப்பாதையில் இருக்கும் வசதிகள்!

குதிரான் சுரங்கப்பாதையில் 500 விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும், 10 கேமராக்கள், சுரங்கப்பாதையில் இருக்கும் அசுத்தக் காற்றை வெளியேற்ற ப்ளோயர்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஐந்து இடங்களில் வயர்லெஸ் போன்கள் பொருத்தப்பட்டிருக்கும் சுரங்கப்பாதையில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூலை 31-ம் தேதி மக்கள் போக்குவரத்துக்காக சுரங்கப்பாதை திறக்கப்பட்டிருக்கிறது.

குதிரான் சுரங்கப்பாதை
குதிரான் சுரங்கப்பாதை

இது கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென்மாநில மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ஒன்றிய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். பணி முழுமையடைந்தது குறித்த அறிக்கையை ஒன்றிய அமைச்சகத்துக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுப்பி வைத்தது. இதற்கான ஒப்புதல் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கிடைத்து அதன்பின்னர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்தவித அதிகாரப்பூர்வ திறப்பு விழா எதுவுமின்றி திடீரென திறக்கப்பட்டது.

குதிரான் சுரங்கப்பாதை
குதிரான் சுரங்கப்பாதை

இதுகுறித்து பேசிய கேரள பொதுப்பணித் துறை அமைச்சர் முகமது ரியாஸ், `சுரங்கப்பாதை திறப்பு குறித்து ஒன்றிய அரசிடம் இருந்து எந்தவொரு தகவலும் வரவில்லை. சுரங்கப்பாதையைத் திறப்பதே மாநில அரசின் முக்கியமான நோக்கம். அதற்கான பெயரை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. மக்களுக்கான பணிகள் விரைந்து நடக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இரண்டாவது சுரங்கப்பாதையும் விரைவில் திறக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

குதிரான் சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வந்திருப்பதன் மூலம் கோவை – கொச்சி இடையிலான பயண நேரம் வெகுவாகக் குறையும்.

Also Read – `எம்.டி நேரில் வந்தால்தான் காரணம் சொல்வேன்’ – சத்தியம் டிவி ஆபிஸை சூறையாடிய கோவை நபர்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top