நம்ம பாலிவுட்-டுக்கு என்னதான் ஆச்சு?

நம்ம பாலிவுட்டுக்கு என்னதான் ஆச்சு?-ன்னு கேட்க வைத்திருக்கிறது 2022. நூறு கோடி கிளப், ஐநூறு கோடி கிளப், ஆயிரம் கோடி கிளப்னு அசால்ட் பண்ணிட்டிருந்த பாலிவுட் ஸ்டார் படங்கள், போட்ட காசையே எடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. ஒரு காலத்துல இந்திய சினிமா என்றாலே அது பாலிவுட் தான்னு மார் தட்டிட்டு இருந்தவங்க இப்போ ‘நம்புங்கய்யா… நானும் ரவுடிதான்’ற ரேஞ்சுல “தயவுசெஞ்சு கோலிவுட், டோலிவுட், பாலிவுட்னு பிரிக்காதீங்க. நாமெல்லாம் ஒண்ணுதான். இந்திய திரைத் துறை”-ன்னு கதறுற அளவுக்கு பாலிவுட்டை வெச்சு செஞ்சிருக்கு 2022.

குறிப்பாக, பையோ-பிக் ஸ்பெஷலிஸ்ட்டா ஒரு வரலாற்று நாயகர் ரேஞ்சுல வலம் வந்துட்டு இருந்த அக்‌ஷய் குமாரை தோல்வியின் நாயகனா மாத்தியிருக்கு இந்த 2022. என்னதான் சர்க்கஸ் காட்னாலும் பாலிவுட் ஸ்டார் படங்களைப் பார்க்க தியேட்டருக்கு வராமல் ரசிகர்கள் பல்பு கொடுத்ததால பாதிக்கப்பட்டு படு மோசமான தோல்விகளைக் கண்ட 10 படங்கள் பட்டியலைதான் இந்த வீடியோவுல பார்க்கப்போறோம். பாலிவுட்டின் இந்த படுதோல்விக்கான பொதுவான 4 முக்கிய காரணங்களையும் கடைசில பார்ப்போம்.

பச்சன் பாண்டே (Bachchhan Paandey)

Bachchhan Paandey
Bachchhan Paandey

முதல் போனியே நம்ம அக்‌ஷய் குமார்தான். யெஸ், தமிழ்ல செம்ம ஹிட்டான கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகிர்தண்டா’வோட அஃபிஷியல் ரீமேக்தான் இந்த பச்சன் பாண்டே. ஒரிஜினலுக்கு நியாயம் சேர்க்குற மாதிரிதான் ட்ரெய்லர் இருந்துச்சு. ஆனா, படத்துல ஜிகிர்தண்டால இருந்த நம்பகத்தன்மை டோட்டலா மிஸ்ஸிங். இந்தக் கதையை எடுத்த விதம் பாலிவுட் ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் கன்வின்சிங்காவே இல்லை. மண்ணுக்கேத்தபடி சில பல மாற்றங்கள் பண்றோம்னு சொல்லி, சித்தார்த் கேரக்டரை ஹீரோயின் கிரித் சனோனுக்கு கொடுத்துட்டாங்க. அதுதான் ஸ்கிரிப்டோட வெயிட்டேஜையே குறைச்சிடுச்சு. படத்தை கொஞ்சமாச்சும் காப்பாத்தினது யாருன்னா, ஜிகிர்தண்டால குரு சோமசுந்தரத்தின் நடிப்பு வாத்தியார் கேரக்டர்ல, இந்தில நடிச்ச பங்கஜ் திரிபாதி மட்டும்தான். அவரும் இல்லைன்னா, படம் அம்போதான். பச்சன் பாண்டேவோட முதல் நாள் வசூல், கிட்டத்தட்ட 13 கோடி ரூபாய் வந்துச்சு. ஆனால், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘ஆர்ஆர்ஆர்’ ஆகிய படங்களோட பாக்ஸ் ஆபிஸ் போட்டி போட முடியாம அடுத்தடுத்த நாட்கள்ல இறங்கு முகம் கண்டுச்சு. மார்ச் 18-ல் ரிலீஸான இந்தப் படத்தோட பட்ஜெட் கிட்டத்தட்ட 165 கோடி ரூபாய். ஆனால், இந்தியாவுல வசூலானதோ வெறும் 50 கோடி ரூபாய்தான். பட்ஜெட்ல பாதில காசு கூட கல்லா கட்ட முடியாம, இந்த ஆண்டின் முதல் தோல்வியை டேஸ்ட் பண்ணினாரு அக்‌ஷய் குமார்.

ஜெர்ஸி (Jersey)

Jersey
Jersey

அடுத்த தோல்வியும் ரீமேக்தான். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘ஜெர்ஸி’ படத்தை அதே தலைப்புல ரீமேக் செய்யப்பட்ட படத்தில் ஷாகித் கபூர் – மிருணால் தாக்கூர் நடித்திருந்தனர். ஷாகித் கபூர் ரொம்ப ரொம்ப நம்பிக்கைக் கொண்டிருந்த இந்தப் படத்துல மிக்ஸட் ரிவ்யூதான் கிடைச்சுது. ஆனா, கே.ஜி.எஃப் சாப்டர் 2 ரிலீஸான சமயத்துல இந்த ஸ்போர்ட்ஸ் டிராமாவான ஜெர்ஸி ரிலீசானதால, தியேட்டர் ஆடியன்ஸை இழுத்துட்டு வர முடியாம போய்விட்டது. 80 கோடி ரூபாய் பட்ஜெட்ல உருவான இந்தப் படத்தால், இந்தியாவுல வெறும் 18 கோடி ரூபாய்தான் கலெக்ட் பண்ண முடிஞ்சுது. ஆனாலும், இது ஒரு டீசன்ட்டான – ஒரிஜினலுக்கு நியாயம் சேர்க்கக் கூடிய ரீமேக்தான் என்பதற்கு, இந்தப் படத்துக்கு ஓடிடில கிடைச்ச ரெஸ்பான்ஸே சாட்சி.

ஜெயெஷ்பாய் ஜோர்தார் (Jayeshbhai Jordaar)

Jayeshbhai Jordaar
Jayeshbhai Jordaar

அடுத்து பல்பு வாங்கியவர் ரன்வீர் சிங். பெண்சிசு கொலைக்கு எதிராக ஒரு சீரியஸ் சப்ஜெக்ட்டை எடுத்துக்கொண்டு, அதை காமெடியான திரைக்கதையால கொடுக்க முயற்சிக்கப்பட்ட படம் ‘ஜெயெஷ்பாய் ஜோர்தார்’. வழக்கமான மசாலாத்தனங்கள்ல இருந்து விலகினாலும், இதுல காட்டப்பட்ட செயற்கைத்தனமான காட்சிகள் எடுபடாமல் போயிவிட்டது. பாலிவுட்டின் தயாரிப்பு ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றான யாஷ் ராஜ் ஃப்லிம்ஸ் கிட்டத்தட்ட 85 கோடி ரூபாய் பட்ஜெட்ல தயாரிச்ச இந்தப் படத்தால 26 கோடி ரூபாய்தான் கல்லா கட்ட முடிஞ்சுது. இதுக்கும் ஜெர்ஸி மாதிரியே ஓடிடில ஓரளவு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

தக்கட் (Dhaakad)

Dhaakad
Dhaakad

அடுத்து நாம பார்க்கப் போற படம், 2022-ன் மிகப் பெரிய டிசாஸ்டர். அக்கா கங்கனா ரனவ்த் நடிச்ச ஆக்‌ஷன் த்ரில்லரான ‘தக்கட்’தான் அந்தப் படம். இன்டர்நேஷனல் லெவல்ல தெறிக்கவிடுற ஸ்பை ஏஜெண்ட் கேரக்டர்ல கங்கானா நடிச்சிருந்தாங்க. ஆனா, பாலிவுட் கொடுத்த அடி இருக்கே… கங்கனாவுக்கு மறக்குமா நெஞ்சம் பாட்டை டெடிகேட் பண்ற அளவுக்கு இருந்துச்சு. கிட்டத்தட்ட 85 கோடி ரூபாய் பட்ஜெட்ல தயாரான இந்தப் படத்தோட வசூல் வெறும் இரண்டரை கோடி ரூபாய் மட்டும்தான். கங்கனா ரனவத்தின் தூக்கத்தைக் கெடுக்குற அளவுக்கு இந்தப் படத்தோட தோல்வி குறித்து மெயின் ஸ்ட்ரீம்லயும், சோஷியல் மீடியாவுலயும் நியூஸும் போஸ்டும் குவிஞ்சுது. “என் படம் மட்டுமா தோத்துச்சு… மத்தவங்க படங்களும் தான் தோத்துச்சு. ஏன் அதையெல்லாம் கண்டுக்காம என்ன மட்டும் டார்கெட் பண்றீங்க”ன்னு இன்ஸ்டால கங்கனா கதறுன கதறல் இருக்கே… முடியல!!!

சாம்ராட் பிருத்விராஜ் (Samrat Prithviraj)

அடுத்ததாக, மறுபடியும் வந்துட்டார் அக்‌ஷய் குமார். இந்த தடவை சரித்திர சினிமாவில் சாம்ராட் பிருத்விராஜாக அவதரித்த அக்‌ஷய்குமார், பாக்ஸ் ஆபிஸ் என்ற யுத்தத்தில் ரத்தம் கக்கினார். ராஜ்புத் ராஜா பிருத்விராஜ் சவுகானாக திரையில் தோன்றிய அக்‌ஷய் குமார், ரசிகர்களைக் கொஞ்சம் கூட ஈர்க்கவில்லை. கோயில் கோயிலா சுத்தி புரோமோஷனுக்காக பூஜை போட்டும் படம் செல்ஃப் எடுக்கவே இல்லை. முன்னாள் உலக அழகியான மானுஷி சில்லர் பாலிவுட்டுக்கு இந்தப் படம் மூலம் என்ட்ரி கொடுத்தும் கைகொடுக்காம போயிடுச்சு. கிட்டத்தட்ட 175 கோடில தயாரான இந்தப் படம், 70 கோடி ஈட்டவே முக்கிட்டு இருந்துச்சு. ஒரு பக்கம் படம் ரொம்ப மொக்கைன்னாலும், பாய்காட் பாலிவுட் மூவ்மென்ட்டும் மொத்தப் படத்தையும் தாக்கிச்சுன்னு சொல்லலாம்.

Samrat Prithviraj
Samrat Prithviraj

“ஒரு சினிமா எடுக்க நிறைய உழைக்கிறோம். நிறைய பணம் செலவு பண்றோம். இது, இந்தியாவின் பொருளாதாரத்துலயும் தாக்கத்தை ஏற்படுத்துது. மறைமுகமாக நம்மை நாமே காயப்படுத்திக்கிறோம்ன்றதுதான் உண்மை. இதை மக்கள் புரிஞ்சிக்கணும்”னு அக்‌ஷய் குமாரையே புலம்பவிட்ட பெருமை எல்லாம்… சாரி, சாபமெல்லாம் இந்த பாய்காட் இயக்கத்தையே சாரும்.

ஷம்ஷேரா (Shamshera)

Shamshera
Shamshera

கிட்டத்தட்ட நாலு வருஷம் கழிச்சி ‘ஷம்ஷேரா’ படம் மூலமாக பாலிவுட் திரையில் தோன்றினார் ரன்பீர் கபூர். முன்னெப்போதும் பார்த்திராத தோற்றத்தில், பிரிட்டிஷ் கால இந்தியா பீரியட் புரட்சி நாயகன் போல வந்தார் ரன்பீர் கபூர். இவரோட சஞ்சய் தத் தோன்றிய ட்ரெயல்ர் ரொம்பவே மிரட்டுச்சு. நம்பிக்கையை தந்துச்சு. ஆனா, படம் ஊத்திக்கிச்சு. உட்கார முடியாத அளவுக்கு ஸ்லோ டிராமாவா படுத்தி எடுத்ததால, பாலிவுட் ரசிகர்கள் தியேட்டர் பக்கம் தலை வெச்சு படுக்கலை. யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ரூ.145 கோடில தயாரிச்ச இந்தப் படமும் முதலுக்கும் மோசம்தான். கிட்டத்தட்ட 42 கோடி தான் தேறுச்சு.

லால் சிங் சத்தா (Laal Singh Chaddha)

பாலிவுட்டின் மீட்பரா இருக்கும்னு ரொம்ப நாளா வெயிட் பண்ண படம்தான் ஆமீர் கானின் ‘லால் சிங் சத்தா’. ஹாலிவுட்டின் ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக். ரொம்ப காலமா செதுக்கிட்டு இருந்தாரு ஆமீர் கான். ஆனால், படம் ஃபுல்லா ஓடிட்டு இருந்த ஆமீர் கானை, இந்த பாய்காட் மூவ்மென்ட் நிஜத்துலயும் ஓட உடும்னு அவர் நினைச்சுக்கூட பாத்திருக்க மாட்டார்.

Laal Singh Chaddha
Laal Singh Chaddha

2015-ல் ‘நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது’ன்னு ஒரே ஒரு ஸ்டேட்மென்ட் விட்டதுக்கு, இவ்ளோ நாள் வெயிட் பண்ணி 2022-ல அவர் படத்தை புறக்கணிக்க வலியுறுத்தி #BoycottLalSinghChaddha என்ற இயக்கத்தையே ஆரம்பிச்சி ஓட விட்டுட்டாங்க. அதன் விளைவு பாக்ஸ் ஆபிஸில் ஃப்ளாப் ஆக வேண்டியதா போச்சு. ஆமீர் கான் எவ்ளோ கெஞ்சியும் வேலைக்கு ஆகலை. கிட்டத்தட்ட 185 கோடில உருவாக்கப்பட்ட இந்தப் படத்தால 60 கோடி தான் தேத்த முடிஞ்சுது. அதேநேரத்துல, ஓடிடில ரிலீஸானதும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுது. ‘நீங்கல்லாம் நல்லா வருவீங்கடா’ன்ற ஃபீல் பண்ற ரேஞ்சுல, ‘கொஞ்ச காலம் நடிக்க மாட்டேன். பிரேக் எடுத்துக்கிறேன்’னு ஆமிர் கானே சொல்ற அளவுக்கு வெச்சு செஞ்சதுதான் ஆண்டின் மிகப் பெரிய சோகம்.

விக்ரம் வேதா (Vikram Vedha)

Vikram Vedha
Vikram Vedha

பாய்காட் இயக்கத்துல பங்கமான இன்னொரு படம் ‘விக்ரம் வேதா’. தமிழ் விக்ரம் வேதாவோட ரீமேக்தான். அசலுக்கு நியாயம் சேர்க்குற ரீமேக்தான். ஹிர்த்திக் ரோஷனும், சயீஃப் அலிகானும் போட்டி போட்டு மிரட்டி இருந்தாங்க. அதுவும் ஹிர்த்திக் ஆக்ரோஷம் அடுத்த லெவல். காட்சிகளை மட்டும் ரீமேக்காம, வசனங்களை எல்லாம் காட்சியா எடுத்து ரத்தத்தை தெறிக்கவைச்சாங்க. வேதாவை பத்தி பில்டப் பண்ற வசனங்களை அப்படியே காட்சியா வெச்சு, மண்டைய பொளந்தது எல்லாம் வேற ரகம். கிட்டத்தட்ட 180 கோடி பட்ஜெட்ல உருவான இந்தப் படம், இந்தியால பாதிக்குப் பாதிதான் தேத்துச்சு. கிட்டத்தட்ட 80 லட்சம் தான் இங்கே கலெக்‌ஷன்.

ராம் சேது (Ram Setu)

இதோ மறுபடியும் வந்துட்டாருல்ல நம்ம செல்லம் அக்‌ஷய் குமார். ஆக்‌ஷன் அட்வேன்ச்சர் படம்ன்ற டேக் உடன் வந்தது ‘ராம் சேது’. தீபாவள் ரிலீஸ். இது ஆக்‌ஷன் படமா, அட்வேன்ச்சர் படமா, ஆவணப் படமான்றதை தாண்டி, இது ஒரு திரைப்படமான்ற கேள்வி வர்ற அளவுக்கு மொக்கையா மக்கள் ஃபீல் பண்ணாங்க. 150 கோடி பட்ஜெட்ல உருவான இந்தப் படம், இந்தியாவுல 70 கோடி கல்லா கட்டவெ கடல்ல முக்கி எந்திருச்சுச்சு.

சர்க்கஸ்

cirkus
cirkus

‘சிங்கம்’, ‘போல் பச்சன்’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘சிங்கம் ரிட்டர்ன்ஸ்’, ‘தில்வாலே’, ‘சூரியவம்ஷி’-ன்னு கரம் மசாலாவோட பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் ரோஹித் ஷெட்டியாவது, இந்த வருடத்தின் கடைசியில் சக்சஸ் கொடுப்பாருன்னு பார்த்தா, அவர் இயக்குத்துல ரன்வீர் சிங் – பூஜா ஹெக்டே நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சர்க்கஸ் – செம்ம ஃப்ளாப்.

ஷேக்ஸ்பியரின் ‘தி காமெடி ஆஃப் எரர்’ நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டதா சொல்லப்படும் இந்தப் படம் சுத்தமா எடுபடலை. கடந்த 15 ஆண்டுகளில் இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் மிக மோசமான ஓப்பனிங் கொண்ட படம் இதுதானாம். முதல் நாளில் வெறும் ஆறரை கோடி. முதல் மூன்று நாட்களில் வெறும் 20 கோடிக்கும் கம்மியா வசூல் பண்ணியிருக்காம். கிட்டத்தட்ட 150 கோடி பட்ஜெட்னு சொல்லிக்கிறாங்க. ஆக, இதுவும் காமடி ஆஃப் டிசாஸ்டர் ஆகியிருக்கு.

இந்த டிசாஸ்டருக்குப் பின்னாடி இருக்குற பொதுவான காரணங்களை ஒவ்வொண்ணா இப்போ பார்ப்போம்.

பாய்காட் பாலிவுட் இயக்கம்

2020-ல் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்தார். பாலிவுட் ரசிகர்கள் ஷாக்கின் உச்சத்துக்கே போனாங்க. அந்த மரணம், பாலிவுட் மேல, பாலிவுட்ல விரவியிருந்த நெப்போடிசம் தொடங்கி பல அணுகுமுறைகள் மேல பாலிவுட் ரசிகர்களுக்கு தீரா வெறுப்பு உண்டாகிச்சு. அப்போதான் முதன்முதலா நெட்டிசன்க்ஸ் கிட்ட இருந்து பாய்காட் பாலிவுட்ன்ற குரல் எழும்ப ஆரம்பிச்சுது.

அதுவே, முக்கியமான ஸ்டார்ஸோட படங்கள் வெளியாகும்போதெல்லாம் வெகுண்டு எழ ஆரம்பிச்சுது. ஆமிர் கான் படம் ரிலீஸாகுறப்ப, வேறொரு ரீசனை காட்டி பாய்காட் பிரச்சாரம் நடக்கும்போது, அக்‌ஷய் குமார் படங்களுக்கும் வேற ஒரு தரப்பு வேறுவேறு காரணங்கள் காட்டி புறக்கணிப்பு இயக்கத்தை பெருசா வளர்க்க ஆரம்பிச்சாங்க. இது பெரிய அளவுல பாலிவுட்ல தாக்கங்களை ஏற்படுத்துச்சு.

பான் இந்தியாவும் தென்னகத்து ஆதிக்கமும்

கேஜிஎஃப் 2, ஆர்ஆர்ஆர் தொடங்கி காந்தாரா வரைக்கும் பான் இந்தியா படங்களோட ஆதிக்கத்தால பாலிவுட் ஸ்டார்களின் படங்களுக்கு ஓப்பனிங் செம்மயா அடிவாங்குச்சு. தியேட்டர்ல செலிபிரேட் பண்றதுக்கு தெற்கிலிருந்து வரும் பான் இந்தியா படங்கள் போதும்ன்ற அளவுக்கு பாலிவுட் ரசிகர்களின் மனநிலை மாறிச்சு. வட இந்தியாவுல நம்ம விக்ரம் படத்துக்கு கூட செம்ம ரெஸ்பான்ஸ். குறிப்பா, பாலிவுட்ல மிகப் பெரிய பட்ஜெட்ல உருவான படங்கள் ரிலீஸாகும் சமயத்துல சவுத்ல இருந்து ஏதாவது ஒரு படம் டாமினேட் பண்ணி, அந்தப் படங்களை காலி பண்ணதும் நடந்துது.

Also Read – மிஸ் பண்ணாதீங்க.. 2022-ல் வெளியான டாப் 10 பெஸ்ட் மலையாளப் படங்கள்!

ஓடிடி வருகையும் ரசனை மாற்றமும்

ஓடிடி வருகையால ஒட்டுமொத்தமாக சினிமாவுக்கு பாதிப்பு பெருசா இல்லைன்னாலும், பாலிவுட்டுக்கு செம்ம அடி. அதுவும் இந்த 2022-ல மரண அடி. மோடி அரசின் மகத்தான டிஜிட்டல் புரட்சி சாதனையால் வட இந்தியாவில் உள்ள குக்கிராமங்களிலும் வீடுதோறும் ஸ்மார்ட் போன் இருக்கு. அது மூலமா ஓடிடி ஆக்சஸ் இருக்கு. அந்த மக்களுக்கு பாலிவுட்டை தாண்டிய எல்லா ஊரு படங்களும் தங்களோட மொழியிலேயே பார்க்குற வாய்ப்பு கிடைக்குது. அதன்மூலமா உருப்படியான சினிமாக்களை அவங்க பார்க்குற வாய்ப்பு கிடைச்சுது. அப்போதான் அவங்களுக்கே புரியுது, இவ்ளோ நாளே டெம்ப்ளேட் திரைக்கதைகளை வெச்சு பாலிவுட் ஜல்லி அடிச்சுட்டு நம்மளை ஏமாத்திட்டு வந்திருக்குன்றது. அதான், கேரளத்து மின்னல் முரளி கூட ஓடிடில டாப் லிஸ்ட்ல வந்துச்சு.

கன்டென்ட் வறட்சி

கன்டென்ட் வறட்சி மிக முக்கிய காரணம். சரி, ரீமேக்லயாவது மேட்ச் பண்ணலாம்னு பாத்தா, அதுவும் பாலிவுட்டுக்கு ஒர்க் அவுட் ஆகலை. அதெல்லாம் பிரியதர்ஷன் பீரியட்லயே முடிஞ்சு போச்சு. இனியும் கலர்ஃபுல்லா காதுகுத்துறது, மசாலா டெம்ப்ளட்ல ஜல்லி அடிக்கிறது எல்லாம் வேலைக்கு ஆகாதுன்றதை பாலிவுட்டை புரிஞ்சிக்க வெச்சிருக்கு இந்த 2022. அனுபம் கேர் சிம்பிளா சொன்னார்: தென்னிந்திய சினிமாவுல கதையை விக்கிறாங்க. பாலிவுட்ல நீங்க ஸ்டாரை விக்கிறீங்க… அப்புறம் எப்படிடா உங்களுக்கு போனியாகும்னு கேக்குறார். அதுவும் சரிதானே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top