பெரும்பாலான பசங்களுக்கு இலயோலா காலேஜ்ல படிக்கணும்ன்றது மிகப்பெரிய கனவாவே இருக்கும். அதுக்கு காலேஜ்ல படிச்ச பிரபலங்கள், அந்த காலேஜ் பத்தி வெளிய இருக்குற இமேஜ், இலயோலானு சொன்னாலே கெத்தா சுத்துற பசங்கனு எக்கச்சக்கமான காரணங்கள் இருக்கு. காலேஜ்ல ஈவண்ட் நடந்தா சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள்னு எல்லாரையும் பார்க்கலாம். ஈவன்ட் நடந்துட்டே இருக்கும். அரியர் ஸ்டோன், அம்பானி கடை, ஹாஸ்டல் டே, ஓவேஷன், காலேஜ் கல்சுரல்ஸ், எலெக்ஷன் டே, கல்சுரல்ஸ் பேன் பண்ணதுனு அங்க படிச்சவங்களால எதையும் மறக்க முடியாது. இலயோல பத்தின இன்ட்ரஸ்டிங்கான கதைகளை வாங்க தெரிஞ்சுக்கலாம்.
லயோலா காலேஜ்ல படிச்ச யாராலயும் மறக்க முடியாத இடம்னா, அரியர் ஸ்டோன்தான். காலேஜ்ல சேர்ந்த புதுசுல அந்த அரியர் ஸ்டோன்ல மட்டும் யாரும் உட்காராதீங்க, அரியர் விழுந்துரும்னுதான் அந்த ஸ்டோனை நமக்கு சீனியர்லாம் இண்ட்ரோ பண்ணுவாங்க. “அச்சச்சோ, அவரா பயங்கரமான ஆளாச்சே”, “அரியர் ஸ்டோன்ல உட்காரு, அரியர்லாம் விழாதுனு அடிச்சுக்கூட சொல்லுவாங்க. உட்கார்ந்துராத” இப்படிலாம் அதைப் பத்தி மீம்ஸ் போடுவாங்க. காலேஜ்ல இருக்குற அரியர் ஸ்டோனுக்கு கூகுள் மேப்லகூட இடம் இருக்குனா சும்மாவா. காலேஜ்ல ஸ்டுடன்ட்ஸ் யூனியன் எலெக்ஷன் நடக்கும், அப்போ கேன்டிடேட்ஸ் மீட்டிங் அங்கதான் நடக்கும். மச்சா எங்க இருக்க? அரியர் ஸ்டோன் பக்கம் வந்துடுனு சொல்லாத இலயோலைட்ஸே இருக்க முடியாது. 10 பேர்கூட இருக்க முடியாது. ஆனால், காலேஜ் முடிஞ்ச பிறகு மொத்த காலேஜும் அங்கதான் இருக்கும். அதெப்படி திமிங்கலம்னு நீங்க கேக்கலாம். அரியர் ஸ்டோனுக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம் அதெல்லாம். அந்த அரியர் ஸ்டோன் இன்னைக்கு இல்லை.
அரியர் ஸ்டோனை இப்போ இடிச்சிட்டாங்க. அதைக் கேட்டதும் லயோலா ஸ்டுடன்ஸ்ட் எல்லாருக்கும் இடி விழுந்த மாதிரி இருந்துச்சு. “அரியர் ஸ்டோன் மாதிரி ஒரு ஐடன்டிட்டி வர நம்ம காலேஜ்க்கு ஒரு யுகமே தேவைப்படும், என்னோட இலயோல மெமரீஸ் எல்லாமே அரியர் ஸ்டோன்ல தான் இருக்கு. அதைப்போய் இடிச்சிட்டீங்களே”னு போஸ்ட் போட்டு தங்களோட மெமரீஸ், எமோஷன்கள் எல்லாத்தையும் பகிர்ந்து கதறிட்டு இருந்தாங்க. ரொம்ப நாள் கழிச்சு கேம்பஸ்க்கு போனால், ஃப்ரெண்ட்களை கூப்பிட்டு அரியர் ஸ்டோன்ல உட்கார்ந்து பேசுனா, படையப்பால சிவாஜி கடைசியா ஒரு தடவை போய் உட்காருவாருல, அந்த ஃபீல்தான். அரியர் ஸ்டோன் வெறும் வார்த்தையோ பெயரோ இல்லை, எமோஷன்னு போகபோகதான் எல்லாருக்கும் புரியும். அதுவும் ஹாஸ்டல் பசங்களா இருந்தா அரியர் ஸ்டோன் இன்னும் க்ளோஸா இருக்கும். ரொம்ப எமோஷன்லா போறோம்ல? சரி, ஃபன்னான சம்பவம் ஒண்ணு ஷேர் பண்றேன்.
ஹாஸ்டல்னு சொன்னாலே எந்த காலேஜ் பசங்களா இருந்தாலும் எக்கச்சக்கமான மெமரீஸ் பசங்களுக்கு இருக்கும். இலயோலா பசங்களுக்கும் அதே மெமரீஸ்தான் இருக்கும். ஃபஸ்ட் டைம் ஹாஸ்டல்ல போய் ஜாய்ன் பண்ணதும், டைரக்டர், “எந்த சீனியரும் உங்கள ரேக்கிங்பண்ண மாட்டாங்க. நீங்களும் ரேக் பண்ணாமல் இருக்கணும்”னுதான் சொல்லுவாரு. நமக்கு ரூம் மேட்டா சீனியரதான் பெரும்பாலும் போடுவாங்க. சீனியர்ஸ் நமக்கு ஃபஸ்ட் இண்ட்ரோ பண்றது, அம்பானி கடைதான். அதென்னடா அம்பானி கடை?னுதான கேக்குறீங்க. ஹாஸ்டல் கேம்பஸ்ல இருக்குற ஸ்டோர். அந்தக் கடைல இருக்குற எந்த பொருளுக்கும் அவருக்கே விலை தெரியாது. அவர் பெயர்தான், அம்பானி. அம்பானி கடைல பூட்டுதான் ரொம்ப ஃபேமஸ். ஏன்னு, எக்ஸாம்பிள் சொல்றேன். ஹாஸ்டல்ல 3-வது, 4-வது பிளாக் ஒரே மாதிரி இருக்கும். புதுசா போனவங்க கொஞ்சம் நாளைக்கு கன்ஃபியூஸ் ஆவாங்க.
அம்பானி கடைலதான் எல்லாருமே பூட்டு வாங்குவாங்க. ஒருதடவை ஒருத்தனுக்கு ரொம்ப தலை வலி. வழக்கமா ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து மெஸ்ல சாப்பிட்டுட்டு கேம்பஸ்லாம் சுத்திட்டு அரட்டை அடிச்சுட்டு தான் கலைவாங்க. ஆனால், உடம்பு சரியில்லாததால, அந்தப் பையன் அன்னைக்கு சீக்கிரம் ரூம்க்கு வந்துட்டான். ரூமை ஓப்பன் பண்ணி உள்ள போய் படுத்துட்டான். கொஞ்சம் நேரத்துல அவன் ரூம்க்கு வேற பசங்க வந்துருக்காங்க. யாரு நீங்க? எங்க ரூம்ல என்ன பண்றீங்க?னு கேட்ருக்காங்க. அவன் குழம்பிப்போய், ப்ரோ இதுதான் என் ரூம், மாறி வந்துட்டீங்கனு சொல்லிருக்கான். இல்லை ப்ரோ, இது என் ரூம்னு சொல்ல, இது 3-வது பிளாக் தானனு நம்மாளு கேட்ருக்கான். 4-வது பிளாக் ப்ரோனு அவங்க சொன்னதும், சாரி, ப்ரோ கன்ஃபியூஷன்ல வந்துட்டேன். ஆனால், பூட்டு எப்படி திறந்துச்சு? என் சாவியைதான போட்டேன்னு கேட்ருக்கான். அவன் சிரிச்சுட்டு அம்பானி கடைல பூட்டு வாங்குனீங்களானு கேட்ருக்கான். அடுத்த நிமிஷம் மொத்த கூட்டமும் சிரிக்க ஆரம்பிச்சிருக்கு. அதுதான் அம்பானி.
லயோலாவை மட்டுமில்லாமல், மற்ற கல்லூரிகளையும் 1980-களில் ஆட்டம் போட வைத்த, லயோலா மாணவர்கள் ஆரம்பிச்ச பேண்ட் டௌன் ஸ்டெர்லிங். லயோலாவின் கல்சுரல்ஸுக்கான பெயராகவே மாறிச்சு. MCC-யில் நடைபெற்ற Deep Woods கல்சுரல்ஸும் இதேபோல ராக் இசையை மையப்படுத்தி அப்போ நடந்துச்சு. ஒருபக்கம் இசைக் கொண்டாட்டம் நடந்தால், இன்னொரு பக்கம் மாணவர்களுக்கிடையே சண்டையும் நடந்தது. இதனால் டவுன் ஸ்டெர்லிங் நிகழ்ச்சி உட்பட அனைத்து கொண்டாட்டங்களும் தடைசெய்யப்பட்டிருக்கிறது. மாணவர்களின் தொடர் குரலால், 1985-ல் மீண்டும் டவுன் ஸ்டெர்லிங் ஒலிக்கத் தொடங்கியது. 1992-ல் மீண்டும் ஏற்பட்ட கூச்சல் குழப்பங்களால் தடை செய்யப்பட்டது. 1980-களில் லயோலாவின் மேடைகளில் அதிர ஆரம்பித்த டவுன் ஸ்டெர்லிங்க் பேண்டின் கிட்டார் கம்பி அதிர்வுகள் இன்னமும் பல இடங்களில் அதிர்ந்து கொண்டிருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் ஒரு கல்லூரி கல்சுரல்ஸில் டவுன் ஸ்டெர்லிங் பாடிய பாடலை மீண்டும் பெர்ஃபார்ம் செய்த போது மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தது. இப்போது படிக்கும் லொயோலைட்டுகளுக்கு ஓவேஷன்ஸ் நடக்கும் போது “ஒரு காலத்துல டவுன் ஸ்டெர்லிங் எப்படி நடந்தது தெரியுமா?”ன்னு பேசுவாங்க. வரலாற்றுல டவுன் ஸ்டெர்லிங் ஒரே ஒரு இடத்துல பதிவாயிருக்கு, எங்க தெரியுமா? காதல் தேசம் படத்துல முஸ்தபா முஸ்தபா பாட்டுல.
சென்னைல இருக்குற எல்லா காலேஜ்க்கும் தெரிஞ்ச நிகழ்ச்சினா, ஓவேஷன்தான். இதுக்கு முன்னோடி, டௌன் ஸ்டெர்லிங்தான். டிபார்ட்மென்ட் இடையே நடக்குற போட்டிதான். அன்னைக்கு டிரெண்டிங்ல இருக்குற எல்லா செலிபிரிட்டியையும் பார்க்கலாம். இதேமாதிரி பண்ணனும்னு நிறைய காலேஜ்லாம் ட்ரை பண்றாங்க. வேம்புலியை வேணும்னா அடிக்கலாம், டான்சிங் ரோஸையெல்லாம் அடிக்க முடியாது. ஸ்டுடன்ஸ் யூனியன் எலெக்ஷன்ல ஜெயிச்ச பசங்கதான் இதை நடத்துவாங்க. மாஸ்டர்ல நடக்குற மாதிரி எலெக்ஷன் நடக்கும். எலெக்ஷன் டேஸ்லாம் ரொம்ப ஜாலியா இருக்கும். யூனிக்காக விஷயம் என்னனா, 2019 – 2020 ல நடந்த மாணவர்கள் தேர்தல்ல திருநங்கை நளினா போட்டியிட்டு வெற்றி பெற்றாங்க. லயோலா வரலாற்றுல அதுதான் முதல் தடவை. டிபார்ட்மென்ட் டே, காலேஜ் டே, இன்டர்காலேஜ் ஃபங்ஷன்னு எதாவது ஒண்ணு நடந்துட்டே இருக்கும். காலேஜ்ல இல்லையா, ஹாஸ்டல்ல எதாவது ஒண்ணு நடக்கும். எல்லா ஃபங்ஷன் முடிஞ்சதும் ஹாஸ்டல்ல டி.ஜே நைட் இருக்கும். மொத்த டிப்ரஷனையும் அந்த டி.ஜே நைட்ல இறக்கிடலாம். ஹாஸ்டல்ல பெஸ்ட் என்னனா, ஃபஸ்ட் இயர் பசங்களை வெல்கம் பண்ணும்போது சீஃப் கெஸ்ட்டா செகன்ட் இயர்ல இருந்து பெஸ்ட்டான பையன செலக்ட் பண்ணி பேச வைப்பாங்க. அடுத்தநாள், மெஸ்க்குள்ள போகும்போதுலாம் அவன்தான் ஹீரோ.
Also Read – திருவிழா நிகழ்ச்சிகள் டூ அமெரிக்கா – `சுட்டி’ அரவிந்த் பயணம்
பொலிட்டிகலியும் லயோலா ரொம்ப ஆக்டிவான காலேஜ்னே சொல்லலாம். இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்துலயும் லயோலா மாணவர்கள் முக்கிய பங்காற்றினாங்க. இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பா மாணவர்களோட போராட்டம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டுச்சு. லயோலா பசங்க, சட்டக் கல்லூரி பசங்கதான் முன்னால நின்னாங்க. 2015-ல வெள்ளம் வந்தப்போ லயோலா பசங்கதான் களத்துல இறங்கி உதவி பண்ணாங்க. காலேஜ்ல இருக்குற எல்லா கிளாஸும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடா மாறிச்சு. அவுட் ரீச்னு ஒண்ணு இருக்கு. விளிம்பு நிலை மக்கள் இடத்துக்கே போய், அவங்க வாழ்வாதாரத்தை மேம்படுத்த எதாவது பண்ணலாம்ன்ற சின்ன முயற்சிதான். சமூகம் சார்ந்து மாணவர்களை இயங்க வைப்பாங்க, டிஸ்கஷன்ஸ் நடக்கும். நாட்டுப்புற கலைஞர்களை கவுரவப்படுத்த வீதி விருது விழா நடக்கும். இப்படி ஸ்பெஷலை சொல்லிட்டே போகலாம். இன்னொரு ஸ்பெஷல், அலுமினி மாணவர்கள். விஜய்ல இருந்து விஷால் வரைக்கும், கலாநிதில இருந்து உதயநிதி வரைக்கும், அனிருத்ல இருந்து தென்மா வரைக்கும், கே.வி.ஆனந்த்ல இருந்து புஷ்கர் காயத்ரி வரைக்கும், விஸ்வநாதன் ஆனந்த்ல இருந்து சகாயம் ஐ.ஏ.எஸ் வரைக்கும் லயோலாவோட மாணவர்கள்தான்.
எஸ்.ஏ.சி படத்துல இருந்து அவர் சிஷ்யன் ஷங்கர் படம் வரைக்கும் நிறைய படங்கள்ல லயோலா வரும். மத்த பொண்ணுங்க காலேஜ்லகூட லயோலா பசங்களுக்கு செம கிரேஸ்ல இருப்பாங்க. மலமல பாட்டுல லயோலா காலேஜ் வரி ஒண்ணு வரும், கல்லூரி வாசல் படத்துல லயோலா காலேஜ்னு பாட்டே இருக்கு. இப்பவும் லயோலா காலேஜ்ல படிச்சோம்னு சொன்னா தனி மரியாதைதான். 2025 வந்தா இலயோலா தொடங்கி 100 வருஷம் ஆகும். லயோலைட்ஸ்க்கு இதைவிட வேற என்ன பெருமை வேணும்?!