தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீஸ் வன்முறையில் பென்னிக்ஸ், ஜெயராஜ் என்ற அப்பாவிகள் உயிரிழந்து சுமார் 18 மாதங்கள் கடந்துவிட்டன. 2020 ஜூன் 19-ம் தேதி இரவு 7.30 மணி முதல் ஜூன் 23 அதிகாலை ஜெயராஜ் உயிரிழப்பு வரை என்ன நடந்தது?
ஜெயராஜ் – பென்னிக்ஸ்
கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில் சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே கடை வைத்திருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. ஊரடங்கில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தைத் தாண்டி கடையைத் திறந்து வைத்ததாகக் கூறி அவர்களை போலீஸார் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், சம்பவம் நடந்ததற்கு மறுநாள் (ஜூன் 19,2020) போலீஸார், தனது தந்தை ஜெயராஜை விசாரணைக்காக சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றதை பென்னிக்ஸ் அறிந்திருக்கிறார். உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ஆய்வாளர் எஸ்.ஸ்ரீதர், காவலர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் ஜெயராஜை இரவு 7.30 மணியளவில் காவல்நிலையம் அழைத்துச் சென்றிருக்கிறார். இதையறிந்து, ஜூன் 19, 2020 அன்று இரவு 8 மணியளவில் சாத்தான்குளம் காவல்நிலையம் சென்ற பென்னிக்ஸ், 58 வயதான தனது தந்தையை போலீஸார் தாக்குவதைக் கண்டு, அதைத் தடுத்து நிறுத்த முற்பட்டிருக்கிறார்.
சாத்தான்குளம் காவலர்களின் அத்துமீறல்
அப்போது, ஜெயராஜை எஸ்.ஐ பாலகிருஷ்ணன் தாக்கியதை பென்னிக்ஸ் பார்த்திருக்கிறார். அதைத் தடுக்க முயன்ற பென்னிக்ஸை, எஸ்.ஐ பாலகிருஷ்ணன், காவலர் முத்துராஜ் ஆகியோர் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் மரப்பலகை ஒன்றில் உள்ளாடைகளுடன் படுக்க வைத்து, அவர்களின் கைகள், கால்களை இருபுறமும் போலீஸார் பிடித்துக் கொள்ள, அவர்கள் மீதான தாக்குதல் பல மணி நேரத்துக்குத் தொடர்ந்திருக்கிறது. காவல்நிலையத்தின் தரையில் சிதறிய ரத்தத் துளிகளை அவர்களின் துணிகளைக் கொண்டே போலீஸார் சுத்தம் செய்திருக்கிறார்கள்.
பல மணி நேரம் நடந்த இந்த சித்திரவதைக்குப் பிறகு ஜெயராஜ், பென்னிக்ஸ் என இருவரும் அமர்ந்திருந்த இடங்கள் ரத்தத்தால் நிறைந்திருக்கிறது. உடலின் பல இடங்களில் சதை பிய்ந்து ரத்தம் வழிந்த பிறகே தாக்குதலை போலீஸார் நிறுத்தியிருக்கிறார்கள். சாத்தான்குளம் காவல்நிலைய சுவர்கள், கழிப்பறை, போலீஸார் பயன்படுத்திய லத்தி, காவல்நிலைய பொறுப்பாளர் அறை (SHO) போன்ற இடங்களில் அவர்களது இருவரது டி.என்.ஏ இருப்பதை ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனை உறுதிப்படுத்தியிருக்கிறது. ரத்த அழுத்தம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயராஜ், தாக்குதலை நிறுத்தும்படி போலீஸாரிடம் கெஞ்சியிருக்கிறார். ஜூன் 19-ம் தேதி மாலை தொடங்கி, ஜூன் 20 அதிகாலை வரையில் போலீஸார் இருவரையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களில் 18 இடங்களில் கடுமையான காயங்கள் இருந்ததாகக் குறிப்பிட்டார். போலீஸார் தாக்கியதில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடுமையாகக் காயமடைந்தனர். ஆசன வாயில் இருந்து ரத்தம் வழிந்ததில் ஒரு கட்டத்தில் 6 லுங்கிகள் அளவுக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகச் சொல்கிறார் வழக்கறிஞர் மணிமாறன். காயத்துடனே அவர்களை நீதிபதி சரவணன் முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். போலீஸ் தாக்குதலில் படுகாயமடைந்த அவர்கள் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அரசு மருத்துவர் வெண்ணிலா `உடற்தகுதிச் சான்றிதழ்’ அளித்திருந்தார்.
ஜூன் 22, 23 – போலீஸார் தாக்குதலில் படுகாயமடைந்த பென்னிக்ஸ், இரவு 9 மணியளவில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். ஜூன் 23-ம் தேதி அதிகாலை 5.40 மணியளவில் ஜெயராஜூம் உயிரிழந்தார். போலீஸ் காவலில் இருந்த இருவர் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் எஸ்.ஸ்ரீதர், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், எஸ்.ஐ ரகுகணேஷ் காவலர் முத்துக்கிருஷ்ணன், எஸ்.ஐ பால்ராஜ் உள்ளிட்ட 10 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். அவர்களில் எஸ்.ஐ பால்ராஜ் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், 9 காவலர்களுக்கு எதிராக வழக்கு நடந்து வருகிறது. இதில், சாத்தான்குளம் காவல்நிலைய காவலர் ரேவதி அளித்த சாட்சியம் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
குறிப்பு – உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐ தரப்பில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 27-ல் தாக்கல் செய்யப்பட்ட குற்ற பத்திரிகையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
வழக்கின் தற்போதைய நிலை என்ன?
இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி ஜெயராஜ் மனைவி செல்வராணி தாக்கல் செய்திருந்த மனுவைக் கடந்த மார்ச்சில் விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கு விசாரணையை ஆறு மாதத்தில் முடிக்க உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், வழக்கு விசாரணையை முடிக்க கூடுதலாக ஆறு மாதம் அவகாசம் கோரி அமர்வு நீதிமன்றம் சார்பில் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி முரளி சங்கர், இந்த வழக்கின் விசாரணையை முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். வழக்கு விசாரணையை முடிக்க மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மேலும் 6 மாதங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கின் நிலை தொடர்பாக டிசம்பர் 17-ம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருக்கிறார்.