அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதற்கு எதிரான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது.
அ.தி.மு.க பொதுக்குழு!
அ.தி.மு.க பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். அதன் பின்னர் கட்சியில் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் 2017 பிப்ரவரியில் சிறை சென்றார். இதையடுத்து, சென்னையை அடுத்த வானகரத்தில் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ல் கூடிய அ.தி.மு.க செயற்குழு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகளை உருவாக்கி தீர்மானம் இயற்றியது. மேலும், பொதுச்செயலாளருக்கு இருந்த அதிகாரங்கள் இந்த இரண்டு பதவிகளுக்கும் வழங்கப்பட்டது. இந்தத் தீர்மானங்கள் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கும் அளிக்கப்பட்டு, அவற்றை ஏற்றுக்கொள்வதாக 2018 மே மாதத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
அ.தி.மு.க-வில் புதிய பதவிகள் உருவாக்கப்பட்டதை எதிர்த்து திருச்செந்தூரைச் சேர்ந்த அக்கட்சி உறுப்பினர் ராம்குமார் ஆதித்யன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், `அ.தி.மு.க-வில் புதிய பதவிகளை உருவாக்குவதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை. இதுதொடர்பாகக் கட்சி விதிகளில் கொண்டுவரப்பட்டிருந்த திருத்தங்களை ஏற்று தேர்தல் ஆணையம் 2018-ம் ஆண்டு மே 4-ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு கட்சி சார்பில் அக்கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி அளித்த தீர்மானத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்றுகொண்டதில் எவ்வித சட்டவிதிமீறலும் இல்லை. இந்த விவகாரத்தில் கட்சியின் விதிகள் மீறப்பட்டதா… இல்லையா என்பது பற்றி தேர்தல் ஆணையம் ஆராய முடியாது என்று கூறி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர். அதேபோல், ஒரு கட்சியின் உள்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் சிவில் வழக்கு மட்டுமே தொடர முடியும் என்றும் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டனர்.