நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

வெள்ளை அறிக்கை என்றால் என்ன… தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை.. 14 அம்சங்கள்!

தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருக்கிறார். 135 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் 2006-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான 14 ஆண்டுகால பொருளாதார நிலைமை குறித்து விவரிக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளை அறிக்கை என்றால் என்ன?

அரசு தரப்பில் வெளிப்படைத் தன்மையோடு இருப்பதற்கு அடையாளமாக வெள்ளை அறிக்கை கூறப்படுகிறது. ஒரு விவகாரத்தின் தன்மை, அதன் போக்கு உள்ளிட்ட அதுகுறித்து பலதரப்பட்ட தகவல்களையும் உள்ளடக்கியதாக வெள்ளை அறிக்கை இருக்கும். முழுத் தகவல்கள் இடம்பெற்றிருக்கும் வகையில் வடிவகைப்படும் வெள்ளை அறிக்கைகளின் முக்கியமான நோக்கம் வெளிப்படைத் தன்மைதான். நிதிநிலை வெள்ளை அறிக்கை என்பது அரசின் தற்போதைய நிதி நிலைமை, எதிர்காலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் `வெளிப்படையான அறிக்கை’. தமிழகத்தின் நிதிநிலையைப் பற்றிய வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருக்கிறார்.நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

இதற்கு முன்னர் வெள்ளை அறிக்கைகள் எப்போதெல்லாம் வெளியிடப்பட்டன?

இதற்கு முன்பாகக் கடந்த 2001-ல் அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது அப்போதைய நிதியமைச்சர் பொன்னையன் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலின்போது வெள்ளை அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கைகளாக இவை இரண்டே வெளியிடப்பட்டிருக்கின்றன.

அதேநேரம்,1977 டிசம்பர் 29-ல் புயல் வெள்ள நிவாரணங்கள் குறித்த வெள்ளை அறிக்கை முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தபோது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதே எம்.ஜி.ஆர் ஆட்சியில் 1981-ல் உணவுப் பொருட்கள் கையிருப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம் குறித்த வெள்ளை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 1983, 1984-ம் ஆண்டுகளில் வறட்சி குறித்த வெள்ளை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. 1994-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஒருமுறையும், 1996-ல் கருணாநிதி ஆட்சியில் புயல், வெள்ள நிவாரணம் குறித்த வெள்ளை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. 1998 ஏப்ரல் 23-ல் நிகழ்த்தப்பட்ட கோவை குண்டுவெடிப்புத் தாக்குதல் குறித்த வெள்ளை அறிக்கையும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் நடத்தப்பட்டது. 2000-ம் ஆண்டில் கருணாநிதி ஆட்சியின்போது ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அரசுப் பணிகளில் வழங்கிய இடஒதுக்கீடு பற்றிய வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

2021 நிதிநிலை வெள்ளை அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன?

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருக்கும் வெள்ளை அறிக்கையில், 2006-11, 2011-16, 2016-20 என மூன்று ஆட்சிக் காலங்களுக்குட்பட்ட 14 ஆண்டுகால நிதிநிலை பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

வெள்ளை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

 • 2006-2013-க்கு இடையிலான 7 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் தமிழ்நாடு அரசின் வருவாய் உபரி நிலையை எட்டியிருந்தது.
 • 2020 – 21 ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.61,320 கோடி. ஜி.டி.பி-யில் இது 3.16%. நிதிப் பற்றாக்குறை ரூ.92,305 கோடியாகும். ஜி.டி.பி-யில் 4.43%.
 • தமிழ்நாடு அரசு வாங்கியிருக்கும் கடனுக்காக தினசரி ரூ.87.31 கோடி வட்டியாக செலுத்தப்படுகிறது.
 • 2020-21 ஆண்டு இறுதியில் தமிழகத்தின் கடன் தொகை ரூ.5,70,189 கோடியாக இருக்கும்.
 • தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் உள்ளது.
 • 2020-21-ல் டாஸ்மாக் வருமானம் ரூ.33,746.06 கோடியாக இருக்கும்.
 • அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் வாகனங்களால் கிலோ மீட்டருக்கு ரூ.59.15 இழப்பு ஏற்படுகிறது.
 • போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒரு ரூபாய் வருமானம் வந்தால், செலவு ரூ.2.50 ஆக இருக்கிறது.
 • வாகன மோட்டார் வரி 15 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை.
 • உள்ளாட்சித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தாததால் மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய மானியத் தொகை ரூ.2,500 கோடி இழப்பு.
 • தமிழகத்தில் 5 ஆண்டுகளில் ரூ.39,079 கோடி மறைமுக கடனாக எடுக்கப்பட்டுள்ளது.
 • 10 ஆண்டுகளுக்கு முன்பு 11.44% ஆக இருந்த வரி வருவாய் தற்போது 4.4% ஆகக் குறைந்திருக்கிறது.
 • மின்சாரம், போக்குவரத்துக் கழகங்கள் இரண்டும் சேர்த்து மொத்தம் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குக் கடன் வைத்திருக்கின்றன.
 • தமிழக அரசுக்கு சொந்தமாக 29 லட்சம் ஹெக்டேர் நிலம் இருக்கிறது. இதில், சுமார் 2.05 லட்சம் ஹெக்டேர் ஆக்கிரமிப்பில் இருக்கிறது.

Also Read – பெண்களுக்கு இலவசம்; ஆண்களிடம் இரு மடங்கு கட்டணம்… அரசுப் பேருந்து சர்ச்சை!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top