`மகாநடிகன்’ ரஜினியின் அடையாளம்.. முள்ளும் மலரும் ஏன் ஸ்பெஷல் – 3 காரணங்கள்!

இயக்குநர் மகேந்திரன் – பாலு மகேந்திரா – இளையராஜா – ரஜினி என தமிழ் சினிமாவின் பெரும் ஜாம்பாவான்கள் ஒன்றாகப் பயணித்த படம் முள்ளும் மலரும். 1978-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி ரிலீஸான இந்தப் படம் அதுவரை வெளிவந்த படங்களின் எந்தவொரு சாயலும் இன்றி புதுவிதமாக இருந்தது. முள்ளும் மலரும் படம் ஏன் தமிழ் சினிமாவில் அரிதாகப் பிறக்கும் குறிஞ்சி மலர் போன்றதொரு படைப்பு… அதற்கான 3 காரணங்களைப் பற்றிதான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்.

மகேந்திரன் மேஜிக்

முள்ளும் மலரும்
முள்ளும் மலரும்

திரைப்படக் கல்லூரி மாணவராக இருந்தபோதே தமிழ் சினிமாவின் வழக்கமான கிளிஷேக்களைக் கடுமையாக விமர்சித்தவர் இளம் மகேந்திரன். பின்னாட்களில் தங்கப்பதக்கம், ஆடுபுலி ஆட்டம் போன்ற படங்களுக்காக முன்னர், தான் விமர்சித்த பாதையிலேயே பயணிக்க நேர்ந்தது. இதனால், மனதொடிந்துபோன நிலையில், கல்கி இதழின் வெள்ளிவிழா பரிசுப் போட்டியில் பரிசு வென்ற உமா சந்திரனின் முள்ளும் மலரும் கதையைப் படமாக எடுக்க விரும்பினார். ஆனால், அந்தக் கதையின் முக்கியமான அம்சத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு தனது பாணியில் திரைக்கதையை வடிவமைத்தார். இந்தப் படத்தை எந்தவொரு தயாரிப்பாளரும் தயாரிக்க முன்வர மாட்டார்கள் என்று நினைத்திருந்தார். ஆனால், வேணு செட்டியாரும் வி.மோகனும் கதையைப் படமாக்க விருப்பம் தெரிவித்தனர். படத்தின் ஹீரோ ரஜினிதான் என்பதில் உறுதியாக இருந்து, தயாரிப்பாளர்களையும் சம்மதிக்க வைத்தார் மகேந்திரன். அதற்கு முன்னர் எந்தவொரு இயக்குநரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாதவர் மகேந்திரன். அந்த சூழலில் ஒளிப்பதிவாளர் படத்துக்கு மற்றுமொரு முதுகெலும்பாக இருக்க வேண்டியவர். அப்படி இவர் நாடிப்போன ராமச்சந்திரபாபு மற்றும் அசோக் குமார் என இருவருமே மறுத்துவிட்டனர். அதன்பின்னர், கமலின் சிபாரிசின் பேரில் பாலுமகேந்திரா உள்ளே வந்தார்.

மகேந்திரனின் திரைக்கதையில் மேஜிக் செய்திருப்பார். இதற்கு உதாரணமாகப் பல இடங்களைச் சொல்ல முடியும். கையை இழந்து வந்த அண்ணனைப் பார்த்து வள்ளி துடிதுடித்து அழும் நிலையில், ’ஒண்ணும் இல்லைடே’ என்ற ஒரே ஒரு வசனத்தின் மூலம் அந்தக் காட்சியின் அழுத்தத்தைப் புரியவைத்திருப்பார் இயக்குநர். இதுபோல், கிளைமேக்ஸில் தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் தங்கைக்காக இறங்கிவரும் காளி, `இப்பவும் எனக்கு உங்களைப் பிடிக்கலை சார்’ என்று பேசியதெல்லாம் தமிழ் சினிமா அதற்கு முன்னர் கண்டிராத சீன் என்றுதான் சொல்ல வேண்டும். காதல், டூயட், மாஸ் ஃபைட் என்று எந்தவொரு மசலாவும் இல்லாமல் காளி என்கிற கோபக்கார இளைஞனின் வாழ்வையும், சிறுவயது முதலே அநாதைகளாகிவிட்ட நிலையில், தங்கை வள்ளிக்காக அவன் படும் கஷ்டங்களையும் உண்மைக்கு மிக நெருக்கமாக திரைக்கதையாக்கியதில் மகேந்திரன் என்கிற படைப்பாளி மகத்தான வெற்றிபெற்றார். படம் ரிலீஸாகி முதல் இரண்டு வாரங்கள் சுமாராகப் போன நிலையில், அதன்பிறகு பிக்-அப் ஆகி பெரும் வெற்றியைப் பதிவு செய்தது.

`காளி’ ரஜினி

முள்ளும் மலரும்
முள்ளும் மலரும்

ரஜினியோட கரியர்ல அவர் மாஸா எத்தனையோ சம்பவங்கள் பண்ணிருந்தாலும், கிளாஸ்னு ஒரு லிஸ்ட் போட்டா அதுல முள்ளும் மலரும் காளிக்குத்தான் முதல் இடம். இது அவரே ஒப்புக்கொண்ட விஷயம். உனக்குப் பிடித்த படம் எது என்று குருநாதர் கே.பாலச்சந்தர் ஒரு மேடையில் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் முள்ளும் மலரும் என்பதுதான். அந்த அளவுக்கு காளி கேரக்டர் அவருடைய மனதுக்கு நெருக்கமானது. தனது வழக்கமான ஸ்டைல் எதுவுமே இல்லாமல் திரையில் காளியாகவே வாழ்ந்திருப்பார். அந்த கேரக்டரும் அவ்வளவு நுட்பமானது. மேம்போக்காக வடிவமைக்கப்பட்டிருக்காது.

Also Read – மதயானைக்கூட்டம் டு சுழல்… நடிகர் கதிரின் சினிமா பயணம்!

என்ஜினீயர் சரத்பாபுவிடம் பேசும் ரஜினி, பரவாயில்ல சார். உங்க இடத்துல நான் இருந்தாலும் இப்படிதான் நடந்துட்டு இருப்பேன். நாமெல்லாம் கேவலம் மனுஷங்கதானே?’ என்றும்,ரெண்டு காலும் கையும் போனாலும் காளி புழச்சுப்பான். கெட்ட பய சார் இந்த காளி’ என்று பொருமலாக வசனம் பேசும் விண்டேஜ் ரஜினியை இன்றும் அவரது ரசிகர்கள் மிஸ் பண்ணுகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழ் சினிமாவில் விஞ்ச் ஆபரேட்டரின் வாழ்க்கையைப் பற்றி எடுக்கப்பட்ட ஒரே படம் முள்ளும் மலரும்தான். அந்த வகையிலும் காளி கேரக்டர் தமிழ் சினிமா வரலாற்றில் பதிவாகிவிட்டது. காளி கோபக்காரன் தானே தவிர; வறட்டு பிடிவாதக்காரன் கிடையாது. தன்னைப் புரிந்துகொண்டு நெருங்கிப் பழகுவோருக்காக எதையும் செய்யும் இளகிய மனசுக்காரன் காளி என்பதைத் தனது ஒரு பார்வையிலேயே கடத்திவிடுவார் ரஜினி எனும் மகாநடிகன். ரஜினி கேரக்டர் மட்டுமல்லாது, அவரது தங்கையாக வரும் ஷோபா, பஃடாஃபட் ஜெயலட்சுமி, சரத்பாபு என ஒவ்வொரு கேரக்டர்களுமே அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பாலுமகேந்திரா – இளையராஜா

படத்துக்கும் சரி; இயக்குநர் மகேந்திரனுக்கும் சரி மிகப்பெரிய முதுகெலும்பாக நின்றவர் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா. முள்ளும் மலரும் படத்துக்கு முன்பே கோகிலா என்கிற கன்னடப் படம் மூலம் இயக்குநராகிவிட்ட பாலு, தனது நண்பன் கமலுக்காக ஒப்புக்கொண்ட படம் முள்ளும் மலரும். ஆனால், மகேந்திரன் என்கிற இளைஞரின் துடிப்பும் விவேகமும் மிக்க உழைப்பு அவரைக் கவர்ந்தது. இதுபற்றி பாலுமகேந்திரா குறிப்பிடுகையில், `முள்ளும் மலரும் படம் மகேந்திரனை மிக நுட்பமான இயக்குனர் என்று அடையாளம் காட்டியது. சினிமா இயக்கம் என்ற ராஜபாட்டையில் மகேந்திரன் எடுத்துவைத்த முதல் அடியின்போது அவருடன் நான் இருந்தேன் என்பதில் எனக்கு சந்தோஷம் உண்டு’ என்று நெகிழ்ந்திருந்தார் பாலு மகேந்திரா. படத்தின் திரைக்கதை உருவாக்கம், வசனங்கள், கேமரா கோணங்கள், ஆர்டிஸ்ட் செலக்‌ஷன் என எல்லா வகையிலும் மகேந்திரனுடன் நின்றார். அதேபோல், படத்தின் காட்சிகளும் அவ்வளவு ரெஃப்ரெஷ்ஷிங்காக இருக்கும். படம் வெளியாகி ஒளிப்பதிவுக்காக மிகப்பெரிய பாராட்டுகளையும் பெற்றது. படத்தின் இன்னொரு பலம் பின்னணி இசையும் பாடல்களும். வசனங்கள் குறைவு என்பதால், பின்னணி இசைதான், பல முக்கியமான எமோஷன்களை ஆடியன்ஸுக்குக் கடத்தும். அந்த வகையில் படத்தின் பின்னணி இசை பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல், பாடல்களிலும் இசை ராஜ்யம் நடத்தியிருப்பார் இளையராஜா.

முள்ளும் மலரும்
முள்ளும் மலரும்

படத்தின் ரஷ்ஷைப் பார்த்துவிட்டு தயாரிப்பாளர்கள் மகேந்திரனிடம் முரண்பட்டிருக்கிறார்கள். `என்னய்யா வசனங்கள் வர வேண்டிய பல இடங்கள் அமைதியாகக் கடந்து போயிருக்க’ என்று கூறியதோடு கடைசியாக எடுக்கப்பட வேண்டி இருந்த ஒரு சீனுக்கும் பண உதவி செய்ய மறுத்திருக்கிறார்கள். அது, செந்தாழம் பூவில் பாடலுக்கு முன்பாக ஷோபாவும் சரத்பாபுவும் முதன்முதலில் சந்திக்கிற காட்சி உள்பட பாடலின் பல காட்சிகளும் படமாக்கப்பட வேண்டி இருந்தது. அந்த நேரத்தில் கமல் தலையிட்டும் தயாரிப்பாளர்கள் மறுத்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கமலே, தனது சொந்தப் பணத்தில் அந்தக் காட்சிகளை எடுக்க உதவியிருக்கிறார். இதனால்தான், கமல் இல்லையென்றால் முள்ளும் மலரும் படமே உருவாகியிருக்காது என்று மகேந்திரன் நன்றி தெரிவித்திருந்தார். அதேபோல், என்ஜீனியராக சரத்பாபு நடித்திருந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது கமல்தான். ஆனால், கால்ஷீட் பிரச்னையால் அவரால் நடிக்க முடியாமல் போனது.

முள்ளும் மலரும் காளி பேசுன டயலாக்குளிலேயே உங்க ஃபேவரைட் டயலாக் எது… மறக்காம அதை கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top