நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் அனுப்பப்பட்டிருக்கிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை ஆளுநரால் இரண்டாவது முறையாக நிராகரிக்க முடியுமா… அடுத்தது என்ன?
நீட் விலக்கு மசோதா

மருத்துவப் படிப்புகளுக்காகத் தேசிய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையிலான சட்ட முன்வடிவு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்தாண்டு செப்டம்பர் 13-ம் தேதி நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அந்த சட்ட முன்வடிவு மீது எந்தவொரு முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டிருந்த ஆளுநர், 142 நாட்களுக்குப் பிறகு சட்டப்பேரவையின் மறுபரிசீலனைக்காகக் கடந்த 1-ம் தேதி திருப்பி அனுப்பினார். இந்தநிலையில், சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக இரண்டாவது முறையாக அனுப்பப்பட்டிருக்கிறது.
அடுத்தது என்ன?
ஆளுநர் நிச்சயமாக இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அரசியல் சாசனத்தின் 200-வது சட்டப்பிரிவு ஒரு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது பற்றி பேசுகிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதா, அது பண மசோதாவாக இல்லாமல் இருப்பின், விளக்கம் அல்லது மறுபரிசீலனை கோரி ஆளுநர் அதைத் திருப்பி அனுப்பலாம். அதேநேரம், அந்த மசோதா சட்டப்பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் மாற்றங்கள் செய்யப்பட்டோ அல்லது மாற்றங்கள் செய்யப்படாமலோ நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டால், நிச்சயம் ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்கிறது அரசியலமைப்புச் சட்டம்.

நீட் விலக்கு மசோதாவைப் பொறுத்தவரையில், ஆளுநர் அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்ப வேண்டும். மத்திய, மாநிலப் பட்டியல் அல்லாமல் பொதுப்பட்டியலில் இருக்கும் விவகாரத்தைப் பற்றிய மசோதா என்பதால், மத்திய அரசு ஏற்கனவே நிறைவேற்றியிருக்கும் சட்டம் தொடர்புடையது என்பதால் குடியரசுத் தலைவருக்கு ஒப்புதலுக்காக அந்த சட்ட முன்வடிவு அனுப்பப்படும். நீட் தேர்வு என்பது, அகில இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 10D பிரிவின் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு நிறைவேற்றியிருக்கும் சட்ட முன்வடிவு சட்டமாக அமலாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அவசியம். இதுவே, மத்திய, மாநில அரசுகளின் சட்டங்களிடையே இருக்கும் முரணைக் களையும்.
சட்டம் இயற்றுவதில் ஆளுநரின் பங்கு என்ன?
அரசியல் சாசன சட்டப்பிரிவு 200-ன் படி ஆளுநர் ஒரு சட்ட மசோதாவுக்கு அ) ஒப்புதல் அளிக்கலாம், அல்லது ஆ) ஒப்புதலை நிறுத்திவைக்கலாம், அல்லது இ) பேரவையின் மறுபரிசீலனைக்காக அனுப்பலாம், அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பலாம். இந்த முடிவுகளை எடுக்கக் குறிப்பிட்ட கால அளவு எதுவும் அரசியலமைப்புச் சட்டத்தால் நிர்ணயிக்கப்படவில்லை. அதேநேரம், அமைச்சரவையின் ஆலோசனையின்படியே ஆளுநர் நடக்க வேண்டும் என்கிறது அரசியல் சாசனம்.

குடியரசுத் தலைவர் ஒப்புதல்
சட்ட முன்வடிவு ஒன்றை ஆளுநர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பினால், இதில் அவர் முடிவெடுக்கக் குறிப்பிட்ட கால அளவு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. சட்டப்பிரிவு 201-ன் படி, ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒரு மசோதாவை அனுப்பினால், அதற்கு அவர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது ஒப்புதலை நிறுத்தி வைக்கலாம். அதேபோல், அந்த மசோதாவை மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்பும்படி ஆளுநரைப் பணிக்கலாம். அப்படி திருப்பி அனுப்பப்படும் பட்சத்தில் சட்ட முன்வடிவை நிறைவேற்றிய அவை, அதை ஆறு மாத காலத்துக்குள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதில், மாற்றங்களைச் செய்தோ அல்லது மாற்றங்கள் எதுவும் இல்லாமலோ நிறைவேற்றப்பட்டு, மீண்டும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பலாம். அரசியல் சாசனம் கொடுத்துள்ள விளக்கம் இத்தோடு முடிவடைகிறது. அதன்பிறகு, இந்த மசோதா தொடர்பாகக் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க காலக்கெடு எதுவும் விவரிக்கப்படவில்லை. மேலும், குறிப்பிட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்தாலோ அல்லது முடிவு எதுவும் எடுக்காமல் இருந்தாலோ எதுவும் செய்ய முடியாது என்பதுதான் சட்டப்படியான வாய்ப்பு.





Tham gia cộng đồng game thủ tại Go88 để trải nghiệm các trò chơi bài, poker phổ biến nhất hiện nay.
Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.