விஜய்க்கு எந்தப் படத்துல முதல்ல இன்ட்ரோ பாட்டு வைச்சாங்க.. நம்பவே மாட்டீங்க!

ஒரு ஹீரோ மாஸ் ஹீரோவா எப்படி மாறியிருக்கிறார்னு பார்க்கணும்னா அவர் படங்களோட இன்ட்ரோ பாடல்களை நல்லா கவனிச்சாலே போதும். ஒரு ஹீரோவோட வளர்ச்சிக்கு ஏற்ற அவரோட இன்ட்ரோ பாடல்களும் மாறிக்கிட்டே வரும். அப்படி விஜய்யோட இன்ட்ரோ பாடல்களில் நடந்த மேஜிக்ஸைப் பற்றித்தான் பார்க்கப்போறோம்.

விஜய்யின் ஆரம்ப படங்களான நாளைய தீர்ப்பு, செந்தூரப்பாண்டி, ரசிகன் படங்களிலெல்லாம் அவருக்குன்னு இன்ட்ரோ பாடல்களே இல்லை. கதையில் எங்க பாடலுக்கு இடம் இருக்கோ அங்குதான் படத்தோட பாடல்கள் இருக்கும். இதை முதன்முதலில் மாற்றியவர் இயக்குநர் விக்ரமன்தான். அவர்தான் பூவே உனக்காக படத்தில், ’ஓ ப்யாரி பானிபூரி’னு விஜய்க்கு தனி இன்ட்ரோ பாடல் வெச்சிருப்பார். இதுக்கு அப்பறமும் விஜய்யோட அடுத்த பத்து படங்களுக்கு தனியா ஒரு இன்ட்ரோ பாட்டுனு வைக்கவேயில்லை. கே.எஸ்.ரவிக்குமார் இயக்குன ’மின்சாரகண்ணா’ படத்துலதான் ’ஓ அங்கிள், ஓ ஆண்டி’னு ஒரு இன்ட்ரோ பாட்டு வெச்சிருப்பார். விஜய்க்கு நிறைய ஃபேமிலி ஆடியன்ஸ் இருக்கிறதை வெச்சு இந்தப் பாட்டோட வரிகளும் இருக்கும். 

 

 

குஷி படத்துல இருந்து விஜய்யோட இன்ட்ரோ பாடல்களுக்காக மெனக்கெட ஆரம்பிச்சாங்க. குஷி படத்துல ’மேக்கோரீனா’ பாட்டுக்கு பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை ஆடவெச்சிருப்பாங்க. பிரியமானவளே படத்துல வெளிநாட்டுல இருந்து வர கேரக்டரா இருந்தனால வெஸ்டர்ன் ஸ்டைலில் பாட்டு பண்ணி, அமெரிக்கன் கொடி, ப்ளைட் செட்னு வேற கலர் கொடுத்திருப்பாங்க. பத்ரி படத்துலேயும் ’கிங் ஆஃப் சென்னை’ பாட்டுல வெஸ்டர்ன் ஸ்டைலில் செட்டு போட்டு எடுத்திருப்பாங்க. ஷாஜகான் படத்துல ’காதல் ஒரு தனி கட்சி’ பாட்டுல நிறைய க்ரூப் டான்ஸர்களை ஆடவெச்சு கிராண்ட் லுக் கொடுத்திருப்பாங்க. தமிழன்ல ’லாலா லா முடிச்சோம்’, யூத்ல ’ஓல்டு மாடலு’ பாடல்களில் பெரிய செட் போட்டது போலவே திருமலை, கில்லி, மதுர பட ஓப்பனிங் பாடல்களிலும் அந்த பிரமாண்டங்களைக் கொடுத்திருப்பாங்க.

 

 

 

இதுவரைக்கும் வந்த ஓப்பனிங் பாடல்களில் கதைக்கு சம்பந்தமான வரிகள் எழுதுறது; படத்தில் விஜய்யோட கேடக்டர் எப்படி இருக்கும்னு சொல்ற மாதிரி வரிகள் எழுதுறது; சின்ன சின்ன மெசேஜ், தத்துவம்னு போயிட்டு இருந்த பாட்டோட ஸ்டைலை ரசிகர்களுக்காக பாடல்கள் எழுதலாம் என்று மாற்றியது பேரரசுதான். அதுவும் பொதுவாக வரிகள் எழுதாமல் ஒவ்வொரு ரசிகனும் விஜய் நம்மகிட்டதான் இந்தப் பாட்டை பாடுறார்னு அவங்களுக்கு கனெக்ட் கொடுக்குற மாதிரி எழுதுனார். குறிப்பா சொல்லணும்னா திருப்பாச்சி படத்துல, ’நீ எந்த ஊரு’ பாட்டுல, ’உன்னை யாரோ பெத்திருக்க, என்னை யாரோ பெத்திருக்க, ஆனாலும், நீயும் நானும் அண்ணன் தம்பிடா’னு எழுதியிருப்பார். அதுமட்டுமில்லாமல் பாட்டை ஷூட் பண்ணும் போதும் ரியல் ஃபேன்ஸ் கூட்டத்தில் இருந்து விஜய்யை வரவெச்சுனு முழுக்க, முழுக்க ரசிகர்களை மையப்படுத்தி இன்ட்ரோ பாடலை உருவாக்கினார். அடுத்தது சிவகாசி படத்திலும் ’வாடா வாடா தோழா’ என ரசிகர்களுக்காகவே அந்தப் பாட்டையும் எழுதியிருப்பார்.

 

 

 

பேரரசு உருவாக்கிய பாணி ஒர்க் அவுட் ஆனதும் தொடர்ந்து அதையே ஃபாலோ பண்ணிய விஜய், சச்சின் பட பாடலில் மற்ற நடிகர் மீதான போட்டியைப் பற்றி பாடுவது, ’எல்லா புகழும் இறைவனுக்கே’ பாடலில் ரசிகர்களுக்கு மோட்டிவேஷன் கொடுப்பதுனு சில சில எக்ஸ்ட்ரா விஷயங்களையும் சேர்ப்பார். ராப் பாடல்கள் பிரபலமான சமயத்தில் தலைவா படத்தில் ’தமிழ் பசங்க’, கத்தி படத்தில் ’பக்கம் வந்து’னு ராப் பாடல்களில் இன்ட்ரோ பாட்டு வைத்திருப்பார்கள். 

 

 

 

தலைவா படத்திற்குப் பிறகு விஜய்யின் அரசியல் என்ட்ரி பற்றி பேச்சு வர ஆரம்பித்ததும், இன்ட்ரோ பாடல்களில் அது தெரிய ஆரம்பித்தது. புலி படத்தில் ’எங்க மக்கா’ பாடலில், ’எங்க மக்கா ஒண்ணுபட்டா எதிரிக்கெல்லாம் டண்டணக்கா’னு வரிகள் வரும். அப்பறம் கத்தி, ’புத்தி ரெண்டும் உண்டடா; என் பாசமுள்ள தம்பி தம்பி, நம்பி நம்பி வாடா’னு சில வரிகள் வரும். மெர்சல் படத்தோட ஓப்பனிங் பாடல், ’மாச்சோ’ பாடலா இருந்தாலும் வெற்றிமாறன் கேரக்டரின் இன்ட்ரோ பாடலில் ’ஆளப்போறான் தமிழன்’னு வெச்சிருப்பாங்க. இந்த வரிசையில் சில இன்ட்ரோ பாடல்களை வித்தியாசமாகவும் முயற்சி செய்திருக்கிறார்கள். தெறி படத்தில் ’ஜித்து ஜில்லாடி’ பாடலில் விஷூவலில் பிரமாண்டம் இருந்தாலும் பாடலில் போலீஸ்களைப் பற்றி சொல்வதாக இருக்கும். மாஸ்டர் படத்தில் ’வாத்தி கம்மிங்’ பாடலில் வரிகளே இல்லாமல் டான்ஸை மட்டும் வைத்தே இன்ட்ரோ பாடலை உருவாக்கி இருப்பார்கள். 

 

 

 

கதைக்காக, ரசிகர்களுக்காக, மெசேஜ் சொல்ல, அரசியலுக்கு என விஜய்யின் இன்ட்ரோ பாடல்கள் பல கட்டங்கள் மாறியிருக்கிறது. விஜய் இப்போது கையில் எடுத்திருப்பது பாசிட்டிவிட்டி. மாஸ்டரில் குட்டி ஸ்டோரி, பீஸ்ட்டில் ஜாலியோ ஜிம்கானா போன்ற பாடல்கள் இன்ட்ரோ பாடல்களாக இல்லையென்றாலும், ரசிகர்களுக்கு பாசிட்டிவிட்டியை பரப்புகிற மாதிரி பாடல்களை கொடுக்க வேண்டும் என விஜய் நினைக்கிறார்.

[zombify_post]

Also Read – ரோல்மாடல் விஜய் சேதுபதி… எல்லா ஆண்களுக்கும் தொப்பை அழகுதான்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top