எத்தனை தடைகள் வந்தாலும் நம்முடைய இலக்கின் மீதும் மட்டும் கவனமாக இருந்தால் எல்லாமே சாத்தியம்தான் என்பதற்கு ரொம்பவே சிறந்த உதாரணமா இருக்கிறவங்கதான் வைக்கம் விஜயலட்சுமி. தன்னுடைய திருமண வாழ்க்கை, சங்கீதத்தை விட்டு அவரை பிரிக்கிதுனு தெரிஞ்சதும் எனக்கு இசைதான் முக்கியம்; அது மட்டும்தான் என்னைக்குமே எனக்கு துணையா இருந்திருக்குனு சொல்லி அவரு பாட்டுன பாட்டுல வர மாதிரி ‘புதிய உலகை புதிய உலகை தேடிப்போகிறேன் என்னை விடு’னு சொல்லி இப்போ மறுபடியும் தனி மனிஷியா தன் இலக்கை நோக்கி பயணிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அந்த வைக்கம் விஜயலட்சுமி எனும் தன்னம்பிக்கை காரியைப் பற்றித்தான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்.
வைக்கம் விஜயலட்சுமி
கேரளாவில் வைக்கம் என்கிற ஊரில் விஜயதசமி அன்னைக்கு பிறந்தனால லெட்சுமியே நமக்கு பெண்ணா பிறந்திக்கானு அவங்க அப்பா, அம்மா விஜயலட்சுமினு பெயர் வெச்சிருக்காங்க. சின்ன வயசுல இருந்தே பாடல்கள் பாடுறது ரொம்பவே ஆர்வமா இருந்த தன்னோட பொண்ணுக்கு பிரபலமான பாடகர்கள் பாடிய கேசட்களை வாங்கி போட்டுக்காட்டி, அதே மாதிரி பாட வெச்சிருக்காங்க. ஒரு கட்டத்தில் இந்த பொண்ணுக்கு முறையாக சங்கீதத்தைக் கொடுத்தால் அதுவே அவளுக்கு துணையாக இருக்கும்னு நினைச்சவங்க, விஜயலட்சுமியோட ஆறாவது வயசுல அவங்களை பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ்கிட்ட மாணவியாக சேர்த்துவிடுறாங்க. அதிலிருந்து கர்நாடக சங்கீதத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயற்சிக்கிறார். கேரளா, வைக்கம்ல இருந்து நிறைய கலைஞர்கள் வந்திருக்காங்க. அவர்களின் பெயருக்கு முன்னாள் வைக்கம் என்பது தானாகவே சேர்ந்து விடும். அப்படித்தான் விஜயலட்சுமி வைக்கம் விஜயலட்சுமியாக மாறுகிறார்.
கர்நாடக சங்கீதம் கேட்பவர்கள் மத்தியில் தன் பெயரை பதித்த வைக்கம் விஜயலட்சுமிக்கு, சினிமாவில் பாடும் வாய்ப்பு 2013 ஆம் ஆண்டு செல்லுலாய்டு படம் மூலமாக வருகிறது. தன்னுடைய முதல் பாடலுக்காக தனது முதல் விருதை வாங்கியவர் இரண்டாவது மலையாள பாடலுக்காக 5 விருதுகளை வாங்கி கேரளா சினிமா மட்டுமல்லாது தமிழ் சினிமாவிலும் இவரது பெயர் பரிச்சயமாகிறது. தமிழில் பாடுவதற்கு வாய்ப்பும் வருகிறது. முதல் பாடலாக குக்கூ படத்தின் கோடையில மழ போல பாடல் வெளியாகிறது. அந்த கதைக்கும் அந்த சூழலுக்கும் இவரது குரல் பெரிய பாதிப்பை கொடுத்துச்சுனு சொல்லலாம். அடுத்தப் பாடலாக என்னமோ ஏதோ படத்துல புதிய உலகை என்கிற பாடல் இமான் இசையில் வெளியாகிறது. இமான்தான் வைக்கம் விஜயலட்சுமிக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் கொடுத்தார்; வித்தியாச வித்தியாசமான ஜானர்களில் பாடவும் வைத்தார்.
மலையாளத்திலும் தமிழிலும் சில பாடல்களை வைக்கம் விஜயலட்சுமி பாடியப்பிறகு ஒரு, சில சூழல்களுக்கு மட்டும்தான் இவர் வாய்ஸ் சரியாக இருக்கும் என்கிற பேச்சு வந்த சமயத்தில்தான் இமான் இசையில் வெள்ளைக்கார துரை படத்துல காக்கா முட்டை என்கிற ஜாலியான பாடலை பாடுகிறார் வைக்கம் விஜயலட்சுமி. அவர் குரலில் இப்படி ஒரு பாடல் வரும்னு யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்கனு சொல்லலாம். அப்படி ஒரு ஷாக்கை கொடுத்த இமான் – வைக்கம் விஜயலட்சுமி கூட்டணி, அடுத்ததாக ரோமியோ ஜூலியட் படத்துல இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி என்கிற எவர்க்ரீன் மீம் டெம்ப்ளேட் பாட்டை கொடுத்தாங்க. இதே கூட்டணியில்தான் வீரசிவாஜி படத்தோட சொப்பண சுந்தரி நான் தானே என்கிற பாடலும் வந்தது. இந்த பாடலில் பல வெரைட்டியை குரலில் காட்டியிருப்பார்.
Also Read -`எல்லாம் சும்மா தீயா இருக்கும்…’ சிங்கர் சிம்புவின் பெஸ்ட் பாடல்கள்!
இந்தப் பாடல்கள் போக மாஸ் படத்துல பிறவி; பாகுபலி படத்துல யாரு இவன் யாரு இவன்; தெறி படத்துல என் ஜீவன், அறம் படத்துல தொரணம் ஆயிரம்; கனா படத்துல வாயாடி பெத்தப்புள்ள; ஜெய் பீம் படத்துல மண்ணிலே ஈரமுண்டுனு நாம என்னைக்குமே மறக்க முடியாத பாடல்களை பாடியிருக்கார். இந்தப் பாடல்கள் தாண்டி இவங்களுக்கு இந்தப் பாட்டு மிஸ் ஆகிடுச்சேனு பல பேர் நினைக்கிற பாட்டுதான் அசுரன் படத்தோட எள்ளு வய பூக்கலையே. ஏன்னா, ஜீவி பிரகாஷ் அந்தப் பாட்டை இவங்க குரலில்தான் எடுக்கணும்னு தீவிரமா இருந்திருக்கார். ஆனால், ட்ராக்கிற்காக பாடிய சைந்தவி வெர்ஷனே இந்தப் பாடலுக்கு சரியாக இருக்குனு மத்தவங்க சொன்னனால, அப்படியே விட்டுட்டார். அந்தப் பாட்டை வைக்கம் விஜயலட்சுமி வெர்ஷனில் கேட்டிருந்தால், இன்னுமே வேற அனுபவத்தை கொடுத்திருக்கும்.
வைக்கம் விஜயலட்சுமியோட குரலில் ஒருவித சோகமும் வலியும் இருந்தாலும், இவங்க ரொம்பவே ஜாலியான டைப்தான். இவங்களுக்கு ஹூயூமர் சென்ஸும் ஜாஸ்தி; மிமிக்ரியிலும் கலக்குவாங்க. இவங்க சில பேட்டிகளில் சதிலீலாவதி படத்துல கோவை சரளா பேசுற மாதிரியும் பாடகிகள் எஸ்.ஜானகி, வாணி ஸ்ரீ, எல்.ஆர்.ஈஸ்வரி பாடுற மாதிரியும் மிமிக்ரி பண்ணியிருப்பாங்க. அதெல்லாம் யூடியூப்ல இருக்கும் பார்க்காதவங்க கண்டிப்பா பாருங்க. அதே மாதிரி சில இசை கருவிகளும் வாசிக்கிறதுல இவங்க கில்லாடினு சொல்லலாம்.
படங்களில் பாடி கலக்குற மாதிரி மேடைகளிலும் அப்படிப்பட்ட சம்பவங்கள் பண்ணியிருக்காங்க. குறிப்பா சொல்லணும்னா, இமானோட ஒரு கான்செட்டில் றெக்க படத்தோட கண்ணம்மா கண்ணம்மா பாடலை பாடியிருப்பாங்க. படத்துல இவங்க இந்தப் பாட்டை பாடலைனாலும் மேடையில் இந்தப் பாட்டை பாடி அசத்தியிருப்பாங்க. அதே மாதிரி தெறி படத்தோட என் ஜீவன் பாட்டுல இவங்க பாடுன சமஸ்கிருத போர்ஷனை ஹரிஷரன்கூட ஒரு மேடையில் பாடுவாங்க. அதுமட்டுமில்லாமல் ஒரு மேடையில் ஸ்ரேயா கோஷல் முன்னாடி அவங்க பாடுன மலையாள பாடல் ஒன்றை பாடியும் அதை இசைக்கருவியில் வாசிச்சும் காட்டுவாங்க. அதைப் பார்த்து ஸ்ரேயா கோஷலே எமோஷனல் ஆகிடுவாங்க. இப்படி வைக்கம் விஜயலட்சுமி பண்ணுன விஷயங்களை சொல்லிட்டே போகலாம். இவங்க பாடுனதுல உங்களால மறக்க முடியாத பாடல் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க.