21-ம் நூற்றாண்டின் மிகப் பெரிய சூழலியல் சீர்கேட்டை நம் கண்முன்னே நடத்திக்கொண்டிருக்கிறோம். சென்னை மாநகரின் பாதுகாப்பு அரணாகவும், நிலத்தடி நீருக்கான உயிர் ஆதாரமாகவும் இருந்த அந்த நீர்நிலைகளை விஷம் கலந்து கொன்றுவிட்டு அஞ்சலி செலுத்தி வருகிறோம். மரணத்தின் தருவாயில், தாங்கிடவே முடிந்திடாத ஒரு பெரும் வலியில் இன்று தன்னுடைய இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறது, பள்ளிக்கரணை சதுப்பு நிலம். இந்தநிலையில்தான் பள்ளிக்கரணையை சிறப்பிக்கிறேன் என்ற பெயரில் தமிழக அரசு காமெடி செய்து வருகிறது.
சதுப்பு நிலம் என்பது என்ன?
கடலின் உவர் நீரும், ஆறுகளிலிருந்து வரும் நன்னீரும் சந்திக்கும் இடமே சதுப்பு நிலம். ஓர் ஏரியின் உபரி நீரோ, ஓர் ஆற்றின் உபரி நீரோ நீண்டகாலமாக ஒரே இடத்தில் சேருவதாலும் சதுப்பு நிலம் உருவாகும். சதுப்பு நிலங்கள் அடிப்படையில் ஒரு ஸ்பாஞ்ச் போன்று செயல்படும் தன்மை கொண்டவை. அதாவது, தன்னிடம் நீர் பாயும் நேரங்களில், அதை நிலத்தடியில் சேமித்து வைத்து, வறட்சிக் காலங்களில் அந்தத் தண்ணீரை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இப்படி எப்போதும் நீர் இருப்பைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதால், உறுதியான பல்லுயிர்ச்சூழலைக் கொண்டதாகச் சதுப்பு நிலங்கள் இருக்கும். மழைக்காடுகளை எப்படி உலகின் நுரையீரல் என்று சொல்கிறோமோ, அதைப்போல் சதுப்பு நிலங்களை `பூமியின் சிறுநீரகம்’ என்று சொல்கிறார்கள். ஆனால், இன்று சென்னையின் சிறுநீரகம் செயலிழந்த நிலையில் இருக்கிறது. அதற்கு டயாலிசிஸ் செய்ய வேண்டிய அரசும் அழியட்டும் என வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
முன்னர் சுமார் 15,000 ஏக்கர் பரப்பளவிலான சதுப்பு நிலப்பகுதியாக இருந்திருக்கிறது. பல கிளைகள், பல கால்வாய்கள். சுத்தமான நன்னீர், மீன்களில் தொடங்கி, பல நூறு பறவையினங்கள் வரை துள்ளிக் குதித்து ஓடியிருக்கின்றன. நீர்ப்படுகையை ஒட்டிய பகுதிகளில் விவசாயம் நடந்திருக்கிறது. கால்வாய்களில் சிறுசிறு படகுகள் ஓடியிருக்கின்றன. வறட்சிக் காலத்திலும் பத்தடி தோண்டினால், சுத்தமான குடிநீர் கிடைத்திருக்கிறது. இது ஏதோ ஆதாம் – ஏவாள் காலக் கதை அல்ல. சுமார் 40 வருடங்களுக்கு முன்பு வரை பள்ளிக்கரணை மற்றும் சுற்றுவட்டார சதுப்பு நிலக்காடுகளின் நிலை இதுவாகத்தானிருந்தது. ஆனால், இன்று எல்லாம் தலைகீழாகி நிற்கிறது.
குப்பைமேடாகும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்
ஒருநாளில் சென்னைப் பெருநகரில் 5 ஆயிரம் டன்னுக்கும் மேல குப்பைகள் எடுக்கப்படுகின்றன. அவை வடசென்னையின் கொடுங்கையூரிலும், தென்சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அமைந்திருக்கும் கிடங்கிலும் பிரித்துக் கொட்டப்படுகின்றன. சென்னை மாநகராட்சியின் கணக்குப்படி பள்ளிக்கரணையில் ஒரு நாளைக்கு 2,600 டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இவை தவிர, ஒரு நாளைக்கு 380 டன் கட்டட இடிமானக் குப்பைகளும் இங்கு கொட்டப்படுகின்றன. மேலும், ஒரு நாளைக்கு 30 லட்சம் லிட்டர் கழிவு நீரும் பள்ளிக்கரணையில் விடப்படுகிறது. 2002-ல் 140 ஏக்கர் பரப்பளவிலிருந்த குப்பைக்கிடங்கு, 2007-ல் 340 ஏக்கர் பரப்பளவாக உயர்ந்தது. ஒவ்வொரு வருடமும் 10 ஏக்கர் பரப்பளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
ஒருமுறை சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமிடம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பற்றிப் பேசும்போது அவர் சொன்ன தகவல் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தது. “என்னைப் பொறுத்தவரை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்டெடுக்க முடியாது. அது மரணித்துவிட்டது. குறைந்தபட்சம் மிச்சமிருக்கும் ஈர நிலங்களையாவது காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்”என்றார்.
இந்நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் 10.12.2021-ம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் சென்னை, பள்ளிக்கரணையில் 2.5 ஹெக்டேர் நிலப்பரப்பில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சதுப்புநில சூழலியல் பூங்காவைக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். மாநில வனத்துறையும், பள்ளிக்கரணை பாதுகாப்பு ஆணையமும் இன்னும் ஒருபடி மேலேபோய் டிசம்பர் 18 முதல் ஜனவரி 9 வரை பள்ளிக்கரணை மார்கழி திருவிழாவை நடத்த இருக்கிறது. உள்ளே கெட்டுப்போன நிலத்துக்கு கரையோரத்தில் பூங்கா அமைக்கிறோம் என்று சொல்வது எப்படி சரியானதாக இருக்கும்?
வெறும் திருவிழா நடத்துவதோ, பூங்கா அமைப்பதோ ஒரு நிலத்தை எந்தவிதத்திலும் காப்பாற்றி விடாது என்பதே நிதர்சனமான உண்மை. இதை தமிழக அரசு பொறுப்புடன் கையாள்வது நல்லது.
Also Read – சீனிவாச ஐயர் ராமசாமி `சோ’-வாக மாறிய தருணம்! #RememberingCho