நட்சத்திரங்கள் என்பது நிலவு சார் அளவு ஆகும். ராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பு என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். ஒவ்வொரு நட்சத்திரங்களும் 4 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மனிதன் பிறக்கும் பொழுதே அவனுடன் சேர்ந்து அவனுக்குரிய ராசியும் நட்சத்திரங்களும் தோன்றிவிடுகின்றன. வானில் திங்கள் நிற்கும் நாள் மீன் கூட்டம், அப்பொழுதிற்கான நட்சத்திரம் என எடுத்துக்கொள்ளப்படுவது ஐதீகம்.
அதாவது, எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன், ராசிச் சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப்பிரிவில் இருந்தால் அந்த நேரத்திற்குரிய நட்சத்திரமாக ரேவதி எடுத்துக்கொள்ளப்படுகிறது. வாழ்வில் இருள் நீங்கி ஒளிபொருந்திய சூழல் உருவாக தங்களின் நட்சத்திரங்களுக்கு உரிய கோயில்களுக்குச் சென்று வழிப்பட்டு வந்தால் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்பதைப் பற்றிதான் நாம் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.
திருவாதிரை நட்சத்திரம்
27 நட்சத்திரங்களுள் ஆறாவது நட்சத்திரமான இந்நட்சத்திரம், திரு என்று சிறப்புடன் அழைக்கப்படும் இரண்டு நடசத்திரங்களில் முதல் நட்சத்திரமாகும். திருவாதிரை நட்சத்திரமானது, சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகப் பார்க்கப்படுகிறது. இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்திசாலிதனம் மிக்கவர்களாகவும், அதே சமயம், சற்று செலவாளியாகவும் இருப்பார்கள். எடுத்த காரியத்தை இடைவிடாத முயற்சியில் செய்து முடிப்பார்கள். முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்களாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் அதிகமான நாட்டம் உடையவர்களாக இருப்பதனால் நிறைய திருத்தலங்களுக்கு சென்று தரிசனம் பெற்றிருப்பார்கள்.
திருவாதிரை நட்சத்திரத்தின் நட்சத்திர அதிபதியாக ராகுவும், ராசி அதிபதியாக புதனும், நவாம்ச அதிபதியாக முதல் மற்றும் நான்காம் பாதத்தில் குருவும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பாதத்தில் சனியும் வலம் வருகின்றன.இந்த நட்சத்திரக்காரர்கள் துர்க்கை அம்மன் மற்றும் மகாவிஷ்ணுவையும் வணங்கி வழிப்பட்டு வர தீமைகள் விட்டோடி நன்மைகள் உண்டாகும் என்பது நம்பிக்கை. சிதம்பரம், பட்டீஸ்வரம் தலங்களுக்கு சென்று அங்குள்ள சுவாமிகளின் அருளை பெற்று வர நன்மை உண்டாகும்.
இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன், சனி, கேது ஆகிய காலங்கள் சாதகம் அற்றவையாக இருக்கும் எனவே இந்நட்சத்திரக்காரர்கள், ராகு சாந்தி ஹோமம், புத சாந்தி ஹோமம், போன்ற பரிகாரங்களை செய்து வர தீமைகள் அகலும். பண்டைய ஜோதிட நூல்களில், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் எப்பொழுதுமே தாழ்மை அடைய மாட்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கிய பரிகாரங்களாக செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ராகு பகவானுக்கு செவ்வரளிப்பூக்களை சமர்பித்தும், பிரதோஷதன்று சிவபெருமானுக்கு அபிஷேகத்துக்கு பால் தானம் செய்தும் வழிபட்டு வந்தால் பல்வேறு வழிகளில் பல நன்மைகள் ஏற்படும்.
அதிராம்பட்டினம் ஸ்ரீஅபயவரதீஸ்வரர் ஆலயம்
ஸ்ரீஅபய வரதீஸ்வரர் ஆலயமானது, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது வழிபட்டு வணங்க வேண்டிய திருத்தலமாகும். இத்திருத்தலமானது, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம் பகுதியில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தின் அம்மன் தெற்கே கடலைப் பார்த்தபடி அமைந்திருப்பதனால் கடல் பார்த்த அம்மன் என்றும் அழைக்கப்படுகிறார். இந்நட்சத்திரத்தினத்தன்று இத்திருத்தலத்தில் சித்தர்கள் அரூப வடிவில் வழிபாடு செய்வதாக புராண வரலாறு உண்டு.
இத்திருத்தலத்தின் நடையானது, காலை 6.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8.30 மணி வரையிலும் திறக்கப்படுகிறது. இத்தலத்திற்கு ராகு கேது தோஷம் உள்ளவர்களும் சென்று வர நன்மை உண்டாகும். இத்திருத்தலம் திரிநேத்ர சக்தி வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. திருக்கடையூருக்கு அடுத்தபடியாக இத்திருத்தலமே எம பயம் போக்கும் தலமாகப் பார்க்கப்படுகிறது. தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எம பயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள், இங்கு வழிபாடு செய்து வழிப்பட்டு வணங்கினால் நன்மை உண்டாகும். இத்திருதலதில் ஆயுஷ் ஹோமமும், மிருத்யுஞ்ஜய ஹோமமும் திருக்கடையூருக்கு அடுத்தபடியாக அதிகமாக செய்யப்படுகிறது.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த மன்னர் அதிவீரராம பாண்டியன் இத்தலத்தில் உள்ள அம்மனை வழிபட்டு நிறைய திருப்பணிகள் புரிந்தார் என்ற வரலாறு உண்டு. ஆரம்பகாலத்தில் இத்திருத்தல பகுதியானது, திருஆதிரைப்பட்டினமாக இருந்து, பின் அதிவீரராமபட்டினமாக மாறி தற்போது அதிராம்பட்டினமாக மாறியுள்ளது. இங்கு சரணடையும் பக்தர்களை சிவபெருமான் அபயம் தந்து காப்பார் என்பது நம்பிக்கை. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு எத்தகைய தோஷ தடையால் திருமண யோகம் நிகழாமல் இருந்தாலும் இத்திருத்தலத்துக்குச் சென்று வர நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
எப்படிப் போகலாம்?
ஸ்ரீஅபய வரதீஸ்வரர் ஆலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை தாலுகாவில் அதிராம்பட்டினம் பகுதியில் அமைந்துள்ளது. சென்னை, திருச்சி, மன்னார்குடி போன்ற தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து தஞ்சாவூருக்கு பேருந்து வசதிகள் உள்ளன. பல ஊர்களில் இருந்து ரயில் வசதியும் உள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் திருச்சி விமான நிலையமாகும். தஞ்சாவூரில் இருந்து 49 கி.மீ தொலைவில் பட்டுக்கோட்டை இருக்கிறது. பட்டுக்கோட்டையில் இருந்து, 13 கி.மீ தொலைவில் இந்தத் திருத்தலம் இருக்கிறது. திருத்துறைப்பூண்டியில் இருந்து முத்துப்பேட்டை வழியாகவும் இத்திருத்தலத்துக்குச் செல்லலாம்.