ராமதாஸ்

உள்ளாட்சித் தேர்தல்: அ.தி.மு.க-வை உதறிய பா.ம.க – ராமதாஸின் விமர்சனம் ஏன்?

சொந்தக் கட்சிக்காரர்களையே கட்டுப்படுத்த முடியாத எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தால் நம்மால் வெல்ல முடியுமா என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியிருக்கிறார். 9 மாவட்டங்களுக்கு நடக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறி பா.ம.க தனித்துக் களம் காண்கிறது. என்ன நடந்தது?

உள்ளாட்சித் தேர்தல்

தமிழகத்தில் விடுபட்ட காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் சார்பில் விருப்ப மனு விநியோகமும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க கூட்டணியில் இருந்த பா.ம.க கூட்டணியில் இருந்து விலகி தனித்துக் களம் காணுவதாக அறிவித்திருக்கிறது.

பா.ம.க உயர்நிலைக் கூட்டம்

இதுபற்றி அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கை சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பா.ம.க - அ.தி.மு.க கூட்டணி
பா.ம.க – அ.தி.மு.க கூட்டணி

கூட்டத்தின் இறுதியாகப் பேசிய ராமதாஸ், “கடந்த தேர்தல்களில் அ.தி.மு.க கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றத் தவறிவிட்டது. அ.தி.மு.க-வோடு நாம் இப்போது கூட்டணி வைத்தாலும் நமக்கு மரியாதை கிடைக்காது. சரியான தலைமை இல்லாததால், கடந்த தேர்தல்களில் அ.தி.மு.க தொண்டர்கள் நமக்கு முறையாக ஒத்துழைப்புத் தரவில்லை. முன்னதாக 28 மாவட்டங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் பா.ம.க-வால்தான் கூட்டணிக் கட்சிகள் பலனடைந்தன. ஆனால், கூட்டணிக் கட்சிகளால் பா.ம.க-வுக்கு எந்தப் பலனும் இல்லை.

இதனால், வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பல இடங்களில் வென்று நமது பலத்தைக் காட்டுவோம். இதன்மூலம், பா.ம.க-வின் வாக்கு சதவிகிதத்தைப் பலப்படுத்துவோம். கடந்த தேர்தல்களில் அ.தி.மு.க தொண்டர்கள் நமக்கு ஒத்துழைப்புக் கொடுத்திருந்தால், இப்போது வென்றிருக்கும் 4 தொகுதிகளை விட கூடுதலாக வென்றிருக்கலாம்’ என்று பேசியிருக்கிறார்.

என்ன காரணம்?

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் பா.ம.க வலுவாக இருக்கும் வட மாவட்டங்கள். வட மாவட்டங்களில் தனித்துப் போட்டியிட்டு தங்கள் கட்சியின் பலத்தைக் காட்டவே பா.ம.க இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் இணைந்து 20 தொகுதிகளில் களமிறங்கிய பா.ம.க 4 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. வட மாவட்டங்களில் பல தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக, அப்போதே பா.ம.க-வில் சலசலப்பு எழுந்தது. தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு முன்பாக வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தாலும், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அ.தி.மு.க அமைச்சர்கள் தென்மாவட்டங்களில் பிரசாரம் செய்தபோது அதற்கு எதிராகப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

அன்புமணி - ஜி.கே.மணி
அன்புமணி – ஜி.கே.மணி

தேர்தலுக்குப் பின்னர் அ.தி.மு.க – பா.ம.க இடையேயான உறவு சுமூகமாக இல்லை என்கிறார்கள். அதேபோல், இந்தி தினத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு நேரடியாகவே டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். இந்தி திணிப்பை ஏற்க முடியாது என கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வுக்கு எதிராக ராமதாஸ் கருத்துத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில்தான், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை பா.ம.க எடுத்திருக்கிறது.

அ.தி.மு.க ரியாக்‌ஷன்

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கூட்டணியில் இருந்து வெளியேறுவது பா.ம.க-வுக்குத் தான் இழப்பு. இதனால், அ.தி.மு.க-வுக்கு எந்தவொரு இழப்பும் இல்லை. ராமதாஸ், அ.தி.மு.க-வை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.அ.தி.மு.க-வின் உட்கட்சி விவகாரம் குறித்து பேசுவதற்கு யாருக்கும் தகுதி கிடையாது’’ என்று தெரிவித்திருக்கிறார்.

Also Read – ப.சிதம்பரம் – காங்கிரஸ் நிர்வாகி மோதல்; பதவி பறிப்பு… மானாமதுரை கூட்டத்தில் என்ன நடந்தது?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top