பொன்னியின் செல்வன் கதை நாயகர்கள் – `ஆழ்வார்க்கடியான் நம்பி’

பொன்னியின் செல்வன் கேரக்டர்கள் பத்தின பொன்னியின் செல்வன் கதை நாயகர்கள் சீரிஸ்ல நாம அடுத்ததா பார்க்கப்போறது ரொம்பவே முக்கியமான கேரக்டர். பொன்னியின் செல்வனோட கதை எங்கெல்லாம் ஸ்லோ ஆகுற மாதிரி தெரியுதோ… அங்கெல்லாம் திடீர்னு வர்ற திருமலையப்பன் என்கிற ஆழ்வார்க்கடியான் நம்பி. கல்கியோட கற்பனைல உருவான முக்கியமான கேரக்டர்கள்ல நம்பியோட கேரக்டர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது.

யார் இந்த ஆழ்வார்க்கடியான் நம்பி… அவருக்கும் சோழ குலத்துக்கும் என்ன தொடர்பு… நந்தினியைத் தனது சகோதரியாக நினைச்சு வளர்த்த நம்பி, ஒரு கட்டத்துல அவரையே எதிர்க்க என்ன காரணம்… வந்தியத்தேவன் கேரக்டரோட பயணத்துக்கு நம்பி எந்த அளவுக்கு உதவி பண்ணுவார்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க!

டிஸ்கிளைமர் – நண்பர்களே இது கல்கியோட பொன்னியின் செல்வன் நாவலை விமர்சிக்குற அல்லது எடைபோடுற முயற்சி கிடையாது. அந்த நாவலைப் படிக்கிறப்போ நான் உணர்ந்த அல்லது என்னால் புரிந்துகொண்ட அளவில் அதிலிருக்கும் ஒவ்வொரு கேரக்டர்களைப் பத்தியான ஒரு சின்ன உரையாடல்தான். அதேமாதிரி, மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் படம் இந்த நாவலை அடிப்படையாக வைச்சுதான் உருவாக்கப்பட்டிருக்கு. அதனால, இந்த ஸ்டோரில அந்தப் படத்தோட சில ஸ்பாய்லர்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கு. சோ, படத்துல பார்த்துத் தெரிஞ்சுக்கிறேன்னு சொல்றவங்க Skip பண்ணிடுங்க.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

யார் இந்த ஆழ்வார்க்கடியான் நம்பி?!

திருமலை என்கிற இயற்பெயரை உடையவர். திருமால் மீதான பக்தியால் தனது பெயரை ஆழ்வார்க்கடியான் என்று மாற்றிக்கொள்வார். சுந்தரச் சோழரின் நெருங்கிய நண்பரும் சோழ அரசின் முதன்மை அமைச்சருமான அநிருத்த பிரம்மராயரின் முதன்மை ஒற்றன் இந்த நம்பி. பொன்னியின் செல்வன் நாவலின் முதல் பாகத்தின் முதல் அத்தியாயமான ஆடித்திருநாள் அத்தியாயத்திலேயே ஆழ்வார்க்கடியானை கல்கி நமக்கு அறிமுகப்படுத்திவிடுவார். வீரநாராயணபுர ஏரி என்றழைக்கப்படும் வீராணத்துக்கு ஏரிக் கரையில் வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானை முதன்முதலில் பார்க்கையில் சிவன் பெரிய தெய்வமா… திருமால் பெரிய தெய்வமா என்ற வாதத்தில் சிவனடியார்களுடன் மோதிக்கொண்டிருப்பார். முன்குடுமி வைஷ்ணவரான ஆழ்வார்க்கடியானை மெல்லிய தொப்பையோடு குள்ளமான உருவில் நம் முன்னே காட்சிப்படுத்தியிருக்கும் கல்கி, அவர் கையிலே ஒரு குறுந்தடியும் வைத்திருப்பார் என்று அறிமுகப்படுத்துவார்.

ஆழ்வார்க்கடியான் நம்பி
ஆழ்வார்க்கடியான் நம்பி

பேசிக்கொண்டே இருக்கும் அவர், பிறரிடம் பேச்சுக்கொடுத்தே தனக்கு வேண்டிய விஷயங்களைக் கறந்துவிடும் வல்லமை படைத்தவர். இப்படி சோழ நாடு முழுவதும் நடக்கும் காரியங்களையும் அதன் பின்னணியில் இருக்கும் ரகசியங்களையும் லாவகமாக அறிந்துகொண்டு, அதை அமைச்சர் அநிருத்த பிரம்மராயருக்கு அனுப்புவதுதான் இவரது தலையாய பணி. குறிப்பாக வந்தியத் தேவனுடனான இவரது உரையாடல் பல்வேறு சுவாரஸ்யங்களை உள்ளடக்கியதாக இருக்கும். முதல் சந்திப்பிலேயே நந்தினி பற்றிய ரகசியத்தை வந்தியத்தேவனிடம் இவர் சொல்லிவிடுவார். ஆனால், வந்தியத்தேவன் இவரை முழுமையாக நம்பாமல், ஒரு சந்தேக வளையத்திலேயே வைத்திருப்பார்.

ஆதித்த கரிகாலரிடம் இருந்து சுந்தரச் சோழருக்கும் குந்தவைப் பிராட்டியாருக்கும் வந்தியத்தேவன் ஓலை கொண்டு செல்வது, அதிலிருக்கும் விஷயங்களைத் தெரிந்துகொண்டாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளவே மாட்டார். அதேபோல், வந்தியத்தேவன் எப்போதெல்லாம் அபாயத்தில் மாட்டிக் கொள்கிறாரோ… அப்போதெல்லாம் திடீரென தோன்றி அவரைக் காப்பாற்றுவார். பழையாறைக்கு குந்தவையைப் பார்க்கப்போகும் வந்தியத்தேவனை ஒற்றன் என்று கூறி வைத்தியர் மகன் பிணகாபானி வீரர்களிடம் மாட்டிவிடப் போகும்போதும் காப்பாற்றி குந்தவையிடம் அழைத்துப் போவார். அதேபோல், குந்தவை – வந்தியத்தேவன் காதல் ஏற்பட ஒரு முக்கியமான காரணமாகவும் இருப்பார் ஆழ்வார்க்கடியான். மொத்தத்தில் நாரதர் கேரக்டரைப் போலவே இருக்கும் நம்பி செய்கிற கலகங்களும் நன்மையில்தான் முடியும். இலங்கையில் இருக்கும் அருள்மொழிவர்மருக்கு குந்தவை ஓலை அனுப்புவார். அதை எடுத்துக் கொண்டு கோடியக்கரை வழியாக பூங்குழலி உதவியோடு வந்தியத்தேவன் இலங்கை செல்வார். பழையாறையில் திடீரென மாயமாகும் நம்பி, மதுரை, ராமேஸ்வரம் வழியாக வந்தியத்தேவனுக்கு முன்னரே இலங்கை சென்றிருப்பார்.

இலங்கையில் வந்தியத்தேவனுக்கு ஏற்படும் ஆபத்துகளில் இருந்து அவரைக் காப்பாற்றி, அருள்மொழிவர்மரிடம் இவர்தான் சேர்ப்பிப்பார். அதேபோல், ருள்மொழிவர்மர் யானைப் பாகனாக வேஷம் தரித்து எதிரி நாட்டுக்குள் செல்வார். அந்த சீனில் இவர் அருள்மொழிவர்மர்தான் என்பதை அடையாளம் கண்டுகொள்ளும் நம்பி, அதை பூடகமாக வந்தியத்தேவனுக்கு உணர்த்துவார். சிறு வயதில் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட நந்தினியைத் தன் உடன்பிறவா சகோதரியாகவே நினைத்து பாசத்தோடு வளர்ப்பார். ஆனால், ஒரு கட்டத்தில் நந்தினி பெரிய பழுவேட்டரையரை மணந்து கொண்டு பாண்டிய ஆபத்துதவிகளோடு சேர்ந்து சோழ தேசத்துக்கு எதிராக சதியில் ஈடுபடுவார். அதைத் தெரிந்துகொண்ட நம்பி, சோழ தேசத்துக்கே விசுவாசமாக இருப்பார்.

ஆழ்வார்க்கடியான் நம்பி
ஆழ்வார்க்கடியான் நம்பி

அதேபோல், வந்தியத்தேவனைக் காப்பாற்ற இளவரசர் அருள்மொழிவர்மர் செல்கையில், ஊமைப் பெண்ணை அழைத்துவர அநிருத்தர் சொல்லியிருப்பார். அதனால், அருள்மொழிவர்மரைப் பின் தொடராமல் இலங்கையிலேயே தங்கிவிடுவார். அதேபோல், இளவரசர் இறந்துவிட்டார் என்கிற வதந்தி பரவுகையில் அதுகுறித்து குந்தவையிடம் எச்சரித்து, அந்த இடத்துக்கு அவரைக் கூட்டிப் போவது நம்ம நம்பிதான். இப்படி பொன்னியின் செல்வன் கதையின் முக்கியமான திருப்புமுனைகளில் எல்லாம் நம்பியின் பங்களிப்பு ஒரு சிறுதுளியாவது இருக்கும்படி நாவல் அமைக்கப்பட்டிருக்கும். சோழ குல ரகசியங்கள் எல்லாவற்றையும் அறிந்துவைத்திருப்பார் அநிருத்த பிரம்மராயர். அதற்கு முக்கியமான காரணம் அவரது தலையாய ஒற்றனான நம்பிதான்.

கற்பனை கதாபாத்திரமான நம்பி கேரக்டர், பொன்னியின் செல்வன் கதை மாந்தர்களில் முக்கியத்துவமான மற்றும் தனித்துவமான கேரக்டர். மணிரத்னம் எடுத்திருக்கும் பொன்னியின் செல்வனில் நம்பியாக ஜெயராம் நடித்திருக்கிறார்.

சரிங்க, பொன்னியின் செல்வன் நாவல்ல ஆழ்வார்க்கடியான் நம்பி கேரக்டரைப் பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க.. அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.

Also Read – பொன்னியின் செல்வன் கதை நாயகர்கள் – ’பழுவூர் இளையராணி’ நந்தினி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top