மணிக்கு 60-70 கி.மீ. வேகத்துல வந்த மாண்டஸ் புயல் கேரளா போய் சேர்ந்திருச்சு, ஆனா சென்னை மேயர் பிரியா ஃபுட்போட் அடிச்ச அரசியல் புயல் இன்னும் இங்கனகுள்ளேயே அதிவேகத்துல சுத்திட்டு இருக்குது. இப்படி செய்யலாமான்னு ஒரு பக்கம், எப்படி எப்படியெல்லாம் செய்றாங்கன்னு இன்னொருபக்கம்னு ஆதரவும் எதிர்ப்புமா கண்டெண்ட் இல்லாத குறையை ரெண்டு நாளைக்கு தீர்த்து வச்சுருக்கு. மேயரின் ஃபுட்போட் பயணம். நம்ம பங்குக்கு கொஞ்சம் விரிவா அலசுவோம் வாங்க..
1688ல இருந்து சென்னைக்கு மேயர்/கமிஷன்றன்ற பேர்ல 300 வருசமா தலைமைகள் இருந்தாலும், இதுவரை 3 பெண்கள்தான் அந்த பொறுப்புல இருந்திருக்காங்க. இவ்வளவு பேர்லயும் மிக கொறைஞ்ச வயசுல மேயரானது பிரியா ராஜன் தான்.
மிக இளவயதில் இவ்வளவு பெரிய பொறுப்பு ஒருத்தங்களுக்கு கிடைக்கும்போது எதிர்கட்சியில இருந்து மட்டுமில்ல, சொந்த கட்சிக்காரங்களோட சவாலையும் சேர்த்து சமாளிக்கணும். வீட்டுல யாரோ ஒருத்தர் மினிஸ்டராவோ இல்ல எம் எல் ஏவாவ்வோ இருந்திருந்தா அவங்களோட சவால் கொஞ்சம் குறைஞ்சிருக்கும். ஆனா பிரியாவுக்கு அப்படியில்ல. மிகப்பெரிய பொறுப்பு ஒருபக்கம், டாமினேட் செய்ய நினைக்கிற சீனியர் அமைச்சர்கள் ஒருபக்கம்னு ரெண்டு பெரிய சவால் பிரியா முன்னாடி.
மேயர் பிரியா தடுமாறிய தருணங்களும் உண்டு. கொசுவலை வழங்கும் திட்டம் என்பதற்குப் பதிலாக கொசு வழங்கும் திட்டம் என வாய்தவறி கூறியது. அமைச்சர் சேகர் பாபுவுக்கு குடை பிடித்தது, மேயர் என்றும் பாராமல் பொதுவில் அமைச்சர் நேரு பிரியாவை ஒருமையில் அழைத்ததை, உரிமையில் அழைத்தார் என விட்டுக்கொடுக்காமல் பேசியது என மேயரிடமும் குறைகளைச் சொல்ல முடியும்தான்.
ஆனா இதையெல்லாம் தாண்டி, அவங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை இதுவரைக்கும் பிரியா தெறமையா எதிர்பார்ப்புக்கு மேலயே செஞ்சிட்டு வர்றாங்கன்னுதான் சொல்லணும். எந்தளவுக்கு வேலை நல்லா நடந்திருக்குன்னா, வந்தது புயலே இல்ல, சும்மா ஃபேனை 12-ல வச்ச மாதிரி காத்து வேகமா வீசுச்சு அவ்ளோதான்னு எதிர்கட்சிகள் மட்டம் தட்டுற அளவுக்கு. சென்னை வானிலை ஆய்வு மையத்துல பாலச்சந்திரன் மணிக்கொரு முறை அலாரம் வச்சு எச்சரிச்சதை எல்லாம் மறந்துட்டு சொல்ற மேம்போக்கான விமர்சனம் அது.
மேயரா இருக்குற பிரியாவுக்கு சரியா பேச வரலங்கிறது எதிர்கட்சிகளோட மிகப்பெரிய விமர்சனம். அவங்களுக்கு நல்லா பேச சொல்லிக்கொடுத்து, பொங்கலுக்கு சாலமன் பாப்பையா பட்டி மன்றத்துல பேச வைக்க போறாங்களான்னு தெரியல. வேலைதானே முக்கியம். வேலை நடந்ததான்னுதான் பாக்கணும். நடந்திருக்கு. சென்னைல புயலா? அது எதோ ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் வந்திருக்குமாட்டுருக்குன்னு சென்னைவாசிகள் சொல்ற அளவுக்கு 24 மணி நேரத்துக்குள்ளேயே நிலைமையை சரி செஞ்சது பிரியாவோட சாதனை. அவங்க பதவிக்கு வந்த ஒன்பதாவது மாசத்துல புயல் வந்திருக்கு. மழைநீர் வடிகால் பணிகளை உரிய நேரத்தில் முடிக்கச்சொல்லி வெரட்டி வெரட்டி வேலை வாங்கியிருக்காங்க. சரி, புயல் ஏமாத்தினா என்ன, ஆளுங்கட்சியை விமர்சிக்க வேற கண்டெண்ட் கிடைக்காமயா போய்டும்னு காத்திருந்தவங்களுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி கிடைச்ச செய்த்தான் மேயரோட ஃபுட்பொட் பயணம்.
மாண்டஸ் நிவாரணப் பணிகளை வரிசையா ஒவ்வொரு இடமா ஆய்வு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் வர்றார். அவருக்கு முன்னாடி ஒவ்வொரு இடத்துக்கும் போய் தயாரா நிக்கணும்னு நினைக்கிற நம்ம மேயர், முதலமைச்சரோட வாகனத்துக்கு முன்னாடி வர்ற பாதுகாப்பு வாகனத்துல ஏறிக்கிறாங்க. வாங்க போவோம்னு மெதுவா நடந்துவர்ற சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடியவும் வண்டியில ஏத்திக்கிறார். எல்லாம் ஸ்மூத்தா போகுதுன்னு அவங்க நினைச்சிட்டு இருந்தாங்க..
ஆகா மேயர் ஃபுட்போர்ட் அடிக்கிறாங்க, மீடியா மீடியா ஓடியா ஓடியான்னு சொல்லி அது காண்ட்ரவர்ஸி ஆகிடுது. முதலமைச்சரோட ஆய்வு நடக்கும்போது மேயர் அங்க இருக்குறதுதான் சரி, அதனால, கிடைச்ச வாய்பை பயன்படுத்தி சாதுரியமா நடந்துகிட்டாங்க, அவங்களை பாராட்டலேன்னாலும் விமர்சிக்க வேண்டாம்னு ஆளுங்கட்சி தரப்பு உறுதியான சங்கர் சிமெண்ட்டை வச்சு பூசி மெழுக, என்னதான் நைட் ஷிஃப்டா இருந்தாலும் சாயந்திரம் அஞ்சு மணிக்கு வீட்டுக்கு வர்றதில்லையான்ற காமெடி மாதிரி என்னதான் இருந்தாலும் மேயர்ன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள் இப்படி செய்யலாமான்னு விமர்சனமும் வந்தது.
அவங்க ஸ்டைலை பாருங்கய்யா, அவங்க செயலைப் பாருங்கய்யா, அவங்க வெட்கத்தைப் பாருங்கய்யான்னு ஒவ்வொரு காரணமா சொல்லி பிரியா ஆர்மி ஒருபக்கம் பிசியாக லைக் தட்டிவிட்டுட்டு இருக்கு. இதுதான் சமூக நீதியா, இதுதான் பெண்ணியமா, இதுதான் திராவிட மாடலான்னு அண்ணாமலை வரிசையா ட்விட்டரில் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்திருந்தார். போன மாசம் ஃபுல்லா மோடி குஜராத் தேர்தல் பிரசாரத்துல ஃபுட்போட் அடிச்ச வீடியோவை போட்டு அவரை டேக் பண்ணி அவரை ஆஃப் பண்ணி வச்சாங்க.
ஒரு வாதத்துக்கு இப்புடி வச்சுக்குவோம். மேயர் அவங்க கார் பின்னாடி நிக்கிது, அதுக்குள்ள முதலமைச்சரோட கான்வாய் ஸ்டார்ட் ஆகிடுது, என் கார்லதான் ஏறுவேன்னு பிரியா வெய்ட் பண்ணிட்டு இருக்கும்போது, முதலமைச்சர் அங்க ஆய்வை தொடங்கிடுறார். ஆய்வு நடந்திட்டு இருக்கும்போது, எங்கப்பா இங்க இருந்த மேயரை காணோம்னு ஸ்டாலின் அதிகாரிகளை கேட்டிருந்தா என்ன நடந்திருக்கும்?
அவங்க கார்ல்தான் வருவாங்களாம், அதுவும் அவங்களோட கார்லதான் வருவாங்களாம், காருக்காக வெய்ய்ட் பண்றாங்களாம், அதுவரைக்கும் நீங்க ஆய்வை தொடங்காம கொஞ்சநேரம் வெய்ட் ப்ண்ணுவீங்களாம்னு அதிகாரிகளால சொல்லிருக்க முடியுமா? ஒருவேளை அப்படி நடந்திருந்தா, முதல்வரை காக்க வைத்த மேயர், தலைகால் புரியாமல் ஆடுகிறாரா பிரியா ராஜன், விவாதிப்போம் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து இணைந்திருங்கள்னு விவாதத்துக்கு டைட்டில் ரெடி ஆகியிருக்காதா?
ஒரு மாநகராட்சி ஆணையரா வாய்கால்ல இறங்கிக்கூட வேலை செய்ய வேண்டியிருக்கும், வேலைன்னூ வந்துட்டா ப்ரோட்டாகால் பாத்துட்டு இருக்க முடியாது, நமக்கு வேலை முக்கியம் குமாருன்னு கூடவே ஃபுட்போட் அடிச்ச சென்னை கமிஷனரும் விளக்கம் சொல்லி இருக்கார்.
Also Read – அமைச்சர் உதயநிதி… கருணாநிதி, ஸ்டாலினுக்கே கிடைக்காத வாய்ப்பு!
என்னாப்பா, ஜால்ரா சத்தம் ஹெவியா கேக்குதுன்னு நினைக்காதீங்க. எல்லாத்துக்கும் நொட்டை சொல்லிகிட்டு இருக்க கூடுதுன்னு சொல்றோம். இதே சென்னையில 2015 செம்பரம்பாக்கம் ஏரியை நட்ட நடுராத்திரியில தொறந்து அம்போன்னு விட்டதெல்லாம் கண்ணு முன்னால் வந்து போகணுமா இல்லையா? அப்பவும்கூட சென்னையில் மேயர் இருந்தார், அது அரசியல், நாம அதுக்குள்ள போகவேணாம்.